/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
திருத்தணி - ஆர்.கே.பேட்டை நான்கு வழிச்சாலை பணி...துவக்கம்! விபத்துகள், போக்குவரத்து நெரிசலுக்கு நிரந்தர தீர்வு
/
திருத்தணி - ஆர்.கே.பேட்டை நான்கு வழிச்சாலை பணி...துவக்கம்! விபத்துகள், போக்குவரத்து நெரிசலுக்கு நிரந்தர தீர்வு
திருத்தணி - ஆர்.கே.பேட்டை நான்கு வழிச்சாலை பணி...துவக்கம்! விபத்துகள், போக்குவரத்து நெரிசலுக்கு நிரந்தர தீர்வு
திருத்தணி - ஆர்.கே.பேட்டை நான்கு வழிச்சாலை பணி...துவக்கம்! விபத்துகள், போக்குவரத்து நெரிசலுக்கு நிரந்தர தீர்வு
ADDED : ஜன 20, 2024 11:30 PM

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி நெடுஞ்சாலை துறையினர் மொத்தம், 213 கி.மீட்டர் நெடுஞ்சாலையை பராமரித்து வருகின்றனர்.
சாலைகளை தரம் உயர்த்துதல், ஆக்கிரமிப்புகள் அகற்றி, சாலை விரிவாக்கம் செய்தல் மற்றும் சாலைகள் பழுது பார்த்தல் போன்ற பணிகளை நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் திருத்தணியில் இருந்து, ஆர்.கே.பேட்டை வரை மொத்தம், 19 கி. மீட்டர் துாரம் நெடுஞ்சாலையை திருத்தணி நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் பராமரித்து வருகின்றனர். இந்த நெடுஞ்சாலையில், 24 மணி நேரமும் நுாற்றுக்கணக்கான வாகனங்கள் சென்றவாறு இருக்கும்.
மேலும், விவசாயிகள் லாரி மற்றும் டிராக்டர்கள் மூலம் கரும்புகள் ஏற்றிக் கொண்டு இவ்வழியாக திருவாலங்காட்டில் இயங்கி வரும் திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு கொண்டு செல்கின்றனர். இதுதவிர கனரக வாகனங்கள் அதிகளவில் இச்சாலையில் செல்வதால் போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்துக்கள் ஏற்படுகின்றன.
தற்போது இச்சாலை இருவழிச்சாலையாகவே உள்ளது. இதையடுத்து நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் திருத்தணி ---சோளிங்கர் நெடுஞ்சாலையை நான்கு வழிச்சாலையாக மாற்றுவதற்கு தீர்மானித்து அதற்கான பணியில் ஈடுபட்டுள்ளனர்.
முதற்கட்டமாக, திருத்தணி நகரத்தில் இருந்து ஆர்.கே.பேட்டை வரை, 19 கி.மீட்டர் துாரம் நான்கு வழிச்சாலையாக மாற்றுவதற்கு சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றியும், சர்வே செய்யும் பணியிலும் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
நான்கு வழிச்சாலையாக மாற்றப்பட்டால் போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்துக்கள் நடப்பதை நிரந்தரமாக தவிர்க்க முடியும் என நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து திருத்தணி கோட்ட பொறியாளர் அன்பரசு கூறியதாவது:
திருத்தணி-ஆர்.கே.பேட்டை நெடுஞ்சாலையில் முதற்கட்டமாக தலையாறிதாங்கலில் இருந்து பீரகுப்பம் வரை, 4 கி.மீட்டர் துாரத்திற்கு நான்கு வழிச்சாலை மாற்றுவதற்கு திட்ட மதிப்பீடு தயார் செய்து விரைவில் அனுப்பி, இந்த ஆண்டிலேயே நான்கு வழிச்சாலை மாற்றப்படும்.
பின் படிப்படியாக மூன்று ஆண்டுக்குள், 19 கி.மீ., துாரமும் நான்கு வழிச்சாலையாக மாற்றப்படும்.
நெடுஞ்சாலையை நான்கு வழிச்சாலையாக மாற்றுவதற்கு மொத்தம், 20 மீட்டர் அகலம் இருக்க வேண்டும். இதில், 15 மீட்டர் அகலத்திற்கு தார்ச்சாலையும், 2.1 மீட்டர் அகலத்தில் இருபுறமும் மழைநீர் வடிகால்வாய், 0.4 மீட்டர் அகலத்தில் இரு புறமும் தார்ச்சாலையின் சாய்வு தளம் அமைக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

