/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
அயோத்தியில் கும்பாபிேஷகம்: திருவள்ளூரில் கோலாகலம்
/
அயோத்தியில் கும்பாபிேஷகம்: திருவள்ளூரில் கோலாகலம்
ADDED : ஜன 23, 2024 05:29 AM

உத்திரபிரதேச மாநிலம், அயோத்தியில் ஸ்ரீராமர் சிலை பிரதிஷ்டை மற்றும் மகா கும்பாபிேஷகம் நேற்று நடந்தது.
இதையொட்டி, திருத்தணி நகரில் உள்ள அனுமந்தாபுரம் தெருவில் உள்ள ஸ்ரீ கல்யாண ராமர் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது.
மதியம், 12:30 மணிக்கு மேல் கோவில் வளாகத்தில் ஒரு யாகசாலை அமைத்து சிறப்பு ஹோமம் நடந்தது.
தொடர்ந்து மூலவர் ஸ்ரீகல்யாண ராமருக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரம் மற்றும் பூஜைகள் நடந்தன.
பஜனை குழுவினரின் ஜெய் ஸ்ரீராம் கீர்த்தனை தொடர்ந்து பாடப்பட்டது.
இதேபோல் திருத்தணி ஜோதிசாமி தெருவில் உள்ள ராமர் கோவில், பெரிய தெரு, ஸ்ரீசீதா ராமர் கோவில், மேட்டுத் தெரு பெருமாள் கோவில் உள்பட பல கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடத்தி பக்தி பாடல்கள் பாடப்பட்டன.
ஆர்.கே.பேட்டை அடுத்த அம்மையார்குப்பம் கோதண்ட ராமர் கோவிலிலும் நேற்று சிறப்பு பஜனை நடத்தப்பட்டது.
பொன்னேரி கரிகிருஷ்ண பெருமாள் கோவிலில் சிறப்பு பஜனைகள் நடந்தன. ராமரின் பக்தி பாடல்களை, பஜனை குழுவினர் பாடினர். தொலைக்காட்சி வாயிலாக, ராமர் கோவில் கும்பாபிஷேக நேரடி காட்சிகள் ஒளிபரப்பப்பட்டன.
பொன்னேரி ஸ்ரீபக்த ஆஞ்சநேயர் கோவில், நந்தியம்பாக்கம் பெருமாள் கோவில் ஆகிய திருத்தலங்களில் சிறப்பு பூஜைகள் நடந்தன.
கடம்பத்துார் ஒன்றியம் ராமன் கோவில் ஊராட்சியில் அமைந்துள்ளது ஸ்ரீதாசரதி கல்யாண ராமர் கோவில்.
திருமண தடை நீங்கி நினைத்தது நிறைவேறும் என்ற பெருமை கொண்டு 3,500 ஆண்டுகள் பழமையான இந்த கோவில் 700 ஆண்டுகளுக்கு முன் திருவாலங்காடு சிவாச்சாரியார்களால் கண்டுபிடிக்கப்பட்டது.
ராமாயண காலத்தில் ராமன், லட்சுமணன், அனுமன் ஆகியோர் வானர படையோடு சீதையை தேடி இலங்கை நோக்கி சென்ற போது கொசஸ்தலை ஆற்றை அடைந்தனர்.
சீதையின் பிரிவால் வாடும் ராமன் மட்டும் தனிமையில் வந்து ஒரு இடத்தில் அமர்ந்து இருந்த இடம் தான் இப்போதுள்ள ராமன் கோவில்.
இந்த கோவிலில் கடந்த 2023ம் ஆண்டு பிப்.12ம் தேதி மகா சம்ப்ரோக்ஷணம் நடந்தது.
அயோத்தியில் ராமன் கோவில் கும்பாபிேஷகத்தை முன்னிட்டு நேற்று காலை 10 :30 மணியளவில் சிறப்பு அபிேஷகமும், பூஜையும் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர். ஊத்துக்கோட்டை பேரூராட்சி, ரெட்டித்தெருவில் உள்ள ஸ்ரீகிருஷ்ணர் கோவிலில், காலை மூலவருக்கு சிறப்பு பூஜை நடந்தது. பின்னர் பக்தர்களின் பஜனை நிகழ்ச்சி நடந்தது. ஸ்ரீவிஷ்ணு சகஸ்ரநாமம், அனுமன்சாலிசா பாராயணமும் நடந்தது. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
தாராட்சி ஸ்ரீதேவி, பூதேவி சமேத கலியுக வெங்கடேச சவுந்தர்ய நாராயணன் கோவிலில் காலை விஷ்ணு சகஸ்ரநாமம், லட்சுமி அஷ்டோத்திரம், ராம நாமம், அனுமன் சாலிசா மற்றும் திருமஞ்சனம் நடந்தது.
பஜனை நிகழ்ச்சி நடத்தப்பட்டு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. குமரப்பேட்டை ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு பூஜை, பஜனை மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.
மெய்யூர் ஸ்ரீசுக்ர சுந்தர வரதராஜ பெருமாள் கோவிலில் சிறப்பு பூஜை, பஜனை நிகழ்ச்சி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் சென்னை ராமகிருஷ்ண மடத்தைச் சேர்ந்த ஸ்ரீமத் சுப்ரஜானந்தா மஹராஜ் சுவாமிகள் பங்கேற்றனர்.
lராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரில் நேற்று ராமர் கோவில் மற்றும் பக்தோசித பெருமாள் கோவில் நான்கு கால் மண்டபத்தில் சிறப்பு வழிபாடு நடந்தது.
- நமது நிருபர்குழு -

