/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
எட்டு கட்ட போராட்டம் நடத்தியும் அரசின் செவிகளில் எட்டாத கோரிக்கை சிறு குறு தொழில் துறையினர் தவிப்பு
/
எட்டு கட்ட போராட்டம் நடத்தியும் அரசின் செவிகளில் எட்டாத கோரிக்கை சிறு குறு தொழில் துறையினர் தவிப்பு
எட்டு கட்ட போராட்டம் நடத்தியும் அரசின் செவிகளில் எட்டாத கோரிக்கை சிறு குறு தொழில் துறையினர் தவிப்பு
எட்டு கட்ட போராட்டம் நடத்தியும் அரசின் செவிகளில் எட்டாத கோரிக்கை சிறு குறு தொழில் துறையினர் தவிப்பு
ADDED : ஜன 21, 2024 01:09 AM
பல்லடம்;கடன் சுமையில் மூழ்கி வரும் சிறு, குறு தொழில் துறையினர், மின் கட்டணத்திலிருந்து மீள வழி கிடைக்குமா, என்ற எதிர்பார்ப்பில் உள்ளனர்.
தமிழக அரசு, கடந்த ஆண்டு மின் கட்டணத்தை உயர்த்தியதுடன், பீக் ஹவர் கட்டணம், சோலார் மின் கட்டணம், டிமாண்ட் சார்ஜ் உள்ளிட்டவற்றை கொண்டு வந்தது. இவற்றால், தொழில் துறையினர் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
தமிழகம் முழுவதும் உள்ள குறு சிறு தொழில் துறையினர் இணைந்து, தமிழ்நாடு தொழில் துறை மின் நுகர்வோர் கூட்டமைப்பை ஏற்படுத்தி, தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்தனர். இது தொடர்பாக, கோவையில் கூடி ஆலோசனை மேற்கொண்ட பின், முதல் கட்டமாக, பல்லடம் அடுத்த காரணம்பேட்டையில் நடந்த உண்ணாவிரத போராட்டத்தில், தமிழகம் முழுவதும் உள்ள குறு சிறு நடுத்தர பல்வேறு தொழில் துறையினர் பங்கேற்றனர்.
தொடர்ந்து, இ-மெயில் மற்றும் தபால் மூலம் முதல்வருக்கு கோரிக்கைகளை அனுப்பி வைத்தனர். இதனால், கூட்டமைப்பு சார்பில், தமிழகம் முழுவதும், ஒரு நாள் அடையாள உற்பத்தி நிறுத்தம் மற்றும் மதுரையில் உண்ணாவிரதப் போராட்டமும் நடந்தன.
கடந்த அக்., மாதம் அந்தந்த மாவட்ட கலெக்டர் அலுவலகங்களில் கோரிக்கை மனு அளித்த பின், அதே மாதம், 16ம் தேதி, சென்னையில் உண்ணாவிரத போராட்டம் நடந்தது, இதனை தொடர்ந்து, அனைத்து எம்.எல்.ஏ.,க்களையும் நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. இறுதியாக, தமிழகம் முழுவதும், மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் கோவிந்தராஜ் கூறியதாவது:
மீட்டர் பொருத்தும் வரை தற்காலிகமாக பீக் ஹவர் கட்டணம் ரத்து செய்யப்படும் என்றும், சோலாருக்கு, 1.53 ரூபாய் கட்டணம் என்றும் அரசு அறிவித்தை வரவேற்கிறோம். ஆனால், 430 சதவீதம் உயர்த்தப்பட்ட டிமாண்ட் கட்டணத்தை முற்றிலும் திரும்ப பெற வேண்டும்.
சொந்த முதலீட்டில் நிறுவப்பட்டு உற்பத்தி செய்யப்படும் சோலார் மின்சாரத்துக்கு விதிக்கப்படும் கட்டணத்தை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்ற பிரதான கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டு வருகின்றன. இதற்காக எட்டு கட்ட போராட்டங்கள் நடத்தியும் அரசு செவி சாய்க்கவில்லை.
அண்டை மாநிலங்கள் போட்டி போட்டு சலுகைகளை வழங்குவதால், அம்மாநிலங்களுடன் போட்டி போட இயலாத நிலை உள்ளது. இதனால், முதலீட்டையும் இழந்து விடுவோமா என்ற அச்சம் எழுந்துள்ளது. தமிழக அரசு கோரிக்கையை ஏற்றால் மட்டுமே தொழிலை தக்க வைக்க முடியும் என்ற சூழல் உள்ளது. கூட்டமைப்பின் ஆலோசனையின்படி அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்ள ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.

