/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
திருப்புவனத்தில் மூன்றாவது நாளாக நீதிபதி விசாரணை
/
திருப்புவனத்தில் மூன்றாவது நாளாக நீதிபதி விசாரணை
ADDED : ஜூலை 05, 2025 02:43 AM

திருப்புவனம்:மடப்புரத்தில் கோயில் காவலாளி அஜித்குமார் கொல்லப்பட்ட வழக்கில் திருப்புவனத்தில் மதுரை மாவட்ட நீதிபதி ஜான் சுந்தர்லால் விசாரணை செய்து வருகிறார். மூன்றாவது நாளான நேற்று பலர் விசாரிக்கப்பட்டனர்.
அவர்கள் கூறியதாவது:
அஜித்குமாரின் தாய் மாலதி கூறுகையில், ஜூன் 27ம் தேதி வெள்ளிக்கிழமை மதியத்திலிருந்து எனது மகனை காணவில்லை. திருப்புவனம் போலீஸ் ஸ்டேஷனில் பார்த்த போது மேல் சட்டை இல்லாமல் இருந்தவனிடம் நகையை எடுத்திருந்தால் கொடுத்து விடு என்று கூறியதற்கு அம்மா, நான் எடுக்கவில்லை, என்றார், போலீசார் விசாரணை செய்துவிட்டு அனுப்பி விடுவோம், என்றனர்.
திருப்புவனம் அரசு மருத்துவமனை டாக்டர் கார்த்திகேயன் கூறுகையில், ஜூன் 28 மாலை 6:35 மணிக்கு போலீசார் ஆட்டோவில் அஜித்குமாரை துாக்கி வந்தனர்.
பரிசோதனை செய்ததில் அவர் உயிரிழந்தது தெரிய வந்தது. பிரேத பரிசோதனை செய்ய வேண்டுமா என கேட்ட போது சிவகங்கை கொண்டு செல்கிறோம் என போலீசார் துாக்கி கொண்டு சென்று விட்டனர். விசாரணையிலும் தெரிவித்துள்ளேன், என்றார்
ஆட்டோ டிரைவர் அய்யனார் கூறுகையில், மடப்புரத்தில் ஆட்டோ ஓட்டி வருகிறேன். ஜூன் 28 மாலை 6:00 மணிக்கு மயக்க நிலையில் ஒருவரை எனது ஆட்டோவில் ஏற்றி திருப்புவனம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றோம்.
மருத்துவமனையில் இறக்கி விட்டு சிறிது நேரம் காத்திருந்தேன். போலீசார் என் பெயர், போன் நம்பர் வாங்கி விட்டு அனுப்பி விட்டனர், என்றார்.
அஜீத் தரப்பு வழக்கறிஞர் கணேஷ்குமார் கூறுகையில், ஜூன் 27ம் தேதி புகார் கொடுத்தது முதல் நிதிதா, இன்ஸ்பெக்டர், டி.எஸ்.பி., உள்ளிட்ட 10 பேரின் அலைபேசி எண்கள் பதிவு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. நியாயம் கிடைக்கும் என நம்புகிறோம். அஜித்குமார் வழக்கு தொடர்பான தகவல்கள் எதுவாக இருந்தாலும் என்னிடம் அல்லது நீதிபதியிடம் தரலாம், என்றார்.