/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மத்திய பட்ஜெட்; பொதுமக்கள் வரவேற்பு
/
மத்திய பட்ஜெட்; பொதுமக்கள் வரவேற்பு
ADDED : பிப் 02, 2024 12:27 AM

திருப்பூர்;மத்திய பட்ஜெட் தொடர்பாக பொதுமக்களின் கருத்துகள்:
வேளாண் துறைக்கு உறுதுணை
மோகன், இயக்குனர், அவிநாசியப்பர் உழவர் உற்பத்தியாளர் நிறுவனம்.
நம் நாட்டின் முக்கியமான முதன்மையான தொழிலாக உள்ள வேளாண்மையை மேம்படுத்தும் விதமாக மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளது. விவசாய தொழில் மட்டுமின்றி, அதில் ஈடுபட்டுள்ள விவசாயிகளும் பயன்பெறும் விதமாக மத்திய அரசு செயல்பட்டு வருகிறது.
கிசான் விகாஸ் திட்டத்தில் 11.8 கோடி விவசாயிகள் பயன் பெற்று வருகின்றனர். நான்கு கோடி விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு வழங்கப்பட்டுள்ளது. கால் நடை வளர்ப்பு ஊக்குவிக்கும் வகையில் மேற்கொள்ளப்படும் திட்டங்களும் வேளாண் துறைக்கு மிகுந்த உறுதுணையாக அமையும். பேட்டரி வாகனங்கள் பயன்பாடு, சோலார் மின் உற்பத்தி மற்றும் பயன்பாட்டுக்கான திட்டங்கள் சுற்றுச் சூழல் பாதுகாப்பு அடிப்படையில் அறிவிக்கப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது.
பெண்கள் மேம்பட வழி
சுகன்யா, தொழில் முனைவோர்: இளம் தொழில் முனைவோர், சுய தொழில் மற்றும் வேலை வாய்ப்பு தேடும் இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. அவ்வகையில் இன்றைய இளைய சமுதாயம் மேம்படுத்திய திறனுடன் வேலை வாய்ப்பை, தொழில் வாய்ப்புகளை பெற்று வருகின்றனர். இதுவரை 1.4 கோடி பேர் பயிற்சி பெற்றுள்ளனர்.முத்ரா கடன் திட்டத்தில் கடந்த 10 ஆண்டுகளில் 30 கோடி பெண்கள் கடன் பெற்றுள்ளனர். இதன் மூலம் மகளிர் மேம்பாடு பெற்றுள்ளனர். ஒரு கோடி பெண்கள், மத்திய அரசின் மகளிர் சுய உதவிக்குழு உள்ளிட்ட மகளிர் மேம்பாடு திட்டங்களின் கீழ் பயன் பெற்று, இன்று லட்சாதிபதியாக உயர்ந்துள்ளனர். ஒரு குடும்பத்தின் வரவு செலவு பட்ஜெட்டை குடும்ப தலைவி நிர்வகிப்பது போல், மத்திய நிதி அமைச்சர் ஒரு பெண்ணாக இருந்து இந்நாட்டின் பட்ஜெட்டை கச்சிதமாக வடிவமைத்துள்ளார் என்று கூறலாம்.
மக்கள் நலனில் அக்கறை
மகேஸ்வரி, பர்னிச்சர் விற்பனையாளர்:
மத்திய அரசு மகளிர் மேம்பாட்டுக்காக சுய உதவிக்குழுக்கள் ஊக்குவித்தல் உள்ளிட்ட பல்வேறு மகளிர் நலத் திட்டங்கள் மூலம் பெண்கள் முன்னேற்றத்துக்கு உதவி வருகிறது. 'முத்ரா' கடன் திட்டம் போன்ற திட்டங்களும், மகளிர் சுய தொழில் மற்றும் சிறு வர்த்தக தொழில் நிறுவனங்கள் துவங்கவும், பொருளாதாரத்தில் பெண்கள் சுயமாக உயரவும் வழி வகுத்துள்ளது.
பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் இது வரை 5 கோடி வீடுகள் கட்டித்தரப்பட்டுள்ளன. அடுத்த 5 ஆண்டில் மேலும் 2 கோடி வீடுகள் கட்டித் தரப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வீடுகளில் சோலார் பேனல் அமைப்பதன் மூலம் மின்சார செலவு குறையும்.தனி நபர், குடும்பம் போன்றவற்றின் மேம்பாடு தான், ஒட்டு மொத்த நாட்டின் வளர்ச்சி என்ற அடிப்படையில் ஒவ்வொரு குடிமகனின் நலனிலும் அக்கறை கொண்ட பட்ஜெட்டை மத்திய அரசு அளித்துள்ளது.
இளைஞர்களுக்கு வாய்ப்பு பெருகும்
கிருபாகரன், கல்லுாரி மாணவர்:
'மேக் இன் இந்தியா' மூலம் மேலும் புதிய வேலைவாய்ப்பு, நீர்பாசன, விவசாய திட்டங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு அறிவிக்கப்பட்டுள்ளது, வரவேற்கத்தக்கது. கிராமப்புற மாணவர் பயன்பெற கூடுதல் கல்வி 'டிவி', புதிதாக 200 சேனல், வகுப்புக்கு ஒரு 'டிவி' ஆகியன கல்வியை அடுத்த நிலைக்கு கொண்டு செல்லும். நாடு முழுதும் தேசிய டிஜிட்டல் நுாலகம் அமையும் என்ற அறிவிப்பால், படிப்பில் ஆர்வம் பெருகும்; இளைஞர்களுக்கான வாய்ப்புகள் அதிகரிக்கும்.
வரி செலுத்துவோருக்கு வாய்ப்பு
செந்தில்ராஜா, ஆடிட்டர் அலுவலக பணியாளர்:
வருமான வரி உச்ச வரம்பு மற்றும் வருமான வரி விகிதங்களில் எந்த மாற்றமும் செய்யப்படாதது வரவேற்கத்தக்கது. கூட்டுறவு சங்கங்களுக்கான வரி, 15 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது; அதே நேரம், அரசு ஊழியர்களுக்கான வரிச்சலுகை, 16 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. திருத்தப்பட்ட வருமான வரி கணக்கை இரண்டு ஆண்டுகளுக்குள் தாக்கல் செய்ய வரி செலுத்துவோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது, வரவேற்கதக்கது.
மகளிருக்கு அதிகாரம்
ரேவதி, கல்லுாரி மாணவி:
இளையோர் வேலைவாய்ப்புக்கு முக்கியத்துவம் தரப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளதை வரவேற்கிறேன். முன்னுரிமை வழங்கப்படும் நான்கு தரப்பினரில், பெண்களையும் சேர்த்துக் கொண்டுள்ளனர். இதன் மூலம் மகளிருக்கு அதிகாரம் கிடைக்கும். புதிய செவிலியர் பயிற்சி கல்லுாரிகள் துவங்கப்படுவதால், பெண்களுக்கான வேலைவாய்ப்பு அதிகரிக்கும்.

