/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
மீண்டும் கொடிகட்டி பறக்கும் பேனர் கலாசாரம்
/
மீண்டும் கொடிகட்டி பறக்கும் பேனர் கலாசாரம்
ADDED : ஜன 24, 2024 12:57 AM

பொது இடங்களில் மக்களுக்கு இடையூறு, விபத்து, உயிரிழப்பு அசம்பாவிதங்கள் ஏற்பட்டதால், விதிமீறி பேனர், தட்டிகள் வைக்கக் கூடாது; விதிமீறுவோர் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, உச்ச நீதிமன்றமும், உயர் நீதிமன்றமும் உத்தரவு பிறப்பித்தன.
ஆனால், உத்தரவுகளை காற்றில் பறக்க விட்டு, சென்னை மற்றும் புறநகரில் மீண்டும் பேனர் கலாசாரம் கொடிகட்டி பறக்கிறது.
இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டிய அதிகாரிகளோ, கைகட்டி வேடிக்கை பார்க்கின்றனர்.
சென்னை, பள்ளிக்கரணையில் மென் பொறியாளரான இளம்பெண் சுபஸ்ரீ, அ.தி.மு.க., பிரமுகர் ஒருவரின் இல்லத் திருமண விழாவின் போது வைக்கப்பட்டிருந்த பேனர் விழுந்து உயிரிழந்தார்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து விழித்து எழுந்த அப்போதைய எதிர்க்கட்சியான தி.மு.க., இனி, கட்சி விழாக்கள் உள்ளிட்டவற்றில் பேனர் வைக்க மாட்டோம்; பேனர் கலாசாரத்தை புறக்கணிக்கிறோம் என, உறுதி மொழி எடுத்தது.
ஆனால், ஆளுங்கட்சியான பின் எதையும் கண்டுகொள்ளவில்லை. இதனால், சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் பேனர் கலாசாரம் மீண்டும் தலை துாக்கி உள்ளது. குறிப்பாக விளம்பர பேனர்கள் அதிகரித்துள்ளன.
இது குறித்து அதிகாரிகளிடம் கேட்டால், 'நீதிமன்றத்தில் வழக்கு உள்ளது' உள்ளிட்ட சாக்குபோக்கு கூறி நழுவி விடுகின்றனர்.
இது தொடர்பாக உச்ச நீதிமன்றமும், உயர் நீதிமன்றமும் கடுமையான உத்தரவுகள் பிறப்பித்தும் மாநகராட்சி, உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் போலீசார் வேடிக்கை பார்க்கின்றனர்.
5 கி.மீ.,க்கு கட்சி பேனர்
சென்னையில் அண்ணா நகர், திருமங்கலம், போரூர், ராயபுரம், சோழிங்கநல்லுார் உட்பட அனைத்து பகுதிகளிலும், அரசியல் பிரமுகர்களை சார்ந்தோரும், சாதாரண மக்களும் பிறப்பு முதல் இறப்பு வரை, அனைத்து விழாக்களுக்கும் பேனர், போஸ்டர் வைக்க துவங்கி உள்ளனர்.
l திருவள்ளூர் மாவட்டத்தில் அரசியல், திருமணம், பிறந்த நாள், நினைவஞ்சலி போன்ற நிகழ்ச்சிகள் உட்பட பல நிகழ்ச்சிகளுக்கு பேனர்கள் வைப்பது, தற்போது அதிகரித்து வருகிறது. இந்நிலையில், நேற்று திருவள்ளூர் அடுத்த திருப்பாச்சூர் ஏ.கே.என். திருமண மண்டபத்தில், திருவள்ளூர் மேற்கு மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழக செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டம், பொதுச் செயலர் டி.டி.வி.தினகரன் தலைமையில் நடந்தது.
இதற்காக, சென்னை - திருப்பதி நெடுஞ்சாலையில் உள்ள திருமண மண்டபத்தில் இருந்து, மணவாள நகர் ரயில்வே மேம்பாலம் மற்றும் பட்டரைபெரும்புதுார் டோல்கேட் வரை, இரு வழித்தடங்களிலும், 5 கி.மீ., துாரத்திற்கு, சென்டர் மீடியனில் பேனருடன் கொடிக்கம்பங்கள் மற்றும் நெடுஞ்சாலையோரம் பேனர்கள் வைக்கப்பட்டன.
சென்னை - திருப்பதி நெடுஞ்சாலையில் மாவட்ட கலெக்டர், எஸ்.பி., அலுவலகம், நீதிமன்றம், அரசு மருத்துவமனை என அரசு அலுவலகங்கள் இருந்தும், யாரும் இதை கண்டுகொள்ளாதது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஊத்துக்கோட்டை பேரூராட்சி, எல்லாபுரம், பூண்டி ஒன்றியங்களில், சமீபத்தில் கொண்டாடப்பட்ட பொங்கல் நிகழ்வை ஒட்டி, அரசியல் பிரமுகர்கள் வாழ்த்து சொல்கிறோம் என்ற போர்வையில், பெரிய அளவிலான பேனர்களை, பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தும் சாலையில் வைத்துள்ளனர்.
சிலர், ஒவ்வொரு தெருவிலும் வைத்து உள்ளனர். இதை கட்டுப்படுத்த வேண்டிய அதிகாரிகள், ஆழ்ந்த உறக்கத்தில் உள்ளனர்.
எனவே, அசம்பாவிதங்கள் ஏற்படும் முன் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விபத்து அபாயம்
காஞ்சிபுரம் மாவட்டத்தில், ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சி என, அனைத்து வகையான உள்ளாட்சி அமைப்புகளில், அனுமதியற்ற விளம்பர பேனர், தட்டிகளை வைக்கக் கூடாது என, மாவட்ட கலெக்டர் ஏற்கனவே பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டிருந்தார்.
ஆனால், உத்தரவுகளை மீறி, காஞ்சிபுரம் மாநகராட்சியின் முக்கிய வீதிகளில், ஏராளமான அரசியல் கட்சி விளம்பர பேனர்கள் வைக்கப்பட்டு வருகின்றன.
நகரில் இரட்டை மண்டபம், கிழக்கு ராஜ வீதி, மேற்கு ராஜவீதி, காமராஜர் சாலை, காந்திரோடு என முக்கிய பகுதிகளில் வைக்கப்பட்டுள்ள ராட்சத பேனர்களால், வாகன ஓட்டிகளின் கவனம் சிதறி, விபத்து ஏற்படும் சூழல் உள்ளது. மாநகராட்சி அதிகாரிகள் இதுகுறித்து எந்தவித நடவடிக்கையும் எடுப்பதில்லை என, குற்றச்சாட்டுகள் அதிகரித்து வருகின்றன.
எனவே, உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற உத்தரவுகளை மதித்து, பேனர்களை அதிகாரிகள் அகற்ற முன்வர வேண்டுமென, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.
- நமது நிருபர் குழு -

