/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தினமும் கிடைக்கும் 20 கோடி லிட்டர் குடிநீர்! பல தடைகள்... கடும் பணிகள்... நிறைவேறியது திட்டம்
/
தினமும் கிடைக்கும் 20 கோடி லிட்டர் குடிநீர்! பல தடைகள்... கடும் பணிகள்... நிறைவேறியது திட்டம்
தினமும் கிடைக்கும் 20 கோடி லிட்டர் குடிநீர்! பல தடைகள்... கடும் பணிகள்... நிறைவேறியது திட்டம்
தினமும் கிடைக்கும் 20 கோடி லிட்டர் குடிநீர்! பல தடைகள்... கடும் பணிகள்... நிறைவேறியது திட்டம்
ADDED : பிப் 10, 2024 11:35 PM

திருப்பூர் ஆண்டுக்கு ஆண்டு வளர்ச்சியடைந்து வரும் மாநகரம். கடந்த 1965ல் முதல் குடிநீர் திட்டம், அப்போதைய நகராட்சி நிர்வாகம் சார்பில், ஏற்படுத்தப்பட்டது. மேட்டுப்பாளையம் பவானி ஆற்றிலிருந்து தினமும் 50 லட்சம் லிட்டர் அளவு குடிநீர் சுத்திகரிப்பு செய்து வழங்கப்பட்டது. கடந்த 1993ம் ஆண்டில் குடிநீர் வாரியம் மூலம் 2வது குடிநீர் திட்டம் தினமும் 3 கோடி லிட்டர் என்ற அளவில் கொண்டு வரப்பட்டது. புதிய திருப்பூர் மேம்பாட்டு கழகம் வாயிலாக 3வது குடிநீர் திட்டம் காவிரி ஆற்றிலிருந்து தினமும் 9 கோடி லிட்டர் என்றளவில் வீடு மற்றும் தொழிற்சாலைகள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது.
இந்நிலையில், மாநகராட்சி எல்லை விரிவாக்கம், மக்கள் தொகை பெருக்கம் குடிநீர் தேவை அதிகரிப்பு போன்ற காரணங்களால் புதிதாக 4வது குடிநீர் திட்டம் ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டது. இதற்காக, 'அம்ரூத்' திட்டத்தில் 1064 கோடி ரூபாய் மதிப்பில், மேட்டுப்பாளையத்திலிருந்து குடிநீர் கொண்டு வரும் திட்டம் உருவாக்கப்பட்டது.
கடந்த 2019 பிப்., 28ல் அப்போதைய முதல்வர் பழனிசாமி திட்டத்துக்கான அடிக்கல் நாட்டி துவங்கி வைத்தார்.
தினமும் 20 கோடி லிட்டர்
இத்திட்டம், முதலாவது குடிநீர் திட்டத்துக்கான நீர் உறிஞ்சும் பகுதிக்கு சிறிது தொலைவில், பவானி ஆற்றில், 24 கோடி ரூபாய் மதிப்பில் தடுப்பணை அமைத்து, குடிநீர் உறிஞ்சும் வகையில் பணி மேற்கொள்ளப்பட்டது. தலைமை நீரேற்று நிலையத்தில், தினமும் ஏறத்தாழ 20 கோடி லிட்டர் அளவில் நீர் எடுத்து, 19 கி.மீ., துாரம் ராட்சத குழாய்கள் வழியாக குருக்கிலிபாளையத்தில் உள்ள சுத்திகரிப்பு மையத்தில் கொண்டு வந்து 5 கட்டமாக சுத்திகரிப்பு செய்யப்படுகிறது.
இதற்கான நீர் உந்து மையங்கள் 5 இடங்களில் அமைக்கப்பட்டுள்ளது. சுத்திகரிப்பு மையம் மாநகராட்சி பெயரில், தன்னார்வலர்கள் நிதியுதவியில் பெறப்பட்ட 6 ஏக்கர் பரப்பில் கட்டப்பட்டுள்ளது. சர்வதேச தரத்திலான சுத்திகரிப்பு கருவிகள் மூலம் சுத்திகரிப்பு செய்யப்படுகிறது.
சுத்திகரிப்பு செய்யப்பட்ட குடிநீர் 145 கி.மீ., நீளத்தில் பல்வேறு ஊர்களைக் கடந்து திருப்பூர் மாநகராட்சி பகுதிக்கு வந்து சேர்கிறது.
2.04 லட்சம் குடிநீர் இணைப்பு
இத்திட்டத்துக்காக புதிதாக மாநகராட்சி பகுதியில் 29 இடங்களில் பெரிய அளவிலான மேல்நிலை மற்றும் தரை மட்டத் தொட்டிகள் கட்டப்பட்டுள்ளன. அத்துடன் முன்னர் பயன்பாட்டில் உள்ள தொட்டிகளுடன் சேர்த்து மொத்தமாக 70 தொட்டிகளில் நீர் நிரப்பப்படுகிறது.
இவற்றிலிருந்து பகுதி வாரியாக குடிநீர் வினியோகம் மேற்கொள்ளப்படுகிறது. இத்திட்டத்தில் மொத்தம் 2,04,842 கட்டடங்களுக்கு குழாய் இணைப்பு வழங்கி குடிநீர் வழங்கப்படும். குடிநீர் வினியோகத்துக்காக மட்டும் ஏறத்தாழ 1100 கி.மீ., நீளத்துக்கு குழாய்கள் பதிக்கப்பட்டுள்ன.
இது வரை வாரக்கணக்கிலும், மாதக்கணக்கிலும் வழங்கப்பட்ட குடிநீர் குறைந்த பட்சம் 3 நாளுக்கு ஒரு முறை என்ற கணக்கில் பெரும்பாலான பகுதிகளுக்கும் சில பகுதிகளில் தினமும் குடிநீர் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடின உழைப்பால் நிறைவேற்றம்
மாநகராட்சியின் 4வது குடிநீர் திட்டம் எளிதாக செயல்பாட்டுக்கு வந்து விடவில்லை. பல்வேறு தடைகள் மற்றும் இடையூறுகளைக் கடந்து, நுாற்றுக்கணக்கான தொழிலாளர்களின் இரவு, பகல், மழை, வெயில் பாராத கடும் உழைப்பால் நிறைவேறியுள்ளது.
மேட்டுப்பாளையம், அன்னுார் உள்ளிட்ட பகுதிகளிலும், அவிநாசி, திருப்பூர் பகுதிகளில் ரயில்வே பாதை, தேசிய நெடுஞ்சாலை பகுதிகளில் அவற்றைக் கடந்து குழி தோண்டி, குழாய் பதிப்பில் ஏராளமான சிக்கல்கள் ஏற்பட்டன.
மாநகராட்சி நிர்வாகத்தின் கடும் மற்றும் விடாமுயற்சியும் திட்டப் பணிகள் மேற்கொள்ள பெரும் உதவிகரமாக இருந்தது. வழியோரப் பகுதி உள்ளாட்சி அமைப்புகள், மக்கள் பிரதிநிதிகள், அரசு துறை அதிகாரிகள் உள்ளிட்ட பல தரப்பினரிடையே பல கட்ட பேச்சுவார்த்தைகள், விளக்க கூட்டங்கள் நடத்தி, சுமூகமான முறையில் குழாய்கள் பதிப்பு பணி நடந்தது.
குடிநீர் திட்டப் பணிகளை முழு முயற்சியுடன் மேற்கொண்டு நிறைவேற்றும் வகையில், செயல்பட்ட மாநகராட்சி நிர்வாகத்துக்கு பாராட்டு தெரிவிக்கும் வகையில், மாநகராட்சி மன்ற கூட்டத்தில், சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அனைத்து கட்சி கவுன்சிலர்களும் இச்சிறப்பு தீர்மானத்துக்கு ஆதரவு தெரிவித்தனர்.
இன்று முதல் இத்திட்டம் முறைப்படி செயல்பாட்டுக்கு வருகிறது.
----
அன்னுார் அருகே கட்டப்பட்டுள்ள திருப்பூர் 4வது குடிநீர் திட்டத்துக்கான சுத்திகரிப்பு மையம்.

