/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வன எல்லை கிராமங்களில் விலங்குகளால் சாகுபடி செய்ய முடியல! குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் ஆவேசம்
/
வன எல்லை கிராமங்களில் விலங்குகளால் சாகுபடி செய்ய முடியல! குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் ஆவேசம்
வன எல்லை கிராமங்களில் விலங்குகளால் சாகுபடி செய்ய முடியல! குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் ஆவேசம்
வன எல்லை கிராமங்களில் விலங்குகளால் சாகுபடி செய்ய முடியல! குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் ஆவேசம்
ADDED : செப் 18, 2025 09:43 PM

உடுமலை; 'வனவிலங்குகள் ஏற்படுத்தி வரும் தொடர் சேதத்தால், வன எல்லை கிராமங்களில் எவ்வித சாகுபடியும் செய்ய முடியவில்லை; மனிதர்களுக்கும் பாதுகாப்பில்லாத சூழல் நிலவுகிறது,' என குறை தீர் கூட்டத்தில், விவசாயிகள் ஆவேசமாக பேசினர்.
உடுமலை மாவட்ட வன அலுவலகத்தில், விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் நேற்று நடந்தது. ஆனைமலை புலிகள் காப்பக துணை இயக்குனர் ராஜேஷ் தலைமை வகித்தார். உடுமலை, அமராவதி, கொழுமம், வந்தரவு, காங்கயம் வனச்சரக அலுவலர்கள், வனவர்கள் பங்கேற்றனர்.
விவசாயிகள் பேசியதாவது:
வன எல்லை மட்டுமின்றி, 60 கி.மீ., தள்ளியுள்ள உப்பாறு படுகை கிராமங்களிலும் புதர்களில் வசிக்கும் காட்டுப்பன்றிகளால் பாதிப்பு ஏற்படுகிறது.
பயிர் சேதம் மட்டுமின்றி, கால்நடைகளுக்கும், மனிதர்களுக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது; தொழிலாளர்கள் பணிக்கு வருவதில்லை.
காட்டுப்பன்றிகள் தாக்கி, பலர் காயமடைந்து, வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். வனத்துறையால், குறைந்த இழப்பீடு மட்டுமே பயிர்களுக்கும், மனிதர்களுக்கும் வழங்கப்படுகிறது.
'காட்டுப்பன்றிகளை கூண்டு வைத்து பிடிப்பது சாத்தியம் இல்லை; 20க்கும் மேற்பட்ட பன்றிகள் கூட்டத்தை, ஒரு கூண்டு வைத்து பிடிக்க முடியுமா; ஆக்ரோஷமாக இருக்கும் அவற்றை கொண்டு செல்ல முடியுமா,' என்பது கேள்விக்குறியாக உள்ளது.
பிடிபடும் பன்றிகளை வனத்திற்குள் விட்டால், மீண்டும் அவை கிராமங்களுக்குள் வந்து விடுகிறது. எனவே, வன விலங்குகள் பட்டியலிருந்து காட்டுப்பன்றிகளை நீக்கி, தனிக்குழு அமைத்து அவற்றை சுட்டுக்கொன்று கட்டுப்படுத்த வேண்டும்.
குரங்குகளால் பாதிப்பு வன எல்லை கிராமங்களில், குரங்கு, காட்டுப்பூனை, நாய் ஆகியவற்றால், தேங்காய், இளநீர் பெருமளவு சேதமடைகிறது; இழப்பீடு பெற முடிவதில்லை. கூட்டம், கூட்டமாக சுற்றும் காட்டுப்பன்றிகள் பாதிப்பு இரவிலும், பகலில் மயில்கள் தொல்லை என விவசாயிகள் பயிர் சாகுபடி மேற்கொள்ள முடிவதில்லை.
ஒரு தென்னங்கன்று, ஆயிரம் ரூபாய்க்கு வாங்கி நடவு செய்து, நான்கு ஆண்டுகள் பராமரித்த பிறகு, வனவிலங்குகள் அவற்றை சேதப்படுத்துகின்றன; நிவாரணம் ரூ. 500 மட்டுமே வழங்கப்படுகிறது.
மக்காச்சோளம், காய்கறி பயிர்களுக்கு, 50 ஆயிரத்திற்கும் மேல் செலவாகிறது; 5 ஆயிரம் மட்டுமே நிவாரணமாக கிடைக்கிறது. பயிர் வாரியாக செலவினத்தை ஆய்வு செய்து, இழப்பீட்டு தொகையை அதிகரிக்க வேண்டும்.
அனுமதி கொடுங்க! உடுமலை- மூணாறு ரோட்டில், தமிழக பகுதியில் ரோடு குறுகலாகவும், குண்டும், குழியுமாக உள்ளது. ரோட்டின் இரு புறமும் மண் அரிக்கப்பட்டு, பள்ளமாகியுள்ளது. வனத்துறை எதிர்பார்ப்பால், பராமரிப்பு பணி கிடப்பில் போடப்பட்டுள்ளது. ரோட்டை பராமரிக்க வனத்துறை அனுமதி வழங்க வேண்டும்.
தமிழகத்திலிருந்து, ஒன்பதாறு செக்போஸ்ட், சின்னாறு வழியாக அதிக எடையுள்ள லாரிகளில், கனிம வளங்கள் கடத்தப்படுகிறது. பொதுமக்கள் சென்றால், சோதனை செய்யும் வனத்துறையினர் கனிம வளக்கடத்தல் கும்பலை கண்டு கொள்வதில்லை.
திருமூர்த்திமலை, காண்டூர் கால்வாய் அருகே, வனப்பகுதியில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள மரங்கள் வெட்டி, கடத்தப்பட்டுள்ளது. வன விலங்குக்கான குடிநீர் தொட்டியின் கம்பி வேலியை உடைத்து, தற்போது அவ்விடத்தில் வீட்டு மனை பட்டா வழங்க முயற்சிக்கின்றனர்.
வனம், வன விலங்குகள், திருமூர்த்தி அணையின் சூழல் பாதிக்கும் இத்திட்டத்தை வனத்துறையினர் தடுக்க வேண்டும்.
வனத்திலிருந்து, வன விலங்குகள் வெளியேறுவதை தடுக்க, உறுதியான கம்பியுடன் கூடிய, தடுப்பு வேலி அமைக்க வேண்டும்.
வனத்துறையினர் கூறுகையில், 'காட்டுப்பன்றிகளை கட்டுப்படுத்த, கூண்டு தயார் செய்யப்பட்டுள்ளது. விவசாயிகள் தகவல் கொடுத்தால், அப்பகுதி வந்து, பிடிக்கப்படும்.
இழப்பீடு அதிகரிப்பது, வன விலங்குகள் பட்டியலிலிருந்து நீக்குவது குறித்து அரசுக்கு அறிக்கை அனுப்பப்படும்,' என்றனர்.

