வாலிபர் தற்கொலை
தேனி: அரப்படித்தேவன்பட்டி கிழக்குத்தெரு யோகபிரபு 24. லாரி கிளீனராக வேலை செய்கிறார். இவர் ஜனவரி 15ல் வயிற்று வலி அதிகமாக உள்ளதாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல, தந்தை கருப்பசாமியை அழைத்துள்ளார். அதற்கு தந்தை மாலை செல்லலாம் என்றார். இதனால் கோபித்துக் கொண்ட யோகபிரபு வயிற்று வலி தாங்க முடியாமல் வீட்டில் இருந்த விஷம் குடித்தார். தேனி அரசு மருத்துவக்கல்லுாரியில் சிகிச்சையில் இருந்தவர் ஜன., 17 ல் இறந்துவிட்டார். அல்லிநகரம் போலீசார் விசாரிக்கிறார்.
விரக்தியில் தற்கொலை
தேனி: வருஷநாடு காளியம்மன் கோயில் தெரு பிரபு 33. இவரது மனைவி சசி 30. இருவருக்கும் 14 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. பிரித்தி என்ற மகள் உள்ளார். கணவன் மனைவி கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், மகள் பிரித்தி, தனது பாட்டி தமிழ்செல்வியிடம் வளர்ந்து வருகிறார். இந்நிலையில் துபாயில் பணிபுரிந்த பிரபு, வீட்டிற்கு வந்து அதிகளவில் மதுகுடித்துவிட்டு விரக்தியில் பேசியுள்ளார். இதனால் பேத்தியை அழைத்துக் கொண்ட பாட்டி தமிழ்செல்வி, அருகில் உள்ள வீட்டில் துாங்கியுள்ளார். இதனால் பிரபு, துாக்கிட்டு தற்கொலை செய்தார். வருஷநாடு போலீசார் விசாரிக்கின்றனர்.
காவலாளி மரணம்
தேனி: அல்லிநகரம் பாண்டிகோயில் தெரு ஆறுமுகம் 65. தேனி கூட்டுறவு சொசைட்டி அலுவலகத்தில் இரவு காவலாளியாக பணிபரிந்தார். ஜனவரி 17 இரவு மாரமடைபால் பலியானார். இறந்தவரின் உடல் தேனி அரசு மருத்துவக்கல்லுாரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. தேனி போலீசார் விசாரிக்கின்றனர்.
உயிரிழந்த கூலித்தொழிலாளி
தேனி: உத்தமபாளையம் ராயப்பன்பட்டி லுார்து நகர் ஆலமரத் தெருவை சேர்ந்தவர் முருகன் 55. கூலி வேலை செய்தார். 8 ஆண்டுகளுக்கு முன் விபத்தில் தலையில் காயம் ஏற்பட்டு சிகிச்சை பெற்றுவந்தார். தொடர்ச்சியாக மருந்து மாத்திரைகள் சாப்பிட்டு வந்தார். சரியான நேரத்திற்கு மருந்து மாத்திரைகள் எடுக்காமல் இருந்தால் மன நல பாதிப்பு, நிதானம் இல்லாத நிலைக்கு செல்லக்கூடிய பாதிப்பு ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் பொங்கல் அன்று சின்னமனுாரில் உள்ள தனது சகோதரி வீட்டிற்கு சென்றவர், மீண்டும் வீட்டிற்கு செல்வதாக கூறிவிட்டு சென்றவர், ஜனவரி 17 காலை 8:30 மணிக்கு சின்னமனுார் சிவகாமியம்மன் கோயில் குளக்கரையில் உறங்கிய நிலையில் இறந்து கிடந்துள்ளார். இதுகுறித்து பலரும் அவரது புகைப்படத்தை எடுத்து வாட்ஸ் ஆப் குழுக்களில் தகவல் அளித்துள்ளார். பின் உறவினர்கள் போலீசில் தகவல் அளித்து உடலை வாங்கிச் சென்றனர். சின்னமனுார் போலீசார் கூலித் தொழிலாளி இறப்பு குறித்து விசாரிக்கின்றனர்.
டூவீலர் மோதி முதியவர் பலி
பெரியகுளம்: லட்சுமிபுரம் வல்லபாய் படேல் தெருவை சேர்ந்தவர் கோபால்சாமி 70. கோயிலில் அர்ச்சகருக்கு உதவியாளராக பணி செய்துவிட்டு பூங்கா அருகே நடந்து சென்றார். அப்போது, பின்னால் வந்த டூ வீலர் கோபால்சாமி மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்தார். தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சை கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் இறந்ததாக தெரிவித்தார். தென்கரை போலீசார் விபத்து ஏற்படுத்திய அதே ஊரைச் சேர்ந்த சீனிவாசனிடம் விசாரித்து வருகின்றனர்.
தற்கொலை
ஆண்டிபட்டி: கன்னிப்பபபிள்ளைபட்டி ராஜாமணி 48. இவருக்கு மனைவி, இரு பிள்ளைகள் உள்ளனர். மது பழக்கம் இருந்ததால் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். இரு நாட்களுக்கு முன் வயிற்று வலி அதிகமானதால் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மனைவி வேல்மணி புகாரில் ராஜதானி போலீசார் விசாரிக்கின்றனர்.
* உத்தமபாளையம்: க.புதுப்பட்டி விட்டி சன்னாசி கவுடர் தெருவை சேர்ந்தவர் சுரேஷ் 48, இவரது மனைவி லாவண்யா 45, இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். கடந்தாண்டு லாவண்யாவின் தாய் இறந்ததில் இருந்து லாவண்யா மன அமைதி இல்லாமல் இருந்துள்ளார். மனநல சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் நேற்று வீட்டில் கணவர் இல்லாத சமயத்தில், வீட்டிற்கு மேல்மாடியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். உத்தமபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
399 மது பாட்டில்கள் பறிமுதல்
ஆண்டிபட்டி: க.விலக்கு பகுதியில் அனுமதி இன்றி மது பாட்டில்கள் விற்கப்படுவதாக கிடைத்த தகவலை தொடர்ந்து போலீசார் சோதனை மேற்கொண்டனர். க.விலக்கு வைகை அணை ரோட்டில் மூக்கையா 65, வீட்டின் எதிர்புறம் உள்ள மண் குவியல் அருகே மது பாட்டில்களை பதுக்கி வைத்திருந்தார். க.விலக்கு எஸ்.ஐ.,பிரபா மற்றும் போலீசார் சோதனை மேற்கொண்டு பதுக்கி வைக்கப்பட்டிருந்த 399 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
பெண்ணிடம் தவறாக நடக்க
முயன்றவர்கள் மீது வழக்கு
தேவதானப்பட்டி: ஜி. கல்லுப்பட்டி வினோபாநகர் காலனியைச் சேர்ந்தவர் முருகலட்சுமி 47. சில ஆண்டுகளுக்கு முன்பு இவரது கணவர் செல்வம் இறந்து விட்டார். இதனால் கூலி வேலை செய்து பிழைப்பு நடத்தி வருகிறார். இவரது மகன் சிவசுப்பிரமணி கரூருக்கு வேலைக்கு சென்று விட்டு ஊருக்கு வந்துள்ளார். அப்போது ஜி.கல்லுப்பட்டியைச் சேர்ந்த ரிஷாத்ராஜ் 24.கெங்குவார்பட்டியைச் சேர்ந்த இவரது நண்பர்கள் கவுதம், விக்னேஷ் மூவரும் சிவசுப்பிரமணியிடம் பணம் கேட்டு அடித்து காயப்படுத்தினர். சிவசுப்பிரமணி பெரியகுளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார் . சம்பவம் குறித்து தேவதானப்பட்டி போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. இந்நிலையில் வீட்டில் தனியாக இருந்த முருக லட்சுமியிடம், கவுதம், விக்னேஷ் ஆகியோர் புகாரை வாபஸ் பெற வேண்டும் என முருகலட்சுமியை அடித்து தவறாக நடக்க முயற்சித்துள்ளனர். பெட்ரோல் குண்டு வீசி கொலை செய்துவிடுவதாக மிரட்டியுள்ளனர். முருகலட்சுமி சத்தம் கேட்டு அருகேயுள்ள சரவணன், முனியம்மாள், கிருஷ்ணவேணி ஆகியோர் காப்பாற்றினர். தேவதானப்பட்டி எஸ்.ஐ., தேவராஜ், கவுதம், விக்னேஷை தேடி வருகிறார்.
பொங்கல் விழாவில் தகராறு
ஆண்டிபட்டி: ராஜதானி அருகே ராயவேலூரைச் சேர்ந்தவர் லீலாவதி 48, குடும்பத்துடன் கிராமத்தில் கூலி வேலை செய்து வருகிறார். இரு நாட்களுக்கு முன் பொங்கல் விழா நடந்துள்ளது. விழாவில் அப்பகுதியைச் சேர்ந்த தங்கத்துரை, சௌந்தரம், சுரேஷ் மற்றும் தங்கப்பெருமாள் ஆகியோர் உரியடி போட்டி நடத்திக் கொண்டிருந்தனர். அப்போது ராயவேலூர் சேர்ந்த சேட்டுராம் மகன்கள் மாயக்காளை, லோகேஷ்வரன் ஆகியோர் முறை இல்லாமல் உரியடி போட்டி நடத்துவதாக தகராறு செய்து அசிங்கமாக பேசி உள்ளனர். பாலக்கோம்பையைச்சேர்ந்த குமரவேல் மற்றும் சிலரை கூட்டி வந்து கம்பு, கற்களால் தாக்கினர். அங்கிருந்த ராய வேலூர் சேர்ந்த பெருமாள், பாண்டியராஜ் ஆகியோர் சண்டையை விலக்கிவிட்டுள்ளனர். கல், கம்பால் தாக்கியதில் லீலாவதி, தங்கதுரை, சௌந்தரம், சுரேஷ், தங்கப்பெருமாள் ஆகியோர் காயம் அடைந்தனர். லீலாவதி புகாரியில் ராஜதானி எஸ்.ஐ., வெங்கடேசன் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

