/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
பணி முடிந்தும் பஸ் ஸ்டாண்ட் பயன்பாட்டிற்கு வராததால் சிரமம்: தேவாரம் பேரூராட்சிக்கு மாதந்தோறும் பல ஆயிரம் வருவாய் இழப்பு
/
பணி முடிந்தும் பஸ் ஸ்டாண்ட் பயன்பாட்டிற்கு வராததால் சிரமம்: தேவாரம் பேரூராட்சிக்கு மாதந்தோறும் பல ஆயிரம் வருவாய் இழப்பு
பணி முடிந்தும் பஸ் ஸ்டாண்ட் பயன்பாட்டிற்கு வராததால் சிரமம்: தேவாரம் பேரூராட்சிக்கு மாதந்தோறும் பல ஆயிரம் வருவாய் இழப்பு
பணி முடிந்தும் பஸ் ஸ்டாண்ட் பயன்பாட்டிற்கு வராததால் சிரமம்: தேவாரம் பேரூராட்சிக்கு மாதந்தோறும் பல ஆயிரம் வருவாய் இழப்பு
ADDED : பிப் 11, 2024 01:34 AM

போடி: தேவாரத்தில் ரூ. 2 கோடி செலவில் வணிக வளாகங்களுடன் கூடிய பஸ்ஸ்டாண்ட் கட்டி முடித்து ஆறு மாதங்களாகியும் பயன்பாட்டிற்கு வரதததால் பஸ்சிற்காக பயணிகள் மழை, வெயிலில் காத்திருக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.
போடி, கம்பம் செல்லும் மெயின் ரோட்டில் தேவாரம் பஸ்ஸ்டாண்ட் அமைந்துள்ளது. தேவாரத்தில் இருந்து கம்பம், போடி, உத்தமபாளையம் மார்க்கமாக 5 பஸ்களும், திருச்சி ,தஞ்சாவூர், திருப்பூர், கோவை, மதுரை, மேட்டுப்பாளையம் மார்க்கமாக தினமும் 20 பஸ்களும் சென்று வருகின்றன. தேவாரம் பேரூராட்சி நிர்வாகம் பழமையான பஸ் ஸ்டாண்ட் கட்டடங்களை அகற்றி விட்டு அங்கு கலைஞர் நகர் புறம் மேம்பாடு திட்டத்தின் கீழ் ரூ. 2 கோடி செலவில் 18 கடைகள், முன்பதிவு மையம், சுகாதார வளாகங்கம் உள்ளிட்ட வசதிகளுடன் புதிய பஸ் ஸ்டாண்ட் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. கட்டி முடிக்கப்பட்டு ஆறு மாதங்கள் ஆகியும் திறப்பு விழா காணாமல் பயன்பாட்டிற்கு வராமல் காட்சி பொருளாக உள்ளது. புதிய பஸ் ஸ்டாண்ட் பயன்பாட்டிற்கு வராததாலும் திறந்த வெளியாக உள்ளதால் தனியார் வாகனங்கள் நிறுத்தும் இடமாகவும், குடிமகன்களின் கூடாரமாகவும், இரவில் சமூக விரோத செயல்கள் அரங்கேறும் பகுதியாக மாறி வருகிறது. பஸ் ஸ்டாண்டிற்க்கு பஸ்கள் அனுமதிக்காததால் பயணிகள் அரை கி.மீ., தூரம் நடந்து தேவாரம் போலீஸ் ஸ்டேஷன் அருகே சென்று பஸ்சில் பயணிக்க வேண்டியது உள்ளது. பஸ்கள் வரும் வரை மழை, வெயிலில் காத்திருந்து பயணிகள் சிரமம் அடைந்து வருகின்றனர். கட்டி முடிக்கப்பட்ட பஸ் ஸ்டாண்டை பயன்பாட்டிற்கு கொண்டு வர பேரூராட்சி கவுன்சிலர்கள், பொதுமக்கள் பேரூராட்சி நிர்வாகத்திடம் வலியுறுத்தியும் நடவடிக்கை இல்லை.
இதுகுறித்து மக்கள் கூறியதாவது:
அரை கி.மீ., நடக்கும் அவலம்
அப்பாஸ், தேவாரம்: பஸ்ஸ்டாண்ட் கட்டு முடிக்கப்பட்டு பல மாதங்களாகியும் திறக்கப்படாமல் உள்ளது. பஸ்கள் நிறுத்த வேண்டிய இடத்தில் தனியார் டூவீலர், கார், வேன் உள்ளிட்ட வாகனங்கள் நிறுத்தும் இடமாக மாறி உள்ளன. வெளியூரில் இருந்து தேவாரம் வரும் பஸ்கள், தேவாரத்தில் இருந்து வெளியூர் செல்லும் பஸ்கள் அனைத்தும் தேவாரம் போடி செல்லும் ரோடு போலீஸ் ஸ்டேஷன் அருகே பஸ்கள் நின்று பயணிகளை இறக்கி, ஏற்றியும் செல்கின்றன.
இதனால் தேவாரத்தில் உள்ள பயணிகள் பஸ்கள் நிற்கும் இடத்திற்கு அரை கி.மீ., தூரம் நடந்து செல்ல வேண்டியுள்ளது. இதுபோல வெளியூரில் இருந்து தேவாரம் வரும் பயணிகள் அரை கி.மீ., தூரம் நடந்து செல்ல வேண்டியது உள்ளது. நடக்க முடியாத நிலையில் உள்ளவர்கள் ஆட்டோ, கார்களில் செல்ல வேண்டியுள்ளது. பயணிகள் பயன் பெறும் வகையில் பஸ்ஸ்டாண்டை விரைவில் திறந்து பயன்பாட்டிற்கு கொண்டு வர பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பேரூராட்சிக்கு வருவாய் இழப்பு
மணிகண்டன், தேவாரம்: புது பஸ் ஸ்டாண்ட் பயன்பாட்டிற்கு வராததால் இங்கு கட்டப்பட்ட கடைகள் பயன்பாடு இன்றி பூட்டி கிடக்கிறது. இதனால் தேவாரம் பேரூராட்சிக்கு மாதந்தோறும் ரூ. பல ஆயிரம் வருவாய் இழப்பு ஏற்பட்டு வருகிறது. பஸ்கள் உள்ளே வராததால் பாதைகள் திறந்த வெளியாக உள்ளதால் தேவையற்ற வாகனங்கள், தனி நபர்கள் உள்ளே வந்து விரோத செயல்கள் நடக்கும் இடமாக மாறி உள்ளது. இதே நிலை இன்னும் சில மாதங்கள் தொடர்ந்தால் கட்டடங்கள் சேதப்படுத்தி விடுவார்கள்.
தற்போது பஸ் ஏறும் இடத்தில் பயணிகளுக்கான நிழற்குடை, சுகாதார வளாகம் வசதி இன்றி உள்ளது. பயணிகள் சிரமம் அடைந்து வருகின்றனர். பேரூராட்சிக்கு வருமானத்தை பெருக்கவும், பயணிகள், பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பஸ்ஸ்டாண்டை விரைவில் பயன்பாட்டி கொண்டு வர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சின்னச்சாமி பாண்டியன், பேரூராட்சி செயல் அலுவலர், தேவாரம்: தேவாரம் பஸ் நிலைய கட்டுமான பணி நிறைவு பெற்றது. திறப்பு விழா குறித்த நாளை உதவி இயக்குனர் ஆலோசனை நடத்த உள்ளார். உத்தமபாளையம், பழனிச்செட்டிபட்டியில் கட்டப்பட்டுள்ள கட்டடங்களுடன் தேவாரம் பஸ் ஸ்டாண்ட் திறப்பு விழா நடத்தி விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படடும் என்றார்.
தீர்வு
பயணிகள் சிரமம் குறைக்க வேண்டும்
பல லட்சம் செலவில் கட்டியுள்ள பஸ் ஸ்டாண்டை உடனே பயன்பாட்டிற்கு கொண்டு வந்து பயணிகள் சிரமம் போக்க வேண்டும். கடைகள் ஏலம் விட்டு பேரூராட்சிக்கு வருவாய் ஏற்படுத்தவும், ஆரம்பத்திலேயே பஸ் ஸ்டாண்டிற்குள் தனிநபர் வாகனங்கள் நிறுத்துவதற்கு தடை விதிக்க வேண்டும். இரவில் போலீஸ் ரோந்து சென்று சமூக விரோத செயல்களை தடுக்க வேண்டும்.

