/
உள்ளூர் செய்திகள்
/
தூத்துக்குடி
/
திருச்செந்துார் கோவில் கும்பாபிஷேகம் யாகசாலை பூஜையுடன் துவக்கம்
/
திருச்செந்துார் கோவில் கும்பாபிஷேகம் யாகசாலை பூஜையுடன் துவக்கம்
திருச்செந்துார் கோவில் கும்பாபிஷேகம் யாகசாலை பூஜையுடன் துவக்கம்
திருச்செந்துார் கோவில் கும்பாபிஷேகம் யாகசாலை பூஜையுடன் துவக்கம்
ADDED : ஜூலை 02, 2025 08:30 AM
துாத்துக்குடி; திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோவில் கும்பாபிஷேகம் வரும் 7ம் தேதி நடக்க உள்ள நிலையில், நேற்று யாகசாலை பூஜைகளுடன் துவங்கியது.
திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சுமார் 400 கோடி ரூபாய் மதிப்பில் பெருந்திட்ட வளாகப் பணிகள் நடந்து வருகிறது. திருப்பணிகள் முடிவடைந்ததை தொடர்ந்து கோவில் கும்பாபிஷேகம் வரும் 7 ல் காலை 6:15 முதல் 6:50 மணிக்குள் நடக்கிறது.
விழாவை முன்னிட்டு, நேற்று மாலை யாகசாலை பூஜைகள் துவங்கியது. இதற்காக ராஜகோபுர வாசல் அருகே 8,000 சதுர அடி பரப்பளவில், 76 குண்டங்களுடன் பிரம்மாண்டமாக யாகசாலை அமைக்கப்பட்டுள்ளது. 2,000 பக்தர்கள் பார்ப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதற்காக, நேற்று காலை மேளதாள வாத்தியங்கள் முழங்க யானை வலம் வர, கடலில் இருந்து தீர்த்தம் எடுத்து வரப்பட்டு சண்முக விலாச மண்டபத்தில் வைக்கப்பட்டது. சங்கல்பம் செய்து கோ பூஜை, கஜ பூஜை தொடர்ந்து கிரிப்பிரகாரம் சுற்றி யாகசாலை மண்டபத்திற்கு தீர்த்தம் எடுத்து வரப்பட்டது.
கோவில் தக்கார் அருள்முருகன், இணை கமிஷனர் ஞானசேகரன் மற்றும் கோவில் பணியாளர்கள், சிவாச்சாரியார்கள், திரிசுதந்திரர்கள், பக்தர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து இரவு 7:00 மணியளவில் யாகசாலை பூஜைகள் துவங்கியது. யாக சாலை வழிபாட்டு நாட்களில், வேத பாராயணம், திருமுறை விண்ணப்பம் மற்றும் நாதஸ்வர இன்னிசை நடைபெறுகிறது.
தினமும் காலை 7:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரையிலும், மாலை 4:00 மணி முதல் இரவு 9:00 மணி வரையிலும் 64 ஓதுவார் மூர்த்திகளைக் கொண்டு பக்க வாத்தியங்களுடன் பன்னிரு திருமுறைகள், திருப்புகழ் மற்றும் கந்தர் அனுபூதி முதலான செந்தமிழ் வேதங்கள் முற்றோதுதல் மற்றும் விமான கும்பாபிஷேகம் தமிழில் நடக்கிறது.
கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, கோவில் முன்பகுதி மலர்களாலும், வளாகம் முழுவதும் வண்ண விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்டுள்ளது. திருச்செந்துார் நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது.
பக்தர்கள் நிகழ்ச்சிகளை நேரலையில் பார்ப்பதற்காக 'எல்இடி' டி.வி.,க்கள் அமைக்கப்பட்டுள்ளன.