/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அவிநாசி விழாக்கோலம்! தேவலோகமாக ஜொலிக்கிறது
/
அவிநாசி விழாக்கோலம்! தேவலோகமாக ஜொலிக்கிறது
ADDED : பிப் 02, 2024 12:22 AM

வண்ண மலர் அலங்காரம், மாவிலை தோரணம், வரிசையாய் நட்டிய வாழை, கமுகு என, அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில் வளாகம், தேவலோகமாக காட்சியளிக்கிறது.
'காசியில் வாசி அவிநாசி' என்றுரைக்கப்படும், அவிநாசி திருத்தலம், மூவர்கள் ஆட்சிக்காலத்தில் இருந்தே சிறப்புற்று விளங்கியதை, கண்ணுக்கு புலப்படும் கல்வெட்டுகளால் அறிய முடிகிறது. பிரம்மதேவன் முதலாகிய தேவாதிதேவர்களும் இங்கு வந்து சிவனை வழிபட்டு, சாப விமோசனம் பெற்றது, தலபுராணம் வாயிலாக தெரிய வருகிறது.
காலத்தால் கணிக்க முடியாத, பழமை வாய்ந்த அவிநாசித்திருக்கோவில், இன்று கும்பாபிேஷக விழா காண்கிறது. அரண்மனை போன்ற யாகசாலைகள், ஒரு கி.மீ., தொலைவுக்கு பரவியுள்ள சுகந்த நறுமணம், சிவாச்சார்யார்களின் வேதாகம உச்சாடனம் என, கடந்த சில நாட்களாக, நகரமே விழாக்கோலம் பூண்டியிருக்கிறது.
மூலவர் கருவறை மண்டபம், முன்மண்டபம், கொடிமரம், ராஜகோபுர நுழைவாயில், அம்மன் கோவில் மண்டபம் என, அனைத்து இடங்களும் மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. மலர் தோரணங்களால், பெருங்கருணை நாயகியுடன் சிவன் அருளாட்சி புரியும் அவிநாசித்தலம், பிரகாச ஒளியுடன் ஜொலித்துக்கொண்டிருக்கிறது.
காலம் காலமாக, கும்பாபிேஷகம் நடந்தாலும், எட்டு திசைகளில் இருந்து வரும் பக்தர் கூட்டத்துக்கு குறைவே இருக்காது! இருப்பினும், தொழில் ரீதியாக பொருளாதார வளர்ச்சி பெற்றுள்ள திருப்பூர் மாவட்ட மக்கள், இறைசேவையிலும் சளைத்தவர்கள் இல்லை. அதற்கு உதாரணம், தி சென்னை சில்க்ஸ் குழுமம் சார்பில் உருவாகியுள்ள திருமாளிகை பத்தி மண்டபம்.
நுாறு நாட்களில் புயல் வேகத்தில் நடந்த திருப்பணியில், மதிப்பிடவே முடியாத அளவு உயர்வாது கொடிமரம். ஒரே மரத்தை நட்டு, தகடுகள் பதித்து, தங்கப்பூச்சால் தகதகக்கிறது, கொடிமரம்.
கொங்கு மண்டலத்தில் வேறு எங்கும் இல்லாத அளவுக்கு, கொடிமரம் இறையாற்றலை ஈர்த்து கொடுக்கும் என்று பக்தர்கள் கண்ணீர் மல்க மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர்.
நீண்ட நாட்களாக நடந்து வந்த திருப்பணிகள் முடிந்தது, ராஜகோபுரங்கள் பெயின்டிங் பணியால் ஒளிர்ந்து கொண்டிருக்கின்றன. மின்னொளியில் கோவில் ஜொலிப்பது பெரியதல்ல என்றாலும், கோவில் வளாகம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, நறுமணம் வீசி பக்தர்களை வசீகரிக்கிறது.
அனேகம் திருவிளையாடல்களை நிகழ்த்தி அவிநாசிலிங்கேஸ்வரர் குடிகொண்டிருக்கும், அழிவில்லா அருளாற்றல் நிறைந்த அவிநாசித்தலத்தில், நல்லதொரு நாளும், கோளும் அமைந்த நல்வேளையில், இன்று கும்பாபிேஷகம் நடக்கிறது.

