/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
பாதயாத்திரை பக்தர்கள் இளைப்பாற பந்தல்
/
பாதயாத்திரை பக்தர்கள் இளைப்பாற பந்தல்
ADDED : ஜன 19, 2024 04:55 AM

சிவகங்கை: பழநி தைப்பூச விழாவிற்கு காவடி ஏந்தி செல்லும் பக்தர்கள் ஓய்வெடுக்க ஏதுவாக சிங்கம்புணரியில் நிழல் பந்தல் அமைத்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம், பழநியில் தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் ஜன.,25 தைப்பூச விழா நடைபெறும். இந்த விழாவை காண சிவகங்கை, ராமநாதபுரம், புதுக்கோட்டை மாவட்டத்தில் இருந்து பக்தர்கள் காவடி ஏந்தி செல்லும் பாத யாத்திரையை துவக்கியுள்ளனர்.
குறிப்பாக சிவகங்கை மாவட்டத்தில் செட்டிநாடு பகுதியில் உள்ள நகரத்தார், நாட்டார்கள் ஆயிரக்கணக்கானோர் காவடி ஏந்தி, சிங்கம்புணரி, நத்தம் வழியாக பழநிக்கு பாத யாத்திரை செல்ல உள்ளனர். குறிப்பாக குன்றக்குடி சண்முக நாத பெருமான் கோயிலில் அனைத்து நகரத்தார்களும் ஒன்று கூடி 'வைரவேல்' ஏந்தியும், காவடி எடுத்தும் பாதயாத்திரை செல்ல உள்ளனர். வெளிநாடுகளில் வணிகம், வேலை செய்து வரும் சிவகங்கை மாவட்ட செட்டிநாடு பகுதியை சேர்ந்த நகரத்தார், நாட்டார் பிரிவை சேர்ந்த இளைஞர்கள் பலர், விரதம் இருந்து பழநிக்கு காவடி ஏந்தி, பாத யாத்திரை செல்கின்றனர்.
பாதயாத்திரை செல்லும் பக்தர்களின் வசதிக்காகவும், அவர்கள் சிறிது நேரம் ஓய்வெடுத்து செல்ல, பொதுநலன் கொண்ட சிலர் சிங்கம்புணரியில் தற்காலிக நிழல் பந்தல் அமைத்து, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் பணியை மேற்கொள்ள உள்ளனர்.

