பணம் பறித்தவர் கைது
தேனி: அல்லிநகரம் வீரப்ப அய்யனார் கோயில் தெரு சரவணக்குமார் 23. இவர் ரத்தினாநகர் சுக்குவாடன்பட்டி பிரிவு அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த சருத்துப்பட்டி வடக்குத்தெரு விஜய் 35. நான் இந்த ஏரியாவின் ரவுடி என கூறி சரவணக்குமாரை வழிமறித்து, 400 ரூபாயை பறித்து கத்தியால் கொலை மிரட்டல் விடுத்தார். அல்லிநகரம் எஸ்.ஐ., அழகுராஜா அவரை கை கைது செய்தனர்.
திருட முயன்றவர் கைது
தேனி: பூதிப்புரம் மஞ்சிநாயக்கன்பட்டி காளியம்மன் கோயில் தெரு ராஜேஷ் 40. இவர் முத்துத்தேவன்பட்டி பெட்ரோல் பங்க் அருகே உள்ள தனது வீட்டின் கதவை திறந்து வைத்து மார்ச் 23 இரவு துாங்கிக் கொண்டிருந்தார். அப்போது வீட்டின் உள்ளே சத்தம் கேட்டுள்ளது. எழுந்து பார்க்கும் போது, பிரிட்ஜில் இருந்து பொருட்கள் கீழே விழுந்து இருந்தது. வீட்டில் அத்துமீறி நுழைந்த பெரியகுளம் எண்டப்புளி புதுப்பட்டி ஆர்.டி.யு., காலனியை சேர்ந்த ரெங்கநாதன் அலைபேசியை திருட முயற்சித்தார். ராஜேஷ், ரெங்கநாதனை பிடித்து, பழனிசெட்டிபட்டி போலீசில் ஒப்படைத்தார். போலீசார் அவரை கைது செய்தனர்.
ஆடு திருடிய பெண்கள் உள்பட 5 பேர் மீது வழக்கு
தேவதானப்பட்டி: -பெரியகுளம் அருகே குள்ளப்புரம் நடுத்தெருவைச் சேர்ந்த பாண்டியன் மனைவி பழனியம்மாள் 65. இவரது தென்னந்தோப்பில் ஆடுகள் வளர்த்து வருகிறார். தோட்டத்தில் இருந்து சாப்பிட வீட்டுக்கு சென்றார். தோட்டத்தில் யாரும் இல்லை என அறிந்து இதே பகுதியைச் சேர்ந்த கண்ணன், மேல்மங்கலம் சவுராஷ்டிரா தெருவைச் சேர்ந்த முனீஸ்வரனுக்கு அலைபேசியில் தகவல் கூறினார். முனீஸ்வரன் மனைவி பிரியா, கண்ணன் மனைவி ரேவதி இருவரும் தோட்டத்தில் மேய்ந்து கொண்டிருந்த ஆட்டினை திருடி தூக்கி சென்றனர். குள்ளப்புரத்தை முருகனிடம் திருடிய ஆட்டினை கொடுத்தனர். இதனையறிந்த பழனியம்மாள் தனது ஆட்டினை ஒப்படைக்குமாறு கேட்டதற்கு கண்ணன் உட்பட அனைவரும் சேர்ந்து பழனியம்மாளை தாக்கினர். புகாரில் ஜெயமங்கலம் போலீசார் 5 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றார்.
பா.ஜ., பெண் நிர்வாகிகள் கைது
கம்பம்: கம்பம் பஸ் ஸ்டாண்ட் அருகில் உள்ள அரசு மதுபான கடை முன்பு முதல்வர் ஸ்டாலின் படத்தை ஒட்ட முயன்ற கம்பம் பா.ஜ. நகர் செயலாளர்கள் கோமதி, விஜிகலா ஆகியோரை வடக்கு போலீசார் கைது செய்தனர். பெண் நிர்வாகிகள் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து நகர தலைவர் பழனிக்குமார் தலைமையில் பா.ஜ. வினர் திரண்டனர்.
--பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்
மூணாறு: -பழைய மூணாறில் செயல்படும் கேரள அரசு பஸ் டிப்போவில் உள்ள பெட்ரோல் பங்க்கில் அனைத்து வாகனங்களுக்கும் எரிபொருள் நிரப்பும் வசதி செய்யப்பட்டுள்ளது. அங்கு நேற்று முன்தினம் பணியில் இருந்த அடிமாலி வாளரா பத்தாம் மைல் பகுதியைச் சேர்ந்த ராஜேஷ் 37, வாகனங்களுக்கு எரிபொருள் நிரப்பி கொண்டிருந்தார். அப்போது ஆட்டோவில் வந்த ஐந்து பேர் கொண்ட கும்பல் வேறொரு வாகனத்திற்கு எரிபொருள் நிரப்பிக் கொண்டிருந்த ராஜேஷிடம் ஆட்டோவுக்கு உடனடியாக எரி பொருள் நிரப்புமாறு வற்புறுத்தினர். அதனால் அருகில் உள்ள பம்ப்பில் நிரப்பி கொள்ளுமாறு கூறிய ராஜேஷை ஐந்து பேர் கொண்ட கும்பல் தாக்கினர். அதனை பார்த்து டிப்போ ஊழியர்கள் வந்ததால் ஆட்டோவில் கும்பல் தப்பிச் சென்றனர். அவர்களை மூணாறு போலீசார் தேடி வருகின்றனர்.
துறவி உயிரிழப்பு
தேனி: சிவகங்கை மாவட்டம் வேம்பத்துார் ராஜா 70. இவர் 15 ஆண்டுகளுக்கு முன் சுருளிதீர்த்தம் வந்து, தீட்சை பெற்றுதுறவியாக அங்கேயே வாழ்ந்தார். சில நாட்களாக வயது முதிர்வு காரணமாக உடல் நலம்பாதிக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று காலை சுருளித்தீர்த்தம் சுங்கச்சாவடி அருகே உள்ள பஸ் நிறுத்தம் அருகே இறந்து கிடந்தார். வி.ஏ.ஓ., கண்ணன் புகாரில் ராயப்பன்பட்டி போலீசார் உடலை கைப்பற்றி,தேனி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
மனைவி புகார்: கணவர் கைது
ஆண்டிபட்டி: அனுப்பபட்டியை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் 45, இவரது மனைவி மகேஸ்வரி 36, இவர்களுக்கு இரு குழந்தைகள் உள்ளனர். மதுபழக்கத்திற்கு அடிமையான ராமகிருஷ்ணன் வாரத்தில் இரு நாட்கள் மட்டும் கூலி வேலை பார்த்து விட்டு, அதில் கிடைக்கும் பணத்தில் குடித்து விட்டு மனைவி, குழந்தைகளுடன் தகராறு செய்வதை வாடிக்கையாக கொண்டிருந்தார். நேற்று முன்தினம் குடிபோதையில் வீட்டிற்கு சென்ற ராமகிருஷ்ணன் மனைவி மற்றும் குழந்தைகளை தாக்கி காயப்படுத்தி உள்ளார். மகேஸ்வரி புகாரில் ஆண்டிபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து ராமகிருஷ்ணனை கைது செய்தனர்.