/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வட மாநிலங்களில் கடும் பனி கேரளா எக்ஸ்பிரஸ் தாமதம்
/
வட மாநிலங்களில் கடும் பனி கேரளா எக்ஸ்பிரஸ் தாமதம்
ADDED : ஜன 19, 2024 01:57 AM
திருப்பூர்:புதுடில்லியில் இருந்து ம.பி., ஆந்திரா வழியாக கேரளா எக்ஸ்பிரஸ் ரயில் எண், 12626, தினமும் தமிழகத்தின் காட்பாடிக்கு வருகிறது. தமிழகத்தை கடந்து, திருவனந்தபுரம் செல்கிறது. இந்த ரயிலில் டிக்கெட் முன்பதிவு செய்து, இருக்கை உறுதி செய்வது அவ்வளவு எளிதல்ல.
காரணம், ஏழு மாநிலங்கள், 41 ஸ்டேஷன்களை கடந்து, 3,031 கி.மீ., பயணிக்கும் நாட்டின் முக்கியமான 20 ரயில்களில் இதுவும் ஒன்று.
டில்லி, உ.பி., உட்பட வட மாநிலங்களில் கடும் பனிமூட்டம் நிலவுகிறது. கடந்த, 1ம் தேதி முதல், நேற்று வரை, 17 நாட்களாக, சரியான நேரத்துக்கு கேரளா எக்ஸ்பிரஸ் இயங்கவில்லை.
குறைந்த பட்சம், 8 மணி நேரம் முதல், 18 மணி நேரம் வரை தாமதமாக இயங்கியுள்ளது. இதனால், முன்பதிவு டிக்கெட் பெற்ற பயணியர் காத்திருந்து பயனில்லை என, டிக்கெட்டை ரத்து செய்து, வேறு ரயிலில் செல்கின்றனர்.
இன்ஜின் டிரைவர்கள் கூறியதாவது:
வழக்கமான நேரங்களில், 1 கி.மீ., துாரத்தில் உள்ள சிக்னல் கூட, 'பளிச்' என தெரியும். தற்போது, கடும் பனி மூட்டத்தால், 200 மீட்டர் துாரத்தில் உள்ள சிக்னல் கூட சரி வர தெரிவதில்லை.
இதனால், 100 - 120 கி.மீ., வேகத்தில் இயக்கும் எக்ஸ்பிரஸ் ரயிலை, 80 கி.மீ., வேகத்துக்குள் மட்டுமே இயக்க வேண்டியுள்ளது.
பயணத்தை துவங்கிய ஐந்து மணி நேரத்தில் ஏற்படும் தாமதத்தை, 20 ஸ்டேஷன்கள் கடந்து வந்த பின், மீட்டெடுக்கவே முடிவதில்லை. இதனால், பயணம் நிறைவு பெறும் வரை தாமதம் தொடர்கிறது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

