/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
தேனியில் 400 மெகாவாட் மின்உற்பத்தி மத்திய வன அமைச்சகம் அனுமதி
/
தேனியில் 400 மெகாவாட் மின்உற்பத்தி மத்திய வன அமைச்சகம் அனுமதி
தேனியில் 400 மெகாவாட் மின்உற்பத்தி மத்திய வன அமைச்சகம் அனுமதி
தேனியில் 400 மெகாவாட் மின்உற்பத்தி மத்திய வன அமைச்சகம் அனுமதி
ADDED : ஜன 19, 2024 02:11 AM
கம்பம்:தேனி மாவட்டத்தில் 400 மெகாவாட் மின்உற்பத்தி செய்யும் திட்டத்திற்கு மத்திய வனம் மற்றும் சுற்றுப்புறச்சூழல் அமைச்சகம் முதற்கட்ட அனுமதி வழங்கியுள்ளது.
தமிழகத்தில் 11 இடங்களில் 7500 மெகாவாட் மின்உற்பத்தி செய்ய ஆய்வு பணிகள் பல ஆண்டுகளாக நடக்கிறது. அதில் முதற்கட்டமாக கன்னியாகுமரி, கோவை, தேனி மாவட்டங்களில் 2 ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்திக்கான பணிகள் துவக்க உள்ளது.
கோவை ஆழியாறில் 1000 மெகாவாட், கன்னியாகுமரி மாவட்டம் கோதையாறு, தேனி மாவட்டம் மணலாறு ஆகிய இரு பகுதியிலும் சேர்த்து 1000 மெகாவாட் மின் உற்பத்திற்கு அறிக்கைகள் தயாரிக்கப்பட்டன.
தேனி மாவட்டத்தில் மேகமலை பகுதியில் உள்ள மணலாறு அணையிலிருந்து நாராயணத்தேவன்பட்டி மலையடிவாரத்திற்கு தண்ணீரை இறக்கி அதில் 400 மெகாவாட் மின் உற்பத்தி செய்ய திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. இதற்கு 'பம்ப்டு ஸ்டோரேஜ்' திட்டம் என அழைக்கப்படுகிறது.
அதாவது பகலில் மணலாறு அணையிலிருந்து தண்ணீரை குழாய் மூலம் கீழே இறக்கி மின் உற்பத்தி செய்வதும், இரவில் இறக்கிய தண்ணீரை, மீண்டும் பம்ப் செய்து மணலாறு அணைக்கு கொண்டு செல்வதும் இதன் அம்சமாகும்.
நீலகிரி அருகே குந்தா நீர் மின் திட்டம் இந்த அடிப்படையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
தேனி மாவட்டம், லோயர்கேம்ப் நீர் மின் நிலையத்தில் 4 ஜெனரேட்டர்கள் உதவியுடன் 170 மெகாவாட்டும், சுருளியாறு நீர் மின் நிலையத்தில் ஒரு ஜெனரேட்டர் மூலம் 35 மெகாவாட்டும் மின் உற்பத்தி செய்யப்படுகிறது.
மணலாறு பம்ப்டு ஸ்டோரேஜ் நீர் மின்நிலையத்தில் 4 ஜெனரேட்டர்கள் மூலம் 400 மெகாவாட் உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
மணலாறு அணை மற்றும் மின் நிலையம் அமைக்க உத்தேசித்துள்ள இடம் மேகமலை புலிகள் காப்பாக பகுதிக்குள் வருவதால் மத்திய வன அமைச்சகத்தின் ஒப்புதல் தேவை.
தற்போது இதற்கான விரிவான திட்ட அறிக்கை மத்திய வனம் மற்றும் சுற்றுப்புறச்சூழல் அமைச்சகத்திடம் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது. இதற்கு முதற்கட்ட அனுமதி கிடைத்துள்ளது. விரைவில் இதற்கான பணி துவங்கும் என மின்வாரியம் தெரிவித்துள்ளது.

