/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷேகம் காஞ்சி காமாட்சியம்மன் கோவிலில் சிறப்பு நிகழ்ச்சி
/
அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷேகம் காஞ்சி காமாட்சியம்மன் கோவிலில் சிறப்பு நிகழ்ச்சி
அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷேகம் காஞ்சி காமாட்சியம்மன் கோவிலில் சிறப்பு நிகழ்ச்சி
அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷேகம் காஞ்சி காமாட்சியம்மன் கோவிலில் சிறப்பு நிகழ்ச்சி
ADDED : ஜன 21, 2024 12:16 AM
காஞ்சிபுரம் : உத்தரபிரதேச மாநிலம், அயோத்தியில் நாளை நடக்க உள்ள ராமர் கோவில் கும்பாபிஷேகம், காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது என, கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவில் ஸ்ரீகார்யமும், சங்கர மடத்தின் மேலாளருமான சுந்தரேச அய்யர் மற்றும் சங்கர மடத்தின் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் கலைராம வெங்கடேசன் ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
அயோத்தி ராமர் கோவிலில், காஞ்சிபுரம் சங்கராச்சார்யார்கள் மூவரின் பங்களிப்பும் குறிப்பிடத்தக்கது. காமகோடி த்ரிவேணியாக மூன்று ஆசார்யர்களும், ஸ்ரீராமபிரானுக்கு கோவில் அமைக்க சாஸ்த்ர ரீதியாக அனைத்தையும் ஏற்பாடு செய்து கொடுப்பதை, தங்களுடைய சேவையாக செய்தனர்.
காஞ்சி காமகோடி பீடாதிபதிகளும், பல்வேறு சமரச பேச்சுகளை நடத்தி சமரசமாக தீர்வு கண்டு ராமபிரானுக்கு கோவில் எழுப்புவதையே குறிக்கோளாக கொண்டுஇருந்தனர்.
கடந்த 1986ல் உத்தர பிரதேச மாநிலம், ப்ரயாக்ராஜில் ஜெயேந்திரர் முகாமிட்டிருந்தார்.
அப்போது, அயோத்தியில் ராமர் கோவில் நடை திறக்கப்படுகிறது என அறிந்து, அங்கே நேரில் சென்று விசேஷ பூஜை செய்தார். கடந்த 2023ல் சங்கர விஜயேந்திரர், காசியில் தனது சாதுர்மாஸ்ய விரதத்தை முடித்து, அயோத்தியில் சாரதா நவராத்திரியை அனுஷ்டித்தார்.
விஜயேந்திரர் கூறியபடி பிராண பிரதிஷ்டைக்கு நாள் குறிக்கவும், யாக சாலை வைதீக கார்யக்ரமங்களுக்கு காசியை சேர்ந்த கணேஷ்வர சாஸ்திரி திராவிட் என்பவர் நியமிக்கப்பட்டார்; காசி ஸ்ரீலஷ்மிகாந்த் மதுரநாத் தீட்சித் தலைமை வகிக்கிறார்.
அயோத்தியில் நடக்கும் ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை ஒட்டி, காமாட்சியம்மன் கோவில் வசந்த மண்டபம் பின்பக்கம் 1,000 பக்தர்கள் காணும் வகையில் கும்பாபிஷேக நிகழ்ச்சி, காலை 10:00 - பிற்பகல் 12:30 மணி வரை நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது. அப்போது, ராமசங்கீர்த்தனம், ராமஜெபம் நடக்கும். சங்கராச்சாரியர் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் தற்போது ஹைதராபாதில் உள்ளார். சுவாமிகள் மூன்று கால பூஜைகள் செய்து வருகிறார்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இந்நிலையில், காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் சன்னிதி தெருவில் உள்ள கீர்த்தனாவளி மண்டபத்தில் நாளை காலை 6:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை, அகண்ட நாமகீர்த்தனம் நடக்கிறது.
மாலை 5:00 மணிக்கு, அகண்ட நாம பூர்த்தியின் போது உ.வே.ஸ்ரீநிவாசன்ஜி தலைமையில் கூட்டு பிரார்த்தனை நடக்கிறது. இதில், பக்தர்கள் அனைவரும் பங்கேற்கலாம் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை, மடிப்பாக்கம் அய்யப்பன் கோவிலிலும் நாளை காலை 9:00 மணி முதல் மதியம் 1:00 மணிவரை அகண்ட ராம நாம ஜபம் செய்யப்படுகிறது. வரும், 26ம் தேதி காலை 7:00 மணி முதல் மதியம் 1:00 மணிவரை விஷ்ணு சகஸ்ர நாம பாராயணம் நடத்தப்படுகிறது.

