/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
வீட்டு மனை பட்டாவிற்கு இருளர் மக்கள் காத்திருப்பு
/
வீட்டு மனை பட்டாவிற்கு இருளர் மக்கள் காத்திருப்பு
ADDED : ஜன 23, 2024 05:19 AM
பொன்னேரி: பொன்னேரி அடுத்த எல்.எஸ்.பூதுார் கிராமத்தில், ஆரணி ஆற்றின் கரையோரப்பகுதியில் இருளர் குடியிருப்புகள் உள்ளன. இங்கு, 25 குடும்பங்கள், 30 ஆண்டுகளாக சிறு குடிசைகள் அமைத்து வசித்து வருகின்றனர்.
இவர்கள், ஆற்றில் வெள்ளப்பெருக்கு மற்றும் மழைக்காலங்களில், இவர்கள் அங்கிருந்து வெளியேற்றப்படுகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் இதே நிலை தொடர்கிறது. குடிசை வீடுகளும் சேதம் அடைவதால் பெரும் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.
இவர்கள் நிரந்தரமாக வீடு கட்டி வசிக்க வீட்டுமனை வழங்க வேண்டும் என வருவாய்த்துறையினரிடம் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
இது குறித்து தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் வாழ்வு உரிமை இயக்கத்தின் மாவட்ட தலைவரும், அதே கிராமத்தை சேர்ந்தவருமான கே.கிருஷ்ணன் தெரிவித்ததாவது:
இருளர் மக்களுக்கு வீட்டுமனை கேட்டு தொடர்ந்து வருவாய்த்துறையினரிடம் மனு அளித்து வருகிறோம். ஆனால் எந்தவொரு நடவடிக்கையும் இல்லை. கிராமத்தில் அரசு நிலங்கள் உள்ளன. நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.

