/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
கோடை சாகுபடியை பாதிப்பு இன்றி தொடரலாம் என நம்பிக்கை; குளம், கண்மாய் நீர் இருப்பால் விவசாயிகள் மகிழ்ச்சி
/
கோடை சாகுபடியை பாதிப்பு இன்றி தொடரலாம் என நம்பிக்கை; குளம், கண்மாய் நீர் இருப்பால் விவசாயிகள் மகிழ்ச்சி
கோடை சாகுபடியை பாதிப்பு இன்றி தொடரலாம் என நம்பிக்கை; குளம், கண்மாய் நீர் இருப்பால் விவசாயிகள் மகிழ்ச்சி
கோடை சாகுபடியை பாதிப்பு இன்றி தொடரலாம் என நம்பிக்கை; குளம், கண்மாய் நீர் இருப்பால் விவசாயிகள் மகிழ்ச்சி
ADDED : பிப் 24, 2024 05:15 AM
ஆண்டிபட்டி : ஆண்டிபட்டி பகுதியில் கடந்த ஆண்டு பெய்த மழையால் நிலத்தடி நீர் உயர்ந்துள்ளதால் கோடை விவசாயத்தை பாதிப்பு இன்றி தொடர முடியும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து விவசாயிகள் இறவை பாசன நிலங்களை கோடை சாகுபடிக்கு தயார்படுத்தி வருகின்றனர்.
ஆண்டிபட்டி பகுதியில் கடந்த ஆண்டு பெய்த தென்மேற்கு, வடகிழக்கு பருவ மழையில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் மானாவாரியாக சிறுதானியம், பயறு வகைகள், எண்ணெய் வித்துக்கள் பயிரிட்டு அறுவடையை முடித்துள்ளனர். நூற்றுக்கணக்கான ஏக்கர் இறவை பாசன நிலங்களில் நெல், கரும்பு, வாழை, காய்கறிகள் பயிரிட்டுள்ளனர்.
வைகை ஆற்றின் கரையோர கிராமங்களான குன்னூர், அப்படித்தேவன்பட்டி முதல் மூணாண்டிபட்டி, புள்ளி மான்கோம்பை வரை உள்ள பகுதிகளில் தற்போது நெல் அறுவடை நடைபெறுகிறது. ஏற்கனவே அறுவடை முடிந்த நிலங்களில் விவசாயிகள் கோடை உழவு செய்து இயற்கை உரமிட்டு நிலங்களை பண்படுத்தி வருகின்றனர். இறவை பாசன நிலங்களில் ஏற்கனவே பயிரிட்ட வகைகளை தவிர்த்து மாற்றுப் பயிர் சாகுபடிக்கு திட்டமிட்டுள்ளனர்.
காய்கறி சாகுபடி
விவசாயிகள் கூறியதாவது: கடந்த பல ஆண்டுக்கு பின் தற்போது ஆண்டிபட்டி பகுதியில் நிலத்தடி நீர் இருப்பு திருப்திகரமாக உள்ளது. வைகை அணையில் இருந்து ஆற்றின் வழியாக அதிக நாட்கள் நீர் சென்றதால் இப்பகுதியில் நிலத்தடி நீர் ஆதாரம் மேம்பட்டுள்ளது. குளங்கள், கண்மாய்களிலும் மழையால் தேங்கிய நீர் இன்னும் இருப்பில் உள்ளது.
ஆண்டிபட்டி பகுதி காய்கறி விளைச்சலுக்கு ஏற்றதாக இருப்பதால் கோடை காலத்தில் தக்காளி, வெங்காயம், வெண்டை, கத்தரி, காலிபிளவர், பச்சைமிளகாய் உள்ளிட்டவைகளை அதிகம் சாகுபடி செய்யும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
ஒரே பயிரை பல விவசாயிகள் தேர்வு செய்வதால் விளைச்சல் அதிகமாகி விலை குறைகிறது.
இந்த பாதிப்பை தவிர்க்க ஒருங்கிணைந்த திட்டம் மூலம் விவசாயிகளை பல்வேறு பயிர்கள் சாகுபடிக்கு விவசாயத் துறையினர் அறிவுறுத்த வேண்டும். ஏற்கனவே பூக்கள், முருங்கை சாகுபடி செய்துள்ள விவசாயிகளுக்கும் கோடையில் இருப்பில் உள்ள நீர் கை கொடுக்கும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. இதனால் இந்த ஆண்டு கோடைகால விவசாயம் முழுவீச்சில் துவங்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது என்றனர்.

