/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'ஜிபே'வில் சரக்கு வித்து போலீசுக்கு 'பெப்பே'
/
'ஜிபே'வில் சரக்கு வித்து போலீசுக்கு 'பெப்பே'
UPDATED : ஜன 23, 2024 06:35 AM
ADDED : ஜன 23, 2024 06:34 AM
அயோத்தி ஸ்ரீராமர் கோவில் பிராண பிரதிஷ்டை நிகழ்ச்சி நேரலையை பார்த்து கொண்டிருந்தாள் சித்ரா. வீட்டின் 'காலிங்பெல்' அடிக்க, கதவை திறந்து, மித்ராவை பார்த்ததும், ''வா மித்து... நீதான் நினைச்சேன்; கரெக்டா வந்து நிக்கிற; ஆயுசு நுாறு...'' சிரித்தாள் சித்ரா.

பதிலுக்கு சிரித்த மித்ரா, சோபாவில் அமர்ந்தாள். டீபாய் மீது பரவிக்கிடந்த செய்தித்தாளை எடுத்து புரட்டினாள். கார்ப்ப ரேஷன், நொய்யல் பண்பாட்டு அமைப்பு, ஜீவநதி நொய்யல் அமைப்பினர் இணைந்து நடத்திய சமத்துவ பொங்கல் விழா படங்களை பார்த்தவாறே, ''அக்கா... இந்த பொங்கல் விழாவுல கூட 'பாலிடிக்ஸாம்' என்ற மித்ரா தொடர்ந்தாள்.
எங்கும் 'அரசியல்!'
''நிகழ்ச்சியோட, 3வது நாள், 1,008 பொங்கல் வச்சாங்கள்ல. அந்தன்னைக்கு, நிறைய மக்கள் கலந்துக்கிட்டாங்க. ரோட்டோரம் முழுக்க ஆளுங்கட்சி கொடிதான் பறந்துச்சாம்; அரசியல் விழா மாதிரி மாத்திட்டாங்களாம். நிகழ்ச்சியை சேர்ந்து நடத்தினவங்கள்ல, 'தோழர்கள்' நிறைய பேரு இருக்காங்க. 'எங்க கட்சி கொடியை எங்களுக்கு கட்ட தெரியாதா? இதுல கூடவா, இந்த தி.மு.க.,வினர் அரசியல் பண்ணனும்ன்னு, புலம்பி தள்ளிட்டாங்களாம்,''
''சமத்துவ பொங்கல் விழாவாச்சே. நாமளும் கலந்துக்கலாம்'ன்னு, அ.தி.மு.க., லோக்கல் வி.ஐ.பி.,ங்க சிலரு முடிவு பண்ணியிருந்தாங்களாம். ஆனா, ஆளுங்கட்சி விழா மாதிரி அந்த இடம் மாறினதால அவங்களும் போகலையாம்,''
''அதேபோல, அவிநாசி பேரூராட்சி ஆபீசில் சமத்துவ பொங்கல் வைச்சிருக்காங்க. துாய்மை பணியாளருங்க தான், பொங்கல் வச்சிருக்காங்க. தலைவரு, காங்., கவுன்சிலர் தவிர, நிறைய பேரு கலந்துக்கவே இல்லையாம். இப்டியிருந்தா, சமூகநீதி எங்க தழைக்கும் சித்ராக்கா,''

''கரெக்டா சொன்னடி. அவங்க எப்பவும் ஊருக்குதான் உபதேசம் பண்ணுவாங்க,'' என்ற சித்ரா, ''பொங்கல் விழாவுல நடந்த 'புகைச்சல்' விஷயங்களை புட்டு, புட்டு வைக்கிறியே மித்து...'' சிரித்தாள்.
''இனியும் இருக்குங்க அக்கா...'' தொடர்ந்த மித்ரா, ''பொங்கல் லீவுக்கு நிறைய பேரு, அவங்க டூவீலர்களை சைக்கிள் ஸ்டாண்ட்ல நிறுத்திட்டு, பஸ்ல ஊருக்கு போனாங்க. சைக்கிள் ஸ்டாண்ட்காரங்க, இந்த டிமாண்டை சாதமாக்கி, 20 ரூபாய், 40 ரூபாய்ன்னு வசூல் பண்ணி, 'டபுள் இன்கம்' பார்த்துட்டாங்களாம்,'' என்றாள்.
'டிஜிட்டல்' சேல்ஸ்
''திருவள்ளுவர் தினத்தன்னைக்கு, 'டாஸ் மாக்' கடைகளுக்கு 'லீவு' விட்டாங்கள்ல; ஆனா, நிறைய டாஸ்மாக் கடை 'பார்'கள்ல, 'வழக்கம் போல', சரக்கு விற்பனை அமோகமா நடந்துச்சாம். அதுவும், அவிநாசியில இருக்கற ஒரு கடைல, ஓப்பனா மதுபாட்டில்களை அடுக்கி வைச்சு வித்துட்டு, 'ஜிபே'வில் காசு வாங்கியிருக்காங்க,''
''இந்த விஷயம், வெளிய தெரிஞ்சதால, போலீஸ்காரங்களும் 'கேஸ்' போட்டாங்க. 'இல்லீகலா சரக்கு விக்கிறது லோக்கல் போலீசுக்கு தெரியாமலா இருக்கும்? சரக்கு வித்தவங்க மேல நடவடிக்கை எடுக்கிறது ஓ.கே., அதே மாதிரி அனுமதிக்கிற போலீஸ் மேல நடவடிக்கை எடுக்க வேண்டாமா?'னு, ஜனங்க பேசிக்கிறாங்களாம்,'' என்றாள் மித்ரா.
''தாராபுரம் முனிசிபாலிட்டியில, அரசு புறம்போக்கு நிலத்தை தனியாருக்கு தாரை வார்க்க முயற்சி பண்றாங்கன்னு, கவுன்சிலர்கள் சிலரு எதிர்ப்பு சொன்னாங்கள்ல. அது இன்னமும், முடிவுக்கு வராம இருக்காம். அதேபோல, முனிசிபாலிட்டி கன்ட்ரோல்ல இருக்கற டாய்லெட்களை கூட, குத்தகைக்கு விடாம இருக்காங்களாம்,''
''இதனால, வருவாய் இழப்பாம். ஆளுங்கட்சி வி.ஐ.பி.,ங்க தங்களோட ஆதரவாளர்களுக்கு கடையை வாங்க முயற்சி பண்றாங்கன்னு பேசிக்கிறாங்க,'' என்றாள் சித்ரா.
''ஏலம்ன்னு சொல்லவும் தான் எனக்கொரு விஷயம் ஞாபகத்துக்கு வருதுங்க்கா. பல்லடம் முனிசிபாலிட்டில தினசரி மார்க்கெட் கடைகளை ஏலம் விட்டிருக்காங்க. ஆளுங்கட்சி வி.ஐ.பி.,ங்க தங்களுக்கு வேண்டப்பட்டவங்களுக்கு மட்டும் கடை கிடைக்கிற மாதிரி ஏற்பாடு பண்ணிட்டாங்களாம்,''
''இதனால, ஆபீசருக்கும், வி.ஐ.பி.,க்கும் பிரச்னையாகிடுச்சாம். கூடிய சீக்கரமே ஆபீசர் 'டிரான்ஸ்பர்' வாங்கிட்டு போயிடுவார்ன்னு பேசிக்கிறாங்க,'' என்ற மித்ரா, ''அங்க இருக்கற சுல்தான்பேட்டை, நல்லுார்பாளையம் கிராமத்துல, கஞ்சா விற்பனை அமோகமா நடக்குதாம். போலீசும் கண்டுக்காம இருக்காங்களாம்...'' என்ற தகவலையும் சொன்னாள் மித்ரா.
புரியாத புதிர்!
''அதிகாரத்துல இருக்கிறதால, எது வேணும்னாலும் பண்ணலாம்ன்னு நினைக்கிறாங்க போல...'' என, 'உச்' கொட்டிய சித்ரா,
''பி.எஸ்.,6 பஸ் மண்டலத்துக்கு 19 வந்திருக்காம், இதனை துவக்கி வைக்க, லோக்கல் மினிஸ்டருங்க தேதி கொடுக்காம இருக்காங்களாம். என்ன காரணம்ன்னு கேட்டா, சேலம் மாநாடு முடியட்டும் சொன்னாங்களாம். ஆனா, மாநாடு முடிஞ்சும் நேரம் கிடைக்கலையாம்...'' என சிரித்தாள்.
''சரியா போச்சு போங்க,'' என சிரித்த மித்ரா, ''அவிநாசி, ராக்கியாபாளையத்துல, சரக்கு வாகனம் ஓட்டுற ஒருத்தரோட தம்பி, அந்த வாகனத்தை யார்கிட்டயோ அடகு வைச்சு, பணம் வாங்கியிருக்காரு. இதனை தெரிஞ்சுக்கிட்ட அண்ணன், வாகனத்தை மீட்டு எடுத்து வர்றதுக்கு போனப்போ, அடகு வாங்கின ஆசாமி எஸ்கேப் ஆகிட்டாராம்,''
''வண்டியையும் காணலையாம். பதறிப்போன அவரு, பூண்டி போலீஸ் ஸ்டேஷன்ல புகார் கொடுக்க போனப்போ, போலீஸ்காரங்க எப்.ஐ.ஆர்., போடவே இல்லையாம். ஆறு மாசமாகியும் வண்டியும் கிடைக்கலையாம். இது சம்மந்தமா சென்னையில இருக்கற பெரிய ஆபீசர்க்கு புகார் அனுப்ப,'ஆக்ஷன்' எடுக்கச் சொல்லி, லோக்கல் ஸ்டேஷனுக்கு உத்தரவு வந்திருக்கு,''
''அதுக்கப்புறம் தான் எப்.ஐ.ஆர்., போட்டாங்களாம். 'உங்க வண்டி நாகர்கோவில்ல இருக்கற மாதிரி இருக்கு; அங்க ஓடற மாதிரி இருக்கு; இங்க ஓடுதுன்னு சொல்லி, போய் எடுத்துட்டு வர்றதுக்கான செலவு, சாப்பாடு செலவுன்னு சொல்லி, இதுவரை, 17 ஆயிரம் ரூபா வரை வாங்கிட்டாங்களாம்...'' என்றாள் மித்ரா.
''வண்டியும் போயி டுச்சு... பணமும் போயிடுச்சு..னு பறி கொடுத்தவர் புலம்பறாராம். இப்படி பண்ணா, மக்களுக்கு எப்படி போலீஸ் மேல நம்பிக்கை வரும்...'' ஆதங்கப்பட்டாள் சித்ரா.''சரிங்க்கா, நான் கிளம்பறேன்; நேரமாகுது'' என மித்ரா சொல்ல, ''இரு மித்து. காபி கலக்கி எடுத்துட்டு வர்றேன்'' என்ற சித்ரா சமையலறைக்குள் நுழைந்தாள்.

