/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
குமுளி மலைப்பாதையில் மரங்கள் சாய்வது தொடர்கிறது; அச்சத்தில் பயணிக்கும் வாகன ஓட்டிகள்
/
குமுளி மலைப்பாதையில் மரங்கள் சாய்வது தொடர்கிறது; அச்சத்தில் பயணிக்கும் வாகன ஓட்டிகள்
குமுளி மலைப்பாதையில் மரங்கள் சாய்வது தொடர்கிறது; அச்சத்தில் பயணிக்கும் வாகன ஓட்டிகள்
குமுளி மலைப்பாதையில் மரங்கள் சாய்வது தொடர்கிறது; அச்சத்தில் பயணிக்கும் வாகன ஓட்டிகள்
ADDED : ஜூன் 25, 2025 07:00 AM

தமிழக கேரளாவை இணைக்கும் முக்கிய வழித்தடங்களில் குமுளி மலைப்பாதையும் ஒன்றாகும். குமுளியிலிருந்து லோயர்கேம்ப் வரையுள்ள 6 கி.மீ., தூரமுள்ள மலைப்பாதை பல ஆபத்தான வளைவுகளைக் கொண்டதாகும். இதில் இரைச்சல் பாலம் வளைவு, மாதா கோயில் வளைவு, கொண்டை ஊசி வளைவுகளில் அடிக்கடி விபத்துகள் நடக்கும். தேசிய நெடுஞ்சாலைத் துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த ரோடு சில ஆண்டுகளுக்கு முன்பு அகலப்படுத்தப்பட்டு சீரமைக்கப்பட்டது. இருந்த போதிலும் பல இடங்களில் மண் சரிவு ஏற்படும் அபாயம், பாறைகள் உருண்டு விழும் அபாயமும், சாய்ந்து விழும் நிலையில் மரங்களும் உள்ளன.
ஒவ்வொரு தமிழ் மாத துவக்கத்தில் ஐந்து நாட்கள் சபரிமலையில் நடை திறப்பதால் பல்வேறு பகுதிகளில் இருந்து ஐயப்ப பக்தர்களின் வாகனங்கள் இவ் வழியாகச் செல்கிறது. மேலும் சபரிமலை சீசனான கார்த்திகை, மார்கழி, தை மாதங்களில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் இரவு பகலாக கடந்து செல்லும். தமிழகப் பகுதியில் இருந்து தேக்கடி மற்றும் அதன் சுற்றியுள்ள சுற்றுலா தலங்களுக்கு தினந்தோறும் இவ் வழியாக அதிக அளவில் வாகனங்கள் செல்கிறது.
மழை பெய்யும் நாட்களில் ரோட்டில் மரங்கள் சாய்ந்து விழும் நிலை தொடர்கிறது. சமீபத்தில் பழைய போலீஸ் சோதனை சாவடி அருகே மரங்கள் சாய்ந்து போக்குவரத்து பாதித்தது.
மரங்களை அகற்றுவதில் குளறுபடி
இந்நிலையில் நேற்று இறைச்சல் பாலம் அருகே மரங்கள் சாய்ந்து போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. வாகனங்கள் கடந்து செல்லும்போது மரங்கள் சாய்ந்தால் பல அடி ஆழமுள்ள மலைப்பாதையின் பள்ளத்தில் வாகனங்கள் கவிழ்ந்து மிகப்பெரிய விபத்து ஏற்படும் வாய்ப்புள்ளது. மேலும் மலைப்பாதை வனப்பகுதிக்குள் அமைந்துள்ளதால் ரோட்டின் கிழக்குப் பகுதி கூடலுார் வனச்சரகத்திற்கும், ரோட்டின் மேற்குப் பகுதி கம்பம் மேற்கு வனச்சரகத்தின் கட்டுப்பாட்டிலும் உள்ளது.
இதனால் ரோட்டில் மரங்கள் விழுந்தால் யார் அகற்றுவது என்ற குளறுபடியும் உள்ளது.
முக்கியத்துவம் கருதி மிகப் பெரிய விபத்துகள் ஏற்படாமல் தடுக்க அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து ரோட்டோரத்தில் சாய்ந்து நிற்கும் ஆபத்தான மரங்களை அகற்றவும், பல இடங்களில் பாறைகள் உருண்டு விழாமல் தடுப்பு நடவடிக்கை எடுக்கவும், மண் சரிவு ஏற்படும் இடத்தில் தடுப்புச் சுவர் அமைக்கவும் முன்வர வேண்டும் என வாகன ஓட்டிகள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.