/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
தேக்கடி கார் பார்க்கிங் சர்வே பணியை தடுத்து நிறுத்தக் கோரி ஆர்ப்பாட்டம்: கேரளாவிற்குள் நுழைய முயன்ற விவசாயிகள் நிறுத்தம்
/
தேக்கடி கார் பார்க்கிங் சர்வே பணியை தடுத்து நிறுத்தக் கோரி ஆர்ப்பாட்டம்: கேரளாவிற்குள் நுழைய முயன்ற விவசாயிகள் நிறுத்தம்
தேக்கடி கார் பார்க்கிங் சர்வே பணியை தடுத்து நிறுத்தக் கோரி ஆர்ப்பாட்டம்: கேரளாவிற்குள் நுழைய முயன்ற விவசாயிகள் நிறுத்தம்
தேக்கடி கார் பார்க்கிங் சர்வே பணியை தடுத்து நிறுத்தக் கோரி ஆர்ப்பாட்டம்: கேரளாவிற்குள் நுழைய முயன்ற விவசாயிகள் நிறுத்தம்
ADDED : ஜன 22, 2024 11:23 PM

கூடலுார் : தேக்கடி ஆனைவச்சால் கார் பார்க்கிங்கில் நடக்கும் சர்வே பணியை உடனடியாக நிறுத்த வலியுறுத்தி கேரளாவிற்குள் நுழைய முயன்ற தமிழக விவசாயிகளை லோயர்கேம்பில் போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
முல்லைப்பெரியாறு அணை நீர்ப்பிடிப்பு பகுதியான ஆனைவச்சாலில் 2014ல் கேரள வனத்துறை சார்பில் தற்காலிக கார் பார்க்கிங் அமைக்க திட்டமிடப்பட்டு பணி நடந்தது. பின் ரூ.4 கோடியில் நிரந்தர கார் பார்க்கிங் அமைக்கும் பணியை அம்மாநில வனத்துறை துவக்கியது. இதற்கு தமிழக நீர்வளத்துறையினர் எதிர்ப்பு தெரிவித்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இவ்வழக்கின் அடிப்படையில் ஆனைவச்சால் கார் பார்க்கிங் பகுதியை சர்வே செய்து அறிக்கை அளிக்க இந்திய நில அளவியல் துறைக்கு டிச., 23ல் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி இந்திய நில அளவியல் துறை உதவி இயக்குனர்கள் ராஜசேகரன், சரவணன் தலைமையில் குழுவினர் ஜன., 14ல் சர்வே பணியை துவக்கினர். தொடர்ந்து அணைப்பகுதி, தேக்கடி ஷட்டர் பகுதி, ஆனைவச்சால் நீர்த்தேக்கப் பகுதிகளை சர்வே செய்து வருகின்றனர்.
முல்லைப் பெரியாறு அணையில் 152 அடி நீர் தேங்கும் போது தண்ணீர் எங்கெல்லாம் தேங்கி நிற்கிறதோ அப்பகுதி முழுவதும் தமிழக நீர் வளத்துறைக்கு சொந்தமான நீர்த்தேக்க பகுதியாகும். 999 ஆண்டு கால ஒப்பந்தத்தில் 8539 ஏக்கர் பரப்பளவு நீர்த்தேக்கம் ஆகும். ஒரு ஏக்கருக்கு ரூ.30 வீதம் 8539 ஏக்கருக்கு ஒவ்வொரு ஆண்டும் தமிழக அரசு கேரளாவுக்கு குத்தகை செலுத்தி வருகிறது. இச்சூழ்நிலையில் நீர்த்தேக்கப்பகுதியான ஆனைவச்சாலில் கார் பார்க்கிங் அமைத்து கேரளா சொந்தம் கொண்டாட முயற்சிக்கிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் தற்போது நடக்கும் சர்வே பணியை உடனடியாக நிறுத்த வலியுறுத்தியும் பெரியாறு வைகை பாசன விவசாய சங்க ஒருங்கிணைப்பாளர் அன்வர் பாலசிங்கம் தலைமையில் ஆனைவச்சாலுக்கு செல்ல முயன்றனர். தமிழக போலீசார் அவர்களை லோயர்கேம்ப் பென்னிகுவிக் மணிமண்டபம் அருகே தடுத்தனர். பின் விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
விவசாய சங்க தலைவர் பொன்காட்சிக் கண்ணன், கவுரவ தலைவர் சலேத்து, மதுரை மாவட்ட செயலாளர் காராமணி, நிர்வாகிகள் முருகானந்தம், கருப்பசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர். லோயர்கேம்ப் எல்லையில் போலீசார் அதிக அளவில் குவிக்கப்பட்டிருந்தனர்.

