/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அதிக மகசூல் தரும் 'பிகேஎம் - 1' ரக தக்காளி
/
அதிக மகசூல் தரும் 'பிகேஎம் - 1' ரக தக்காளி
ADDED : ஜன 19, 2024 04:30 AM
அவிநாசி: 'பிகேஎம் - 1' ரக தக்காளி, கூடுதல் மகசூல் தரும்' என, வேளாண் துறையினர் தெரிவித்துள்ளனர்.
கடந்த, 1978ல், 'பிகேஎம் - 1' ரக தக்காளி, பெரிய குளம் தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையத்தில் உருவாக்கப்பட்டது. அன்னஞ்சி என்ற உள்ளூர் ரகத்தை சடுதி மாற்றம் செய்து, இந்த ரக தக்காளி தயாரிக்கப்பட்டது. 'இவற்றை விவசாயிகள் வாங்கி சாகுபடி செய்து, கூடுதல் மகசூல் பெற வேண்டும்' என, வேளாண் துறையினர் ஊக்குவித்து வருகின்றனர். அவ்வகையில், அவிநாசி அருகே கானுார்புதுார் பகுதியில், வெங்கடேசன் என்ற விவசாயின் நிலத்தில், இந்த ரக தக்காளி சாகுபடி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவற்றை விதைச்சான்று மற்றும் அங்கக சான்று உதவி இயக்குனர் மாரிமுத்து பார்வையிட்டார்.
இது குறித்து அவர் கூறியதாவது:
இந்த ரகம் அதிக மகசூல் தரக்கூடியது. தட்டை, உருண்டை வடிவ பழங்களை கொண்டது. பழங்களின் மேற்பரப்பில் பச்சை பட்டையுடனும், அடிப்பாகம் நல்ல சிவப்பு நிறத்திலும், 4 முதல், 5 பழங்களை கொண்டிருக்கும். மற்ற ரகங்களை காட்டிலும், இது சுவையானது; சமையலுக்கு ஏற்ற நல்ல ரகம். வளர்ச்சிப்பருவம், பூப்பருவம் மற்றும் முதிர்ச்சிப்பருவம் என, மூன்று நிலைகளில் ஆய்வுக்கு உட்படுத்தப்படுகிறது.
அனைத்து விதைச்சான்று நடைமுறைகளையும் பின்பற்றி, நல்ல தரமான விதைகள் விவசாயிகளுக்கு கிடைக்க, விதைப் பண்ணைகளை கூடுதல் கவனத்துடன், விதைப்பண்ணை அலுவலர்கள் ஆய்வு செய்ய வேண்டும். சான்று பெற்ற விதைகளை வாங்கி விவசாயிகள் பயன் பெறலாம்.
இவ்வாறு, அவர் கூறினார்.

