ADDED : ஜன 20, 2024 11:53 PM

திருத்தணி, சென்னை மற்றும் புறநகரில் உள்ள முருகன் கோவில்களில் நேற்றுதை கிருத்திகை விழா விமரிசையாக நடந்தன.
வடபழனி ஆண்டவர், குன்றத்துார் முருகன், கந்தக்கோட்டம், பெசன்ட்நகர் அறுபடை வீடு, குரோம்பேட்டை குமரக்கோட்டம், திருப்போரூர், சிறுவாபுரி, வல்லக்கோட்டை உள்ளிட்ட முருகன் கோவில்களில் தை கிருத்திகை சிறப்பாக கொண்டாடப்பட்டது.
அதேபோல, திருத்தணி முருகன் கோவிலில் தை கிருத்திகை விழாவை ஒட்டி, நேற்று அதிகாலை, 4:30 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, மூலவருக்கு தங்க கீரிடம், தங்கவேல் பச்சைமாணிக்க மரகதகல் மற்றும் வைர ஆபரணங்கள் அணிவித்து சிறப்பு தீபாராதனை நடந்தது.
பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் மலைக்கோவில் தேர்வீதியில் குவிந்தனர்.
இதில் 1000த்திற்கும் மேற்பட்ட பக்தர்கள், காவடிகளுடன் வந்து வேண்டுதலை நிறைவேற்றினர்.
பொதுவழியில் நான்கு மணிநேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து மூலவரை தரிசித்தனர். இரவு, 7:00 மணிக்கு உற்சவர் முருகப்பெருமான் வள்ளி, தெய்வானையுடன் வெள்ளிமயில் வாகனத்தில் தேர்வீதியில் உலா வந்து அருள்பாலித்தார்.

