/
உள்ளூர் செய்திகள்
/
தூத்துக்குடி
/
விஷவாயு தாக்கி 3 தொழிலாளர்கள் பலி
/
விஷவாயு தாக்கி 3 தொழிலாளர்கள் பலி
ADDED : செப் 18, 2025 02:55 AM

துாத்துக்குடி:சிறிய ரக கப்பலில் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்ட மூன்று தொழிலாளர்கள் விஷவாயு தாக்கி இறந்தனர்.
துாத்துக்குடி பழைய துறைமுகத்தில் இருந்து மாலத்தீவு, லட்சத்தீவு, இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கு சிறிய வகை சரக்கு கப்பல் மூலம் கட்டுமான பொருட்கள், காய்கறிகள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இந்நிலையில், மாலத்தீவுக்கு செல்ல இருந்த கப்பலில் உள்ள 'பேலாஸ்ட்' தொட்டியை சுத்தம் செய்யும் பணியில் தொழிலாளர்கள் நேற்று ஈடுபட்டனர்.
திருநெல்வேலி மாவட்டம் உவரியை சேர்ந்த ஷாரோன், 25, என்பவர் முதலில் தொட்டிக்குள் இறங்கினார். சிறிது நேரம் கழித்து, ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த சந்தீப் குமார், 22, என்பவர் இறங்கினார். இருவரும் வெகு நேரமாகியும் வெளியே வராததால், புன்னக்காயல் வடக்கு தெருவை சேர்ந்த ஜெனிஸ்டன், 35, என் பவர் தொட்டிக்குள் இறங்கி பார்த்தார்.
அவரும் வெளியே வராததால், அதிர்ச்சியடைந்த சக தொழிலாளர்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தொட்டியின் மூடி மிகவும் குறுகலாக இருந்ததால், வெல்டிங் மெஷின் மூலம் வெட்டி அகற்றப்பட்டது. மழை பெய்ய துவங்கியதால் தார்ப்பாய் போட்டு மூடியபடி மீட்பு பணிகள் நடந்தன.
ஆக்சிஜன் சிலிண்டர் பொருத்திய தீயணைப்பு படை வீரர் ஒருவர், தொட்டிக்குள் இறங்கி சென்று பார்த்த போது, மூன்று தொழிலாளர்களும் இறந்த நிலையில் கிடந்தனர்.
ஒரு மணி நேர போராட்டத்துக்கு பின் அவர்களது உடலை மீட்ட தீயணைப்பு படையினர், பிரேத பரிசோதனைக்காக துாத்துக்குடி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவ மனைக்கு அனுப்பினர்.