/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
8 பவுனுடன் ஓடிய வாலிபர் போலீசில் ஒப்படைத்த மக்கள்
/
8 பவுனுடன் ஓடிய வாலிபர் போலீசில் ஒப்படைத்த மக்கள்
ADDED : ஜன 24, 2024 09:58 AM
சேலம்: சேலம் அருகே, பாலீஸ் போட்டு தருவதாக கூறி, எட்டு பவுன் நகையுடன் ஓட்டம் பிடித்தவரை பொதுமக்கள் பிடித்து, தர்மஅடி கொடுத்து போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்தனர்.
சேலம், இரும்பாலை அருகே தும்பாதுலிபட்டியை சேர்ந்த மணி மனைவி கண்ணகி, 50. இவர் வீட்டுக்கு நேற்று முன்தினம் காலை, 8:30 மணிக்கு வந்த மர்ம நபர், தங்க நகைகளை பாலீஸ் போட்டு தருவதாக தெரிவித்துள்ளார்.
அதை நம்பிய கண்ணகி, எட்டு பவுன் செயினை கொடுத்துள்ளார். செயினில் உள்ள அழுக்குகளை சோப்பு கொண்டு வெளியேற்றிய மர்ம நபர், பாலீஸ் போட சுடு தண்ணீர் வைத்து தரும்படி கேட்டுள்ளார். சுடு தண்ணீர் வைக்க முடியாது என கண்ணகி தெரிவிக்கவே, மர்ம நபருக்கும், அவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், மர்ம நபர் நகையுடன் ஓட்டம் பிடித்தார்.
கண்ணகி கூச்சலிட்டபடி, அந்த நபரை துரத்தி உள்ளார். இதை பார்த்த அப்பகுதி மக்கள் மர்ம நபரை பிடித்து, அங்குள்ள மரத்தில் கட்டி வைத்து கவனிப்பு செய்தனர். இரும்பாலை போலீசார், மர்ம நபரை மீட்டு வந்து விசாரணை நடத்தினர்.
அதில் சூரமங்கலம், காமராஜர் காலனியை சேர்ந்த கார்த்திக், 41, என்பதும், இவர் சேலத்தின் பல்வேறு இடங்களில், வீடுகளில் தனியாக இருக்கும் பெண்களிடம் நகையை பாலீஸ் போடுவதாக கூறி, மோசடியில் ஈடுபட்டு வந்ததும் தெரிய வந்தது. அவரை கைது செய்த போலீசார், அவரிடமிருந்து எட்டு பவுன் செயினை பறிமுதல் செய்தனர்.

