/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அத்திக்கடவு - அவிநாசி திட்டம்; இறுதிக்கட்டத்தில் வெள்ளோட்டம்!
/
அத்திக்கடவு - அவிநாசி திட்டம்; இறுதிக்கட்டத்தில் வெள்ளோட்டம்!
அத்திக்கடவு - அவிநாசி திட்டம்; இறுதிக்கட்டத்தில் வெள்ளோட்டம்!
அத்திக்கடவு - அவிநாசி திட்டம்; இறுதிக்கட்டத்தில் வெள்ளோட்டம்!
ADDED : ஜன 14, 2024 12:39 AM
திருப்பூர்:அத்திக்கடவு - அவிநாசி நீர் செறிவூட்டும் திட்டப்பணியில் வெள்ளோட்டம் பார்க்கும் பணி, 99 சதவீதம் நிறைவு பெற்றுள்ள நிலையில், திட்டத்தை செயல்பாட்டுக்கு கொண்டு வருவதற்கான திட்டமிடலில், நீர்வளத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
திருப்பூர், கோவை, ஈரோடு மாவட்ட மக்களின், 60 ஆண்டுகால எதிர்பார்ப்பான, அத்திக்கடவு - அவிநாசி நீர் செறிவூட்டும் திட்டப்பணி நிறைவு பெற்றிருக்கிறது. 1,045 குளம், குட்டைகளில் நீர் செறிவூட்டும் வகையில் கட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டிருக்கிறது; இதற்கான பிரதான மற்றும் இணைப்புக் குழாய் என, 1,046 கி.மீ., துாரத்துக்கு குழாய் பதிக்கப்பட்டிருக்கிறது.
மேட்டுப்பாளையம் பவானி ஆற்றுநீரையே, ஆதாரமாக கொண்டு திட்டப்பணி மேற்கொள்ளப்படவுள்ள நிலையில், ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து, காலிங்கராயன் அணைக்கட்டு பகுதியில் வெளியேறும் உபரிநீர் தான், இத்திட்டத்தின் கீழ் குளம், குட்டைகளில் நிரப்பப்பட உள்ளன.
இருப்பினும், பவானி ஆற்றையொட்டி அமைக்கப்பட்டுள்ள அத்திக்கடவு திட்ட நீரேற்ற நிலைய பகுதியில், தேங்கிய நீரை பயன்படுத்தி, குளம், குட்டைகளுக்கு நீர் நிரப்பி வெள்ளோட்டம் பார்க்கப்பட்டது. நீலகிரியில் பெய்த தென் மேற்கு பருவமழையால், பவானி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்த நிலையில், வெள்ளோட்டம் பார்க்கும் பணி எளிதானது.
நீர்வளத்துறை கோவை மண்டல தலைமை பொறியாளர் சிவலிங்கம் கூறியதாவது:
அத்திக்கடவு திட்டத்தில், 1,045 குளம் குட்டைகளில், இனி, 5 குட்டைகளில் மட்டுமே நீர் நிரப்பி, வெள்ளோட்டம் பார்க்கப்பட வேண்டியிருக்கிறது. எஞ்சிய குட்டைகளில் இன்னும் சில நாட்களில் வெள்ளோட்டம் பார்க்கப்படும். தொடர்ந்து, ஒட்டு மொத்த திட்டத்தில் உள்ள நிறை, குறைகள் ஆராயப்படும்.
ஒப்பந்தப்படி, 5 ஆண்டுகளுக்கு 'எல் அண்ட் டி' நிறுவனத்தினரே இத்திட்டப்பணியை செயல்படுத்தும் பொறுப்பை ஏற்பர்; அந்த வகையில், திட்டப்பணியை செயல்பாட்டுக்கு கொண்டு வரும் அதிகாரபூர்வ அறிவிப்பு, அரசின் சார்பில் முடிவு செய்யப்படும்.
விடுபட்ட குளம், குட்டைகளை திட்டத்தில் சேர்க்க வேண்டும் என்ற விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, ஈரோட்டில் உள்ள நீர்வளத்துறை (திட்டம்) அலுவலகத்தில், விவசாயிகளால் வழங்கப்படும் விடுபட்ட குளம், குட்டைகள் தொடர்பான விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டுள்ளன; நுாற்றுக்கணக்கில் விண்ணப்பங்கள் வழங்கப்பட்டுள்ளன. இரண்டாவது திட்டம் குறித்து, அரசு முடிவெடுக்கும்.
இவ்வாறு, அவர் கூறினார்.

