/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
வழக்கை ரத்து செய்யக்கோரி கிராம மக்கள் போராட்டம்
/
வழக்கை ரத்து செய்யக்கோரி கிராம மக்கள் போராட்டம்
ADDED : ஜன 24, 2024 05:33 AM

இளையான்குடி, : அரியாண்டிபுரம் கிராம இளைஞர்கள் 2 பேர் மீது பொதுப்பணித்துறை அதிகாரிகள் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதனை ரத்து செய்ய கோரி இளையான்குடி தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டும், மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
இளையான்குடி அருகே உள்ள அரணையூர் கண்மாய்க்கு கொங்கம்பட்டி வழியாக கால்வாய் செல்கிறது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு வைகை ஆற்றிலிருந்து இக்கண்மாய்க்கு இந்த கால்வாய் வழியாக தண்ணீர் கொண்டு செல்லப்பட்டது.கொங்கம்பட்டி அருகே அரியாண்டிபுரம் கிராம கண்மாய்க்கு செல்லும் கால்வாயும் உள்ள நிலையில் அரியாண்டிபுரத்திற்கும் பொதுப்பணித்துறையினர் தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்க வேண்டுமென அக்கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
இந்நிலையில் கொங்கம்பட்டி கால்வாயிலிருந்து வெளியேறிய தண்ணீர் அப்பகுதியில் உள்ள வீடுகளை சூழ்ந்த நிலையில் அரியாண்டிபுரம் கால்வாயை வெட்டி தண்ணீரை திருப்பி விட்டனர். இது குறித்து நீர் வளத்துறை உதவி பொறியாளர் செந்தில்குமார் அரசு அனுமதி இல்லாமல் கால்வாயை வெட்டி விட்டதாக அரியாண்டிபுரம் கிராம இளைஞர்களான தமிழரசன்,ஜெய்சங்கர் மற்றும் சிலர் மீது இளையான்குடி போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அரியாண்டிபுரம் கிராம மக்கள் கொங்கம்பட்டி பகுதியில் உள்ளவர்கள் தான் அப்பகுதியில் தண்ணீர் தேங்கியதையடுத்து கால்வாயை வெட்டி தண்ணீரை திருப்பி விட்டுள்ளனர், ஆகவே இந்த பொய் வழக்கை ரத்து செய்ய வேண்டுமென்று தாலுகா அலுவலகம் முன் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.பின்னர் இவர்களுடன் சாலைக்கிராமம் இன்ஸ்பெக்டர் லோகநாதன் பேச்சுவார்த்தை நடத்தினார். பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததை தொடர்ந்து கிராம மக்கள் கண்மாய்க்கரை பஸ்ஸ்டாப் அருகே பரமக்குடி ரோட்டில் மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர். போலீசார் அவர்களை மீண்டும் தாலுகா அலுவலகத்திற்கு அழைத்து வந்து பேச்சு வார்த்தை நடத்தினர்.கிராம மக்கள் இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி தாசில்தார் கோபிநாத்,இன்ஸ்பெக்டர் லோகநாதன் ஆகியோரிடம் மனு கொடுத்த பிறகு கலைந்து சென்றனர்.

