/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பயிர் சர்வே இலக்கு இல்லை: வி.ஏ.ஓ.,க்களுக்கு 'சுதந்திரம்'
/
பயிர் சர்வே இலக்கு இல்லை: வி.ஏ.ஓ.,க்களுக்கு 'சுதந்திரம்'
பயிர் சர்வே இலக்கு இல்லை: வி.ஏ.ஓ.,க்களுக்கு 'சுதந்திரம்'
பயிர் சர்வே இலக்கு இல்லை: வி.ஏ.ஓ.,க்களுக்கு 'சுதந்திரம்'
ADDED : ஜன 14, 2024 12:37 AM
திருப்பூர்:'விவசாய நிலங்களில், 'டிஜிட்டல்' முறையில் பயிர் சாகுபடி பரப்பு ஆய்வு செய்யும் பணியில் ஈடுபடும் வி.ஏ.ஓ., க்களுக்கு இலக்கு எதுவும் நிர்ணயிக்கப்படுவதில்லை; மாறாக, இயன்றளவு பணி செய்யுங்கள்,' என வருவாய் நிர்வாக ஆணையர் அறிவுறுத்தியுள்ளார்.
மாநிலத்தில், ஒவ்வொரு கிராமங்களிலும் பயிர் சாகுபடி பரப்பு எந்தளவு இருக்கிறது என்பதை துல்லியமாக ஆவணப்படுத்தும் வகையில், 'டிஜிட்டல் பயிர் சர்வே' திட்டத்தை அரசு அறிவித்துள்ளது.
இதன் வாயிலாக, சாகுபடி பரப்பின் அளவை துல்லியமாக அறிந்துகொள்ள முடியும் என்பதுடன், பல்வேறு பருவங்களில் விளைவிக்கப்படும் பயிர், விவசாய முறைகளை அறிந்து, அதற்கேற்ப பயிர் பாதுகாப்பு திட்டங்களை மேற்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டது.
'சர்வே' பணியில், வி.ஏ.ஓ.,க்கள் ஈடுபட உள்ளனர். இப்பணியில் உள்ள நிர்வாகச் சிக்கல் குறித்து, கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு நிர்வாகிகள், வருவாய் நிர்வாக ஆணையரின் கவனத்துக்கு கொண்டு சென்றனர். இரு தரப்பு பேச்சு வார்த்தையும் நடத்தப்பட்டது. அதன்படி, இப்பணியில் சில வழிகாட்டுதல்களை வகுத்து, அவற்றை கலெக்டர்களுக்கு, வருவாய் நிர்வாக ஆணையர் அனுப்பியுள்ளார்.
அதன்படி, 'சர்வே' பணி மேற்கொள்ளவுள்ள வி.ஏ.ஓ.,க்கள், தங்களுக்கு துணையாக வெளிநபரை தேர்வு செய்து கொள்ளலாம்; அவர்கள் மேற்கொள்ளும் பணிக்கு, மதிப்பூதியம் கணக்கிட்டு வழங்கப்படும். இப்பணியில் ஈடுபடும் வெளிநபர், 'ஆரம்ப பயிராய்வினர்' என்ற நிலையிலும், வி.ஏ.ஓ.,க்கள் 'ஒப்புதல் அளிப்பவர்' என்ற நிலையிலும், பணியாற்ற அனுமதி வழங்க வேண்டும் என்ற வி.ஏ.ஓ.,க்களின் கோரிக்கை ஏற்கப்பட்டு, அந்த அடிப்படையில், 'சர்வே' விவரங்களை பதிவேற்றும் 'செயலி'யில் வடிவமைப்பு ஏற்படுத்தப்படும்.
'சர்வே' பணி மேற்கொள்ளும் வி.ஏ.ஓ.,க்களுக்கு, இன்டர்நெட் வசதியுடன் கூடிய மொபைல் போன் மற்றும் 'டேப்' வழங்குவதற்கான ஏற்பாடு செய்யப்படும். 'சர்வே பணியை விரைந்து முடிக்க வேண்டும்' என, மாவட்ட நிர்வாகங்கள் நிர்பந்திக்கக் கூடாது என்ற, வி.ஏ.ஓ.,க்களின் கோரிக்கையை ஏற்று, பணியில் இலக்கு எதுவும் நிர்ணயம் செய்யப்படாது. அதே நேரம், பணியில் ஈடுபடும் வி.ஏ.ஓ.,க்கள், 'தங்களால் இயன்றளவு, முடிந்தளவு' என்ற இலக்கை நிர்ணயித்து பணியாற்ற வேண்டும்.
இவ்வாறு, வழிகாட்டுதலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

