/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பூண்டி கோவில் அருகே மரங்கள் வெட்டிச்சாய்ப்பு; விவசாயிகள் குறைகேட்பு கூட்டத்தில் கிளம்பிய சர்ச்சை
/
பூண்டி கோவில் அருகே மரங்கள் வெட்டிச்சாய்ப்பு; விவசாயிகள் குறைகேட்பு கூட்டத்தில் கிளம்பிய சர்ச்சை
பூண்டி கோவில் அருகே மரங்கள் வெட்டிச்சாய்ப்பு; விவசாயிகள் குறைகேட்பு கூட்டத்தில் கிளம்பிய சர்ச்சை
பூண்டி கோவில் அருகே மரங்கள் வெட்டிச்சாய்ப்பு; விவசாயிகள் குறைகேட்பு கூட்டத்தில் கிளம்பிய சர்ச்சை
ADDED : மார் 26, 2025 12:26 AM

திருப்பூர்; திருமுருகன்பூண்டி, திருமுருகநாத சுவாமி கோவில் எதிரே உள்ள மரங்கள் வெட்டப்பட்டது குறித்து, கோட்ட அளவிலான விவசாயிகள் குறைகேட்பு கூட்டத்தில் சர்ச்சை கிளம்பியது.
திருப்பூர் வருவாய் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைகேட்பு கூட்டம், ஆர்.டி.ஓ., அலுவலக கூட்ட அரங்கில் நேற்று நடைபெற்றது. ஆர்.டி.ஓ., மோகனசுந்தரம், விவசாயிகளிடம் குறைகளை கேட்டார். திருப்பூர் வடக்கு, தெற்கு, அவிநாசி, பல்லடம், ஊத்துக்குளி ஆகிய ஐந்து தாலுகாக்களை சேர்ந்த விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் பங்கேற்று, பிரச்னைகள் குறித்து பேசினர்; கோரிக்கை மனு அளித்தனர்.
மங்கலம் கிராம நீரினைபயன்படுத்தும் பாசன விவசாயிகள் சங்க தலைவர் பொன்னுசாமி:
திருப்பூர் மின் பகிர்மான வட்டத்தின் கீழ், 10 உதவி செயற் பொறியாளர் அலுவலகங்கள், 30 உதவி மின் பொறியாளர் அலுவலகங்கள் உள்ளன. மின்பகிர்மான வட்டத்தில், 3 லட்சம் மின் இணைப்புகள் உள்ளன. தடையில்லாத மின்சாரம் வழங்கப்படும் என, தமிழக அரசு அறிவித்துள்ளது. திருப்பூர் மின் பகிர்மான வட்டத்தில் கடந்த ஓராண்டாக மேற்பார்வை பொறியாளர் பணியிடமும், ஆறு மாதங்களாக செயற் பொறியாளர் பணியிடமும் காலியாக உள்ளன. பொறுப்பு அதிகாரிகளால் சரியான நடவடிக்கைகள் எடுக்கமுடியவில்லை. மின் நுகர்வோர், தங்கள் குறைகளுக்கு தீர்வு காணமுடியாமல் தவிக்கின்றனர்.
சமூக ஆர்வலர் சரவணன்:
திருமுருகன்பூண்டி திருமுருகநாத சுவாமி கோவிலுக்கு எதிரே நெடுஞ்சாலையில் உள்ள, 20 ஆண்டு பழமையான வேப்பமரங்களை சிலர், அடியோடு வெட்டி வீழ்த்தி, கிளைகளை எடுத்துச்சென்றுவிட்டனர். 40 அடி உயரத்தில் நின்றிருந்த வேப்ப மரங்கள், மொட்டையாக்கப்பட்டு 10 அடி மட்டும் எஞ்சியுள்ளன. சமீபத்தில், திருமுருகநாத சுவாமி கோவில் தேர்த் திருவிழா நடந்தது. இதற்கு இடையூறாக இருந்த கிளைகளை மட்டும் வெட்டுவதற்கு கோவில் நிர்வாகத்துக்கு அனுமதி அளித்ததாகவும், தனியார் யாரும் மரங்களை வெட்டி எடுக்கவில்லை எனவும், வருவாய்த்துறையினர் தவறான தகவல் அளிக்கின்றனர்.
தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் குமார்:
கோட்ட அளவிலான விவசாயிகள் குறைகேட்பு கூட்டத்தின் துவக்கத்தில், வேளாண், தோட்டக்கலை, வேளாண் பொறியியல் துறை சார்ந்து செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து விவசாயிகளுக்கு விளக்கம் அளிக்க வேண்டும். பல்லடத்தில், 'டயாபர்' உற்பத்தி நிறுவனம் அமைந்தால், சுற்றுச்சூழல் கடுமையாக பாதிக்கப்படும் என, பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில், அந்நிறுவனத்துக்கு கட்டட அனுமதி அளிக்கப்பட்டிருப்பது கவலை அளிக்கிறது. உடனடியாக கட்டட அனுமதியை ரத்து செய்யவேண்டும். அத்திக்கடவு - அவிநாசி திட்ட நீர் நிரம்பும் குளம், குட்டைகளில் உள்ள சீமை கருவேல மரங்களை அகற்றவேண்டும். உள்ளாட்சி அமைப்புகள் தெருநாய்களை கட்டுப்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இவ்வாறு, விவசாய அமைப்பினரும், விவசாயிகளும் பிரச்னைகளை சுட்டிக்காட்டி பேசினர்.
'ஆப்சென்ட்'ஆபீசர்களுக்குஎச்சரிக்கை
வருவாய் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைகேட்பு கூட்டத்தில், அனைத்து அரசுத்துறை சார்ந்த கோட்ட அளவிலான அதிகாரிகள் பங்கேற்க வேண்டும் என்பது விதிமுறை. நேற்று நடந்த கூட்டத்தில், கால்நடைத்துறை, அரசு போக்குவரத்து கழகம் சார்பில் யாரும் பங்கேற்கவில்லை.
அவிநாசி பி.டி.ஓ., காலதாமதமாகவே வந்தார். குறைகேட்பு கூட்டத்தில் பங்கேற்பதை சில அரசு அலுவலர்கள் தொடர்ந்து தவிர்ப்பது குறித்து, விவசாய அமைப்பினர் கண்டன குரல் எழுப்பினர்.
இதனால், ஆர்.டி.ஓ.,வின் நேர்முக உதவியாளர் கனகராஜ், 'குறைகேட்பு கூட்டத்தில், கோட்ட அளவிலான அனைத்து அரசு துறை அதிகாரிகளும் கட்டாயம் பங்கேற்க வேண்டும். கூட்டத்தில் ஆப்சென்ட் ஆகும் துறையினர் குறித்த பட்டியல், கலெக்டருக்கு அனுப்பப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்,' என்றார்.