/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
எம்.ஜி.ஆர்., சிலை சுரங்கப்பாலம் கட்டுமான பணியில் தொய்வு; அதிகாரிகள் ஆய்வு
/
எம்.ஜி.ஆர்., சிலை சுரங்கப்பாலம் கட்டுமான பணியில் தொய்வு; அதிகாரிகள் ஆய்வு
எம்.ஜி.ஆர்., சிலை சுரங்கப்பாலம் கட்டுமான பணியில் தொய்வு; அதிகாரிகள் ஆய்வு
எம்.ஜி.ஆர்., சிலை சுரங்கப்பாலம் கட்டுமான பணியில் தொய்வு; அதிகாரிகள் ஆய்வு
ADDED : செப் 16, 2025 11:37 PM

திருப்பூர்; திருப்பூர் குமரன் ரோட்டில், எம்.ஜி.ஆர்., சிலை அருகே சுரங்கப்பாலம் கட்டுமானப் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது.
குமரன் ரோட்டில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், எம்.ஜி.ஆர்., சிலை அருகே சுரங்க பாலம் கட்ட திட்டமிடப்பட்டது. பார்க் ரோட்டிலிருந்து, குமரன் ரோட்டில் குறுக்கில் சுரங்க பாலம் அமைத்து நொய்யல் கரையில், யுனிவர்சல் சந்திப்பு அருகே இந்த பாலம் நிறைவடைகிறது.
பல்வேறு காரணங்களால், 10 ஆண்டுகளுக்கும் மேலாக தடைபட்ட பாலம் கட்டுமானப் பணி பாதியில் நிறுத்தப்பட்டது. ஒரு புறத்தில் இடம் கையகப்படுத்தும் பணியில் வழக்கு முடிவுக்கு வந்து, நிலம் கையகப்படுத்தப்பட்டது.
அங்கிருந்த கட்டடங்கள் இடித்து அகற்றப்பட்டு பாலம் கட்டுமானப் பணி தொடர்ந்து விறுவிறுப்பாக நடந்தது. இந்நிலையில் அடுத்த கட்டமாக தற்போது, ரோட்டின் குறுக்கில் சுரங்கம் அமைக்கும் பணி மேற்கொள்ள வேண்டும்.
இதற்காக, போக்குவரத்து மாற்றம் செய்வது குறித்து தொடர்ந்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதனடிப்படையில், கடந்த வாரம் போக்குவரத்து மாற்றம் குறித்தும் மாநகர போலீசார் பொது அறிவிப்பும் வெளியிட்டனர். கடந்த, 13ம் தேதி முதல் போக்குவரத்து மாற்றம் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், 12ம் தேதி, அறிவிப்பு திரும்ப பெறப்பட்டது.
மாற்றுப் பாதைக்கு தேர்வு செய்யப்பட்ட ரோடு முழுமையாக பணி முடியாமல் இருப்பது தெரிய வந்தது. இதனையடுத்து, நேற்று மாநகராட்சி, மாநகர போக்குவரத்து போலீஸ் மற்றும் நெடுஞ்சாலைத் துறை அலுவலர்கள் இணைந்து இது குறித்து ஆய்வு செய்தனர்.
மாற்று வழியாகத் தேர்வு செய்யப்பட்டுள்ள நடராஜா தியேட்டர் பாலம் அருகேயுள்ள இணைப்பு ரோடு தார் ரோடாக மாற்றப்படாமல், ஜல்லி கொட்டி சமன்படுத்தப்பட்டுள்ளது. இதனால், வாகனங்கள் அதில் திருப்பி விட முடியாத நிலை உள்ளது தெரிந்தது.
எனவே, அதனை உடனடியாக தார் ரோடாக மாற்ற நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டது.
தொடரும் தாமதம் திருப்பூர் நகரில் மிக முக்கியமான ரோடாக குமரன் ரோடு உள்ளது. அதில், சுரங்கப்பாலம் அமைக்கும் நிலையில், வாகனப் போக்குவரத்து கட்டாயம் தகுதியான மாற்றுப்பாதையில் மட்டுமே திருப்பி விடப்பட வேண்டும்.
அதற்கான பணியை பல்வேறு துறையினரும் பல மாதங்களாக திட்டமிட்டு வந்தனர். திருப்பூருக்கு முதல்வர் வருகை, ஹிந்து முன்னணி விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் போன்ற காரணங்களால் மாற்றுப் பாதையை முடிவு செய்வதில் பல்வேறு வகையில் தடைகள் ஏற்பட்டு தாமதமாகி உள்ளது.
இந்நிலையில், தற்போது நடராஜா தியேட்டர் பாலம் வழியாக மாற்றுப் பாதையை சீரமைத்து போக்குவரத்தை திருப்பி விட திட்டமிடப்பட்டுள்ளது. அவ்வகையில் இந்த கட்டுமானப்பணி 3 முதல் 4 மாத காலம் நடைபெறும்.
அடுத்த மாதம் தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில், குமரன் ரோடு, போக்குவரத்து மாற்றம் என்ன விதமான சிக்கல்களை ஏற்படுத்தும் என்பது மிகப்பெரிய கேள்விக்குறியாக உள்ளது.

