/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அமராவதி சர்க்கரை ஆலையில் அரவை முடக்கம்
/
அமராவதி சர்க்கரை ஆலையில் அரவை முடக்கம்
ADDED : ஜன 21, 2024 02:01 AM

உடுமலை;கோவை, திருப்பூர், திண்டுக்கல் ஆகிய மூன்று மாவட்ட கரும்பு விவசாயிகளுக்கு ஆதரமாக உள்ள, அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலையை நவீனப்படுத்த அரசு நிதி ஒதுக்காததால், நடப்பாண்டு அரவை முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டம், உடுமலை அருகே அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை உள்ளது. 1960ம் ஆண்டு துவக்கப்பட்ட இந்த ஆலையில், கோவை, திருப்பூர், திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள, 18,500 விவசாயிகள் அங்கத்தினர்களாக உள்ளனர்.
ஆண்டுக்கு, 10 மாதங்கள் இயங்கி, 4.5 லட்சம் டன் வரை கரும்பு அரவை செய்யப்பட்டு வந்தது. இந்த கூட்டுறவு சர்க்கரை ஆலையில், நிர்வாக குளறுபடி, ஆலை பராமரிப்பதில் அலட்சியம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது.
இங்குள்ள இயந்திரங்கள் நிறுவி, 64 ஆண்டுகளான நிலையில், பெரும்பாலும் தேய்மானம் அடைந்தும், அரவை திறன் குறைந்து, சர்க்கரை உற்பத்தி பாதிக்கிறது. இதனால், அரசுக்கும், விவசாயிகளுக்கும் பாதிப்பு ஏற்படுகிறது.
தமிழகத்திலுள்ள பழமையான கூட்டுறவு சர்க்கரை ஆலை, எரிசாராய ஆலை உள்ள நிலையில், இதனை முழுமையாக நவீன இயந்திரங்களுடன் புதுப்பிக்க வேண்டும், என விவசாயிகள் பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகின்றனர்.
கடந்தாண்டு, கரும்பு அரவை முழுமையாக மேற்கொள்ள முடியாத நிலையில், தனியார் ஆலைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
வழக்கமாக, மார்ச் மாதத்தில், பாய்லர் இளஞ்சூடு ஏற்றப்பட்டு, ஏப்.,1 முதல் கரும்பு அரவை துவங்கும். நடப்பாண்டு, 1,500 ஏக்கர் பதிவு செய்யப்பட்டு, 60 ஆயிரம் டன் கரும்பு அரவை செய்ய திட்டமிடப்பட்டு இருந்தது.
இந்நிலையில், இயந்திரங்கள் பழுது, பராமரிக்க முடியாத சிக்கல் உள்ளிட்ட காரணங்களால், ஆலையை இயக்க முடியாத சூழல் உள்ளதாக, அதிகாரிகள் தரப்பில் அரசுக்கு அறிக்கை அனுப்பியுள்ளனர்.
ஆலையை முழுயாக நவீனப்படுத்த, 56 கோடி ரூபாய் தேவை என அரசுக்கு கருத்துரு அனுப்பி வைத்தும் நிதி ஒதுக்கவில்லை. சர்க்கரை உற்பத்தி, எரிசாராய உற்பத்தி என இரு ஆலைகளை முறையாக பராமரித்தால், அதிக வருவாய் கிடைக்கும். ஆனால், அரசின் அலட்சியத்தால், ஆலை மூடப்படும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால், மூன்று மாவட்ட கரும்பு விவசாயிகள், தொழிலாளர்கள், கரும்பு வெட்டு ஆட்கள், வாகன டிரைவர்கள் என நேரடியாகவும், மறைமுகமாகவும், ஒரு லட்சம் தொழிலாளர்கள் பாதிக்கும் நிலையும் ஏற்பட்டுள்ளது.
அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை கரும்பு பயிரிடுவோர் சங்கம் மற்றும் தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் சார்பில் முதல்வருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
ஆலையை முழுமையாக நவீனப்படுத்த, விவசாயிகள் தரப்பில் அரசுக்கு வலியுறுத்தப்பட்டது. இதுவரை நடப்பாண்டு அரவை துவங்க ஆயத்த பணிகள் எடுக்கவில்லை.
நிதி ஒதுக்கீட்டை எதிர்பார்த்து, பணிகள் நிறுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
எனவே, ஆலை புனரமைக்க உடனடியாக நிதி ஒதுக்கி, நவீனப்படுத்தும் பணிகளை மேற்கொண்டு, 2025 மார்ச் மாதத்தில் அரவை துவக்க வேண்டும். நடப்பாண்டு பதிவு செய்த விவசாயிகளின் கரும்புகளை, ஆலை வாயிலாக அருகிலுள்ள ஆலைகளுக்கு அனுப்பவும், போக்குவரத்து செலவு உள்ளிட்ட கரும்புக்குரிய தொகை பெற்றுத்தரவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

