/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கிடப்பில் பாண்டியாறு - புன்னம்புழா திட்டம்; அரசின் கவனம் ஈர்க்க ஒருங்கிணையும் விவசாயிகள்
/
கிடப்பில் பாண்டியாறு - புன்னம்புழா திட்டம்; அரசின் கவனம் ஈர்க்க ஒருங்கிணையும் விவசாயிகள்
கிடப்பில் பாண்டியாறு - புன்னம்புழா திட்டம்; அரசின் கவனம் ஈர்க்க ஒருங்கிணையும் விவசாயிகள்
கிடப்பில் பாண்டியாறு - புன்னம்புழா திட்டம்; அரசின் கவனம் ஈர்க்க ஒருங்கிணையும் விவசாயிகள்
ADDED : ஜூன் 24, 2025 11:45 PM
திருப்பூர்; மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் நீலகிரி மாவட்டத்தில் பெய்யும் மழைநீர் மேட்டுப்பாளையம் பவானி ஆற்றின் வழியாக வழிந்தோடுகிறது.
இந்த ஆற்றுநீரை மையப்படுத்தியே உள்ள கீழ் பவானி, காளிங்கராயன், அரக்கன்கோட்டை - தடப்பள்ளி பாசன திட்டங்கள் வாயிலாக, 3 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பெறுகின்றன.
கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர் மாவட்டத்தின் சில பகுதி என, லட்சக்கணக்கான குடும்பங்கள் மற்றும் தொழிற் நிறுவனங்களின் உற்பத்தி தேவையையும் பூர்த்தி செய்து வருகிறது.
எதிர்கால நீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில், கிடப்பில் போடப்பட்டுள்ள பாண்டியாறு - புன்னம்புழா திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்ற கோரிக்கை, கொங்கு மண்டலத்தில் வலுத்து வருகிறது.
தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் மற்றும் கீழ் பவானி பாசன விவசாயிகள் சங்கத்தின் சார்பில், விவசாய அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இது குறித்து, கீழ் பவானி பாசன விவசாயிகள் சங்க தலைவர் ரவி, தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க தலைவர் ஈசன் முருகசாமி ஆகியோர் கூறியதாவது:
கீழ் பவானி பாசன பகுதியின் உபரிநீர், அத்திக்கடவு - அவிநாசி திட்டத்துக்கு பயன்பட்டு வருகிறது. ஒரத்துப்பாளையம், அணைக்கட்டுக்கு கீழ், நொய்யல் ஆற்றில் கலக்கும் கீழ் பவானி பாசனத்தின் கசிவு நீர், சின்னமுத்துார் தடுப்பணை வாயிலாக, கரூர் மாவட்டத்துக்கும் பயனளிக்கிறது.
காலநிலை மாற்றம் காரணமாக, நான்கு மாதங்கள் தொடர்ச்சியாக பெய்ய வேண்டிய பருவமழை, தற்போது, நான்கைந்து நாட்களில் மொத்தமாக பெய்து முடிந்து விடுகிறது.
இதனால், நீரை சேமிக்க முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது. அதிகளவு தண்ணீர், தொழிற்சாலை பயன்பாட்டுக்கும் மடை மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது.
இவ்வாறு, பொதுமக்களின் குடிநீர் தேவைக்காக, பவானி ஆற்றுநீரை கொண்டு, கூட்டு குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு கொண்டே இருக்கிறது.
எனவே, காமராஜரின் கனவு திட்டமான, பாண்டியாறு - புன்னம்புழா திட்டத்தை கொண்டு வர வேண்டும். இது நிறைவேற்றப்பட்டால், 7 டி.எம்.சி., நீர் கூடுதலாக கிடைக்கும்.
தமிழக - கேரள அரசுகள் இணைந்து, இத்திட்டத்துக்கு புத்துயிர் கொடுக்க வேண்டும். இக்கோரிக்கையை முன்னெடுத்து, விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் இணைந்த போராட்டக்குழு ஏற்படுத்துவது என, முடிவெடுத்துள்ளோம்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.