/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
கமிஷனர் திட்டியதால் பெண் பணியாளர் தற்கொலை முயற்சி
/
கமிஷனர் திட்டியதால் பெண் பணியாளர் தற்கொலை முயற்சி
ADDED : பிப் 02, 2024 12:16 AM

-பெரியகுளம்: பெரியகுளம் நகராட்சி தற்காலிக பணியாளர் ஜெயராணி 33,யை நகராட்சி கமிஷனர் மீனா அவதூறாக பேசியதாக கூறி பணியாளர் விஷமருந்து சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்று சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பெரியகுளம் அருகே தாமரைக்குளத்தைச் சேர்ந்தவர் ஜெயராணி 33. தூய்மை இந்தியா திட்டத்தில் ஒப்பந்ததாரரிடம் விழிப்புணர்வு பணியாளராக பெரியகுளம் நகராட்சியில் பணியாற்றி வந்தார். இவருடன் 6 பேர் இதே பணியை மேற்கொண்டு வருகின்றனர். நகராட்சி பகுதி வார்டுகளில் குப்பை கொட்டும் பொதுமக்களிடம் சென்று மக்கும், மக்காத குப்பை என தரம்பிரித்து வழங்க விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியை ஜெயராணி செய்தார்.
இவர் கமிஷனர் மீனா, இரு நாட்களாக தன்னை திட்டியதாக கூறி நேற்று நகராட்சி அலுவலகத்திலேயே விஷ மருந்து சாப்பிட்டார். சிறிது நேரத்தில் மயங்கினார். அருகில் இருந்த சக பணியாளர்கள் ஜெயராணியை பெரியகுளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்தனர்.
ஜெயராணி கூறுகையில்: கமிஷனர் மீனா தன்னை அவதூறாக திட்டியதாகவும் மனவேதனையில் விஷ மருந்து சாப்பிட்டதாக தெரிவித்தார். கமிஷனர் மீனா கூறுகையில்: தூய்மைப்பணி குறித்து விழிப்புணர்வு பணியை தொய்வில்லாமல் செய்யுங்கள் என வழக்கமாக பணியாளர்களுக்கு ஆலோசனை கூறினேன். அவரை திட்டவில்லை என்றார்.

