/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கடந்தாண்டு பாதித்த மக்காச்சோளம் பயிர்களுக்கு இழப்பீடு தொகை! உடனடியாக வழங்க விவசாயிகள் வலியுறுத்தல்
/
கடந்தாண்டு பாதித்த மக்காச்சோளம் பயிர்களுக்கு இழப்பீடு தொகை! உடனடியாக வழங்க விவசாயிகள் வலியுறுத்தல்
கடந்தாண்டு பாதித்த மக்காச்சோளம் பயிர்களுக்கு இழப்பீடு தொகை! உடனடியாக வழங்க விவசாயிகள் வலியுறுத்தல்
கடந்தாண்டு பாதித்த மக்காச்சோளம் பயிர்களுக்கு இழப்பீடு தொகை! உடனடியாக வழங்க விவசாயிகள் வலியுறுத்தல்
ADDED : செப் 26, 2025 12:11 AM

உடுமலை; கடந்தாண்டு மக்காச்சோளம் சாகுபடியில், படைப்புழு தாக்குதல், புயல், மழை காரணமாக பாதித்த பயிர்களுக்கு இழப்பீடு தொகையை உடனடியாக விடுவிக்க வேண்டும், என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
திருப்பூர் மாவட்டம், உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம், பல்லடம் பகுதிகளில், மக்காச்சோளம் சாகுபடி பிரதானமாக உள்ளது. ஏறத்தாழ, 60 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.
கடந்த, 2023-24ம் ஆண்டில், ராபி பருவத்தில், சாகுபடி செய்யப்பட்ட மக்காச்சோளம் பயிருக்கு, விவசாயிகள் பயிர்க்காப்பீடு செய்தனர்.
ஒரு ஏக்கருக்கு, விவசாயிகள் பங்களிப்பு தொகை, ரூ.535, அரசு பங்களிப்பு, 4,815 என, ரூ. 5,350 ரூபாய் காப்பீட்டிற்கு பிரிமியம் தொகையாக செலுத்தப்படுகிறது. மக்காச்சோளம் பயிர் பாதிப்பு ஏற்பட்டால், ஒரு ஏக்கருக்கு, 35 ஆயிரத்து, 666 ரூபாய் இழப்பீடாக வழங்கப்படுகிறது.
கடந்தாண்டு சாகுபடி செய்த மக்காச்சோளத்தில், படைப்புழு தாக்குதல், பெஞ்சல் புயல், சீதோஷ்ண நிலை மாற்றம், பருவம் தவறிய மழை உள்ளிட்ட பல்வேறு காரணங்களினால், மக்காச்சோளம் பயிர்கள் பெரும்பாலான பகுதிகளில் பாதித்தது.
இதனையடுத்து, வேளாண் துறை அதிகாரிகள், பிர்கா வாரியாக ஆய்வு செய்து, பயிர் பாதிப்புகள் குறித்து இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கு அறிக்கை வழங்கினர்.
அதன் அடிப்படையில், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இன்சூரன்ஸ் நிறுவனத்திடமிருந்து ஒரு ஆண்டாக இழப்பீடு தொகை வழங்கவில்லை. தற்போது வட கிழக்கு பருவ மழை துவங்க உள்ள நிலையில், பயிர் சாகுபடி செய்ய, விவசாயிகளுக்கு உடனடியாக இழப்பீடு தொகை வழங்க வேண்டும், என வலியுறுத்தியுள்ளனர்.
பயிர்கள் பாதிப்பு தமிழக விவசாயிகள் சங்க கூட்டுறவு அணி மாநில ஒருங்கிணைப்பாளர் குப்புச்சாமி, தெற்கு மாவட்ட செயலாளர் செந்தில்குமார் ஆகியோர் கூறியதாவது:
கடந்தாண்டு ராபி பருவத்தில், மக்காச்சோளம் சாகுபடி செய்த விவசாயிகள், படைப்புழு தாக்குதல், கன மழை, வறட்சி, சீதோஷ்ண நிலை மாற்றம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களினால், மக்காச்சோளம் பயிர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டது.
பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு, காப்பீடு நிறுவனத்திடமிருந்து இழப்பீடு பெற்றுத்தர வேண்டும், என மனு அளிக்கப்பட்டது.
இதனையடுத்து, வேளாண் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, புள்ளியல் துறை வாயிலாக பயிர் அறுவடை பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, பிர்கா வாயிலாக பயிர் சேத மதிப்பீடுகள் ஆய்வு செய்யப்பட்டது.
ஆனால், விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு விடுவிக்கவில்லை. தற்போது, வட கிழக்கு பருவ மழை துவங்க உள்ள நிலையில், விவசாயிகள் மக்காச்சோளம் சாகுபடியை துவக்க தயாராக உள்ள நிலையில், கடந்தாண்டு பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உடனடியாக இழப்பீடு தொகையை வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதே போல், பயிர் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு முழுமையான தொகை இழப்பீடாகவும் வழங்க வேண்டும்.
இவ்வாறு, தெரிவித்தனர்.
தொகை ஒதுக்கீடு
வேளாண் துறை அதிகாரிகள் கூறுகையில்,' கடந்தாண்டு மக்காச்சோளம் பயிர் காப்பீடு செய்த விவசாயிகளில், பயிர் பாதிப்பு ஏற்பட்ட, 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு தொகை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது, பிர்காக வாரியாக தொகை ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், விவசாயிகளுக்கு விரைவில் வழங்கப்படும்.' என்றனர்.