/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சில்லிங் விற்பனையில் போலியும் 'ஆறாய்' ஓடுது!
/
சில்லிங் விற்பனையில் போலியும் 'ஆறாய்' ஓடுது!
ADDED : மார் 26, 2025 09:00 PM
உடுமலை நகரில், 5 டாஸ்மாக் மதுக்கடைகள் உட்பட, மடத்துக்குளம், உடுமலை தாலுகாவில், 30 டாஸ்மாக் மதுக்கடைகள் உள்ளன. இங்கு, பாட்டிலுக்கு, 10 ரூபாய் கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதோடு, முறையான அனுமதியின்றி பார்களும் செயல்படுகின்றன.
குறிச்சிக்கோட்டை, எலையமுத்துார் உள்ளிட்ட பகுதிகளில், 15க்கும் மேற்பட்ட பார்கள் அனுமதியின்றி செயல்படுகின்றன. அனைத்து டாஸ்மாக் பார்களிலும், அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் டம்ளர்கள் விற்பனை செய்யப்படுகிறது.
பார்களில், கடை திறக்கும் நேரத்திற்கு முன்பும், பின்புறம், பாட்டிலுக்கு, 50 ரூபாய் வரை கூடுதல் விலைக்கு, 24 மணி நேரமும் தடையின்றி, 'சரக்கு' விற்பனை அமோகமாக நடக்கிறது.
இதனை கண்காணிக்க வேண்டிய டாஸ்மாக் அதிகாரிகள், போலீசார் மற்றும் அந்தந்த பகுதி ஆளும்கட்சியினருக்கு, மாதம் தோறும் , ரூ. 10 ஆயிரம் முதல், 30 ஆயிரம் ரூபாய் வரை மாமூல் வழங்கப்படுவதால், அனுமதியற்ற பார் மற்றும் தடையின்றி மது விற்பனை குறித்து யாரும் கண்டு கொள்வதில்லை.
உடுமலை நகரில், நாராயணன் காலனி, யூனியன் ஆபீஸ் ஆகிய பகுதிகளில், அரசு அனுமதியின்றி, தனியார் இடங்களில், மது விற்பனை நடக்கிறது.
இங்கு டாஸ்மாக் மது மட்டுமின்றி, வெளி மாநில மது வகைகள், போலி மது விற்பனை நடக்கிறது. விஷ சாராயம் அருந்தி, 'பலி' யான சம்பவங்கள் தொடரும் நிலையில், உடுமலையில் இது போன்று சம்பவங்கள் நடக்கும் அபாயம் உள்ளது.
தளி, குடிமங்கலம், அமராவதி நகர், உடுமலை போலீஸ் எல்லைகளுக்குட்பட்ட பல கிராமங்களில், பெட்டிக்கடைகள், ஓட்டல்களில், 'சில்லிங்' மது விற்பனையும், போலீசார் 'ஆசி'யுடன் நடக்கிறது.
உடுமலை பகுதியில், மதுக்கடைகள் குறைப்பு திட்டத்தின் கீழ், 4 டாஸ்மாக் மதுக்கடைகள் கடந்தாண்டு மூடப்பட்டன. ஆனால், தற்போது, 8 எப்.எல்., 2 பார்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மனமகிழ் மன்றங்கள் என்ற பெயரில் உரிமம் வழங்கப்படும் இங்கு, அதில் உறுப்பினர்களாக உள்ளவர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும், என்ற விதி உள்ளது.
ஆனால், உடுமலை பகுதியிலுள்ள அனைத்து எப்.எல்., 2 பார்களிலும், கட்டுப்பாடு இல்லாமல், அனைவருக்கும் மது விற்பனை செய்யப்படுகிறது. இதனை கண்காணிக்க வேண்டிய அதிகாரிகளும், போலீசாரும் கண்டு கொள்வதில்லை.
சட்ட விரோத மது விற்பனைக்கு பெரும் தொகை, அதிகாரிகளுக்கு வழங்கப்படுவதால், உடுமலை பகுதிகளில், 24 மணி நேரமும் மது விற்பனை அமோகமாக நடந்து வருகிறது.