ADDED : ஜன 21, 2024 05:09 AM
போடி: போடி- - மூணாறு செல்லும் முந்தல் மெயின் ரோட்டில் மின் விளக்கு வசதி இன்றி இருளில் மூழ்கியுள்ளது.
போடி - மூணாறு வழித்தடத்தில் அமைந்துள்ளது முந்தல் மெயின் ரோடு. தேனியில் இருந்து 22 கி.மீ., சமவெளியில் சென்றால் முந்தல் என்ற இடத்தை அடையலாம். இங்கிருந்து போடிமெட்டு, குரங்கணி மற்றும் கேரளா பகுதியான மூணாறு, டாப் ஸ்டேசன் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லலாம். இப்பகுதியை காண்பதற்காக சுற்றுலா பயணிகளும் வருகை தந்து இயற்கை அழகை ரசித்து செல்கின்றனர். கேரளா பகுதியில் உள்ள தோட்டங்களில் வேலை செய்வதற்கு கூலித் தொழிலாளர்களும் சென்று வருகின்றனர்.தினம் தோறும் இப்பாதையில் 800 க்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன.
இந்நிலையில் முந்தல் செல்லும் மெயின் ரோட்டின் மின் கம்பங்கள் இருந்தும் விளக்கு வசதி இல்லாததால் இருளில் மூழ்கி காணப்படுகின்றன. இதனால் வாகனங்களில் செல்லும் போது எதிரே வரும் வாகனங்களின் விளக்குகள் எதிரொலிப்பதால் வாகனங்களை ஓட்டி செல்வதில் சிரமம் ஏற்படுகிறது. டூவீலர் உள்ளிட்ட வாகனங்களில் செல்லும் போது எதிரே வரும் வாகனங்கள் தெரியாமல் அச்சத்துடன் ஓட்டி செல்வதோடு, அடிக்கடி வாகன விபத்துகள் ஏற்படுகின்றன.
பெரிய அளவில் அசம்பாவிதம் ஏற்படும் முன் போடி மூணாறு செல்லும் முந்தல் மெயின் ரோட்டில் விளக்கு வசதி, ஒளிரும் ஸ்டிக்கர் ஒட்டிட தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

