/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
திருவாலங்காடில் மகளிர் காவல் நிலையம் இல்லை சிரமம்: புகார் அளிக்க 45 கி.மீ., துாரம் செல்லும் அவலம்
/
திருவாலங்காடில் மகளிர் காவல் நிலையம் இல்லை சிரமம்: புகார் அளிக்க 45 கி.மீ., துாரம் செல்லும் அவலம்
திருவாலங்காடில் மகளிர் காவல் நிலையம் இல்லை சிரமம்: புகார் அளிக்க 45 கி.மீ., துாரம் செல்லும் அவலம்
திருவாலங்காடில் மகளிர் காவல் நிலையம் இல்லை சிரமம்: புகார் அளிக்க 45 கி.மீ., துாரம் செல்லும் அவலம்
ADDED : செப் 26, 2025 03:47 AM

திருவாலங்காடு:திருவாலங்காடு சுற்றுவட்டாரத்தில் வசிக்கும் பெண்கள், தங்களின் பிரச்னைகள் தொடர்பாக புகார் அளிக்க, 45 கி.மீ., துாரத்தில் உள்ள திருத்தணி மகளிர் காவல் நிலையத்தை தான் அணுக வேண்டி உள்ளது.
மேலும், திருவாலங்காடில் இருந்து திருத்தணிக்கு செல்ல போதிய போக்குவரத்து வசதி இல்லாததால் அலைச்சலுடன், செலவும் அதிகமாகிறது. எனவே, திருவாலங்காடில் மகளிர் காவல் நிலையம் அமைக்க வேண்டும் என்று, கோரிக்கை விடுத்து வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டம், 1996ல் உருவானது. இந்த மாவட்டத்தில், திருவள்ளூர், திருத்தணி, ஊத்துக்கோட்டை, கும்மிடிப்பூண்டி மற்றும் பொன்னேரி உட்கோட்டங்கள் இருந்தன. தற்போது, பொன்னேரி உட்கோட்டம், ஆவடி மாநகர காவல் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது.
குற்றச்சம்பவங்கள்
திருவள்ளூர், திருத்தணி, ஊத்துக்கோட்டை மற்றும் கும்மிடிப்பூண்டி உட்கோட்டங்களில், 28 காவல் நிலையங்களும், கோட்டத்திற்கு ஒன்று என, நான்கு மகளிர் காவல் நிலையங்களும் உள்ளன.
திருத்தணி கோட்டத்திற்கான மகளிர் காவல் நிலையம் மேல் திருத்தணியில் அமைந்துள்ளது.
திருவாலங்காடு, திருத்தணி, கனகம்மாசத்திரம், பொதட்டூர்பேட்டை, பள்ளிப்பட்டு, ஆர்.கே.பேட்டை உள்ளிட்ட காவல் நிலைய எல்லை பகுதிகள், இதன் கட்டுப்பாட்டில் வருகின்றன.
இந்த எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில், மகளிர் பிரச்னைகள், குடும்ப தகராறு, பாலியல் வழக்குகள் உள்ளிட்ட பிரச்னைகள் குறித்து, மகளிர் காவல் நிலையத்தில் விசாரித்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், திரு வாலங்காடு, கனகம்மாசத்திரம் காவல் நிலைய எல்லையில், பெண்களுக்கு எதிராக நடக்கும் குற்றச்சம்பவங்கள் பற்றி புகார் அளிக்க, 45 கி.மீ., துாரத்தில் உள்ள திருத்தணி மகளிர் காவல் நிலையத்திற்கு தான் செல்ல வேண்டியுள்ளது.
மேலும், திருவாலங்காடு பகுதியில் இருந்து நேரடியாக திருத்தணி செல்ல பொது போக்குவரத்து வசதியும் இல்லை. இதனால், பெண்கள் புகார் அளிக்க செல்லும் போது வீண் அலைச்சல் ஏற்படுகிறது.
அலைச்சல் குறையும்
இதுகுறித்து களாம் பாக்கம் பகுதி பெண்கள் கூறியதாவது:
களாம்பாக்கத்தில் இருந்து திருத்தணி மகளிர் காவல் நிலையம், 45 கி.மீ., துாரத்தில் உள்ளது.
களாம்பாக்கம் பெண்கள் புகார் அளிக்க வேண்டும் எனில், ஆட்டோ, பேருந்து, ரயில் என மூன்று விதமான வாகன போக்குவரத்தை பயன் படுத்தி, திருத்தணி செல்ல வேண்டும்.
அதற்கு கட்டணம் குறைந்தது, 400 முதல் 500 ரூபாய் தேவைப்படும். ஏழை பெண்கள் எப்படி, அவ்வளவு பணம் செலவு செய்து சென்று புகார் அளிப்பர். புகாரின் மீதான அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து தெரிந்து கொள்ளவும், திருத்தணிக்கு தான் செல்ல வேண்டும்.
இதனால், அலைச்சல், நேர விரயம் ஏற்படுவதால் பெண்கள் புகார் அளிக்காமல் உள்ளனர். இதை பலரும் தங்களுக்கு சாதகமாக பயன் படுத்தி கொள்கின்றனர்.
எனவே திருவாலங் காடில் அனைத்து மகளிர் காவல் நிலையம் அமைந்தால் அலைச்சல் குறையும். பெண்களுக்கும் பாதுகாப்பு அதிகரிக்கும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
25 கி.மீ.,யில் திருவள்ளூர்
ஊத்துக்கோட்டை, திருவள்ளூர், கும்மிடிப்பூண்டி உள்ளிட்ட நான்கு காவல் கோட்டங்களில் தலா ஒரு மகளிர் காவல் நிலையம் அமைந்துள்ளது.
இங்கு திருவள்ளூர், கும்மிடிப்பூண்டி, ஊத்துக் கோட்டை மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கிராமங்கள் அதிகபட்ச துாரமாக 20 முதல் 25 கி.மீ.,ல் உள்ளது.
ஆனால் திருத்தணி மகளிர் காவல் நிலையம் மட்டும் 30 முதல் 45 கி.மீ., துாரத்தில் 40க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன.
குறிப்பாக திருவாலங்காடு சுற்றுவட்டாரத்தில், 25 கிராமங்கள் உள்ளது. இந்த கிராமங்களுக்கு திருவள்ளூர் மகளிர் காவல் நிலையம் 10 முதல் 20 கி.மீ., துாரத்தில் அமைந்துள்ளது.
எனவே அந்த கிராமங்களை திருவள்ளூர் மகளிர் காவல் நிலையத்துடன் இணைக்க வேண்டும் அல்லது திருவாலங்காடில் மகளிர் காவல் நிலையம் அமைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
ஏழை எளிய பெண்கள் பாதிப்பு
திருவாலங்காடு, கனகம்மாசத்திரம் பகுதியில் பெண்களுக்கு எதிரான பாலியல் தொடர்பான பிரச்னைகள், குழந்தைகள் திருமணம், குடும்ப வன்முறை, வரதட்சணை கொடுமை என பல்வேறு பிரச்னைகள் அதிகரித்து உள்ளன. இப்பகுதி பெண்களால், எளிதில் மகளிர் காவல் நிலையத்தை அணுக முடியாத துாரத்தில் உள்ளதால் விரக்தி அடைகின்றனர்.
மகளிர் தொடர்பான பிரச்னைகள் என, சட்டம்--- - ஒழுங்கு காவல் நிலையம் சென்றால், அதிகாரிகள் சரிவர விசாரணை மேற்கொள்வதில்லை. அவர்கள் மகளிர் காவல் நிலையத்தை அணுகும்படி கூறுகின்றனர். இதனால், ஏழை எளிய பெண்கள், படிப்பறிவு குறைந்தவர்கள் திருத்தணியில் உள்ள மகளிர் காவல் நிலையத்தை தொடர்பு கொள்ள முடியாமல் பாதிக்கப்படுகின்றனர்.
- எம்.சத்யா, திருவாலங்காடு.