/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
நகரத்தாரின் பாரம்பரிய செவ்வாய் பொங்கல் விழா
/
நகரத்தாரின் பாரம்பரிய செவ்வாய் பொங்கல் விழா
ADDED : ஜன 24, 2024 01:41 AM

சிவகங்கை:சிவகங்கை மாவட்டம், பாகனேரி, நாட்டரசன்கோட்டையில் நகரத்தார் பாரம்பரிய செவ்வாய் பொங்கல் விழா நடந்தது.
ஆண்டுதோறும் தை பிறந்து மாட்டு பொங்கலுக்கு அடுத்து வரும் செவ்வாயன்று நகரத்தார்கள் சார்பில் செவ்வாய் பொங்கல் விழா நடைபெறும். சிவகங்கை மாவட்டம், பாகனேரி மற்றும் நாட்டரசன்கோட்டையில் நேற்று செவ்வாய் பொங்கல் விழா நடைபெற்றது.
பாகனேரி புல்வநாயகி அம்மன் கோயில் முன் 506 பானைகளில் நகரத்தார் வெண் பொங்கல் வைத்தனர்.
அமெரிக்கா, சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளில் வசிக்கும் நகரத்தார் ஒன்று கூடினர். 506 புள்ளிகளின் குடும்ப தலைவர் பெயர்களை எழுதி போட்டு ஆடிபூச மடத்தில் ஓலை கொட்டானில் குடவோலை முறையில் குலுக்கி எடுத்தனர்.
இதில், முதல் பெயர் வந்த வயிரவன்கோயில் பி.என்., சுந்தரம் குடும்பத்தினர் பொங்கல் வைத்தனர். காரியதரிசி ஏஎன்.சுப்பிரமணியன் தலைமையில் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
மதுரை நகரத்தார் சங்க தலைவர் வயிரவன் கூறியதாவது: கடந்த 200 ஆண்டுகளுக்கும் மேலாக நகரத்தார் அனைவரும் இங்கு ஒற்றுமையாக கூடி வெண் பொங்கல் வைத்து புல்வநாயகிக்கு படைப்போம். இந்த விழாவுடன் வரன் பார்க்கும் நிகழ்ச்சியும் நடத்துவர்.
பொங்கலை முன்னிட்டு உறவினர்களை சந்தித்து ஆசி பெறும் நோக்கில் ஆண்டு தோறும் ஒற்றுமையாக நகரத்தார் இங்கு கூடி பொங்கல் வைத்து வழிபடுவர், என்றார்.
நாட்டரசன்கோட்டை: சிவகங்கை தேவஸ்தானத்திற்கு உட்பட்ட கண்ணுடைய நாயகி அம்மன் கோயில் முன் செவ்வாய் பொங்கலை முன்னிட்டு நேற்று மாலை 5:00 மணிக்கு நகரத்தார் 922 பானைகளில் ஒரே மாதிரியாக பொங்கல் வைத்தனர்.
வெள்ளி குடத்தில் புள்ளி வாரியாக (குடும்ப தலைவர்) பெயர்களை சீட்டில் எழுதி போட்டு குலுக்கி எடுப்பர்.
அதில் முதல் பெயராக மா.கண.மாணிக்கம் செட்டி கண்ணப்பன் குடும்பத்தார் பெயர் வந்தது. அவர்கள் முதன்முதலாக மண் பானையில் பொங்கல் வைத்தனர்.
அதனை தொடர்ந்து 921 குடும்பத்தாரும் பொங்கல் வைத்தனர்.
அனைத்து நகரத்தாரும் கண்ணுடைய நாயகி அம்மனை வேண்டி பால் ஊற்றி வழிபடுவர். இங்கு முற்றிலும் வெண் பொங்கல் மட்டுமே வைக்கப்படும்.
மாலை 6:20 மணிக்கு கண்ணுடைய நாயகி அம்மன் தங்க ரதத்தில் கோயில் பிரகாரத்தில் வலம் வந்தார். இரவு 9:00 மணிக்கு சாமி ஆடி கருப்பர் கோயிலில் இருந்து அழைத்து வந்தனர்.
முதல் பானை முன் கிடா வெட்டி வழிபடுவர். அதற்கு பின்னரே அனைத்து பொங்கல் பானைகளையும் வீட்டிற்கு எடுத்து செல்வர்.
தேவஸ்தான மேலாளர் இளங்கோ, கோயில் கண்காணிப்பாளர் சரவணகணேசன், கவுரவ கண்காணிப்பாளர் முருகப்பன் மற்றும் காரியதரிசி கண.மெ., வகையறாவினர் விழா ஏற்பாடுகளை செய்தனர்.
நகரத்தாரின் ஒற்றுமை விழா
ஆர்.மீனாட்சி, நாட்டரசன்கோட்டை: இங்கு ஆண்டு தோறும் ஒற்றுமையை நிரூபிக்கும் விதத்தில் நகரத்தார் அனைவரும் ஒன்று சேர்ந்து பொங்கல் வைத்து வழிபடுவோம்.
இதை நாங்கள் ஒரு புனிதமாக கருதுகிறோம். வெளியூர், நாடுகளில் வசித்தாலும் தவறாது அனைத்து குடும்பத்தினரும் வந்திருந்து, ஒன்று சேர்ந்து வழிபடுகிறோம் என்றார்.

