/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
மருத்துவ கழிவுகளால் மாசடையும் பானவேடு ஏரி ஆவடிக்கு இன்று வரும் கலெக்டர் நேரில் ஆய்வு செய்வாரா?
/
மருத்துவ கழிவுகளால் மாசடையும் பானவேடு ஏரி ஆவடிக்கு இன்று வரும் கலெக்டர் நேரில் ஆய்வு செய்வாரா?
மருத்துவ கழிவுகளால் மாசடையும் பானவேடு ஏரி ஆவடிக்கு இன்று வரும் கலெக்டர் நேரில் ஆய்வு செய்வாரா?
மருத்துவ கழிவுகளால் மாசடையும் பானவேடு ஏரி ஆவடிக்கு இன்று வரும் கலெக்டர் நேரில் ஆய்வு செய்வாரா?
ADDED : ஜூன் 25, 2025 03:08 AM

திருவள்ளூர்:கூவம் ஆற்றின் கரையோரம் அமைந்துள்ள பானவேடு ஏரியில், மருத்துவ கழிவு உள்ளிட்டவற்றை கொட்டி வருவதால், 240 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஏரி மாசடைந்து வருகிறது. இன்று, ஆவடிக்கு வரும் திருவள்ளூர் கலெக்டர் பிரதாப், ஏரியை நேரில் ஆய்வு செய்து, நடவடிக்கை எடுப்பாரா என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி ஒன்றியத்திற்கு உட்பட்டது பானவேடு ஊராட்சி. சென்னை ஆவடி - பூந்தமல்லி செல்லும் வழியில், கண்ணப்பாளையம் அருகில் உள்ள இந்த ஊராட்சியில், 240 ஏக்கர் பரப்பளவில் பானவேடு ஏரி அமைந்துள்ளது.
இந்த ஏரியை நம்பி சுற்றுவட்டாரத்தில் உள்ளோர் விவசாயத்திற்கும், நிலத்தடி நீராதாரமாகவும் பயன்படுத்தி வருகின்றனர்.
சமீப காலமாக இந்த ஏரியில், அருகில் உள்ள குடியிருப்புகள் மற்றும் தனியார் நிறுவனங்களில் இருந்து வெளியேறும் கழிவுநீர் கலந்தது. மேலும், மருத்துவ கழிவுகளும் ஏரியில் குவிக்கப்பட்டு வருகின்றன.
இதன் காரணமாக, இந்த ஏரி தற்போது மாசடைந்து, நிலத்தடி நீரை பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. பார்ப்பதற்கு சதுப்பு நில காடுகள் போல் காட்சியளிக்கும் இந்த ஏரி மாசடைந்தால், அவற்றில் வளர்ந்திருக்கும் மரங்களும் பட்டுபோய், பாலைவனம் போல் காட்சியளிக்கிறது.
தற்போது, ஏரியின் உள்ளேயும், வெளியேயும் ஏராளமான மருத்துவக் கழிவுகள் கொட்டி வைத்திருப்பதால், ஏரி முழுவதும் மாசடைந்து காணப்படுகிறது.
இந்த ஏரியை மீட்டெடுக்கும் விதமாக சமூக ஆர்வலர்கள், நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். ஏரியில் கொட்டப்பட்டுள்ள மருத்துவக் கழிவை அகற்ற வேண்டும் என, நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், அதிகாரிகள் ஏரியில் உள்ள மருத்துவ கழிவை அகற்றாமல், அவற்றின் மேல் மண்ணைக் கொட்டி மூடிவிட்டு சென்றுள்ளனர்.
இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:
பானவேடு ஏரி 240 ஏக்கர் பரப்பளவு உடையது. இந்த ஏரியை துார்வாரி பொதுப்பணித்துறை அதிகாரிகள் பராமரித்தால், மிகப்பெரிய நீர்த்தேக்கமாக மாற்றலாம். ஆனால், நடவடிக்கை எடுக்காமல், பொதுப்பணித் துறை அதிகாரிகள் அலட்சியம் காட்டி வருகின்றனர்.
மேலும், இந்த நீரை பயன்படுத்த முடியாத சூழலில் இருப்பதாக, தமிழ்நாடு குடிநீர் வாரிய அதிகாரிகளும் சான்று அளித்துள்ளனர். இதுகுறித்து, மாவட்ட நிர்வாகம் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியமாக உள்ளது.
திருவள்ளூர் கலெக்டர் பிரதாப், இன்று ஆவடி வட்டத்தில் ஆய்வுக்கு வருகிறார். அப்போது, இந்த ஏரியை ஆய்வு செய்து, நீர்நிலையை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.