/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கிடப்பில் போடப்பட்ட கால்வாய் பணி சாக்கடைக்குள் இறங்கி போராட்டம்
/
கிடப்பில் போடப்பட்ட கால்வாய் பணி சாக்கடைக்குள் இறங்கி போராட்டம்
கிடப்பில் போடப்பட்ட கால்வாய் பணி சாக்கடைக்குள் இறங்கி போராட்டம்
கிடப்பில் போடப்பட்ட கால்வாய் பணி சாக்கடைக்குள் இறங்கி போராட்டம்
ADDED : ஜூன் 15, 2025 04:00 AM

அனுப்பர்பாளையம்: -திருப்பூர் மாநகராட்சி, 25வது வார்டு, சிறுபூலுவபட்டிக்குட்பட்ட எஸ்.பி., நகர் மற்றும் ரங்கநாதபுரம் ஆகிய பகுதியில் கழிவு நீர் செல்ல போதிய கால்வாய் வசதி இல்லை. மழை நீருடன் கழிவுநீர் வீடுகளுக்குள் புகுந்து பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.
மின் கம்பம்அகற்ற தாமதம்
இதை தடுக்கும் வகையில், சிறுபூலுவபட்டி ரிங் ரோட்டில் தெய்வீக நகர் முதல் ஜெ.ஜெ., நகர் வரை சாக்கடை கால்வாய் கட்ட மாநகராட்சி சார்பில், ஒரு கோடியே 80 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, நான்கு மாதங்களுக்கு முன் சாக்கடை கால்வாய் கட்டும் பணி தொடங்கியது.
சாக்கடை கால்வாய் கட்டும் வழியில், 20 மின் கம்பங்கள் உள்ளன. அவற்றை அகற்றும் பணியில் மின் வாரியத்தினர் காலதாமதம் ஏற்படுத்துவதால் கடந்த இரண்டு மாதங்களாக ஆங்காங்கே கால்வாய் கட்டும் பணி கிடப்பில் போடப்பட்டுள்ளது. ஆங்காங்கே கழிவுநீர் தேங்கி, துர்நாற்றம் வீசுவதோடு, கொசுக்கடியால் அவதிப்படுகின்றனர்.
செல்வதற்கே கஷ்டம்
அப்பகுதியில் உள்ள வீதிகளுக்கு செல்லும் வழியில், குழி தோண்டி மூடாமல் உள்ளதால், வீதிக்குள் சென்று வர முடியவில்லை. இந்த அவலம் குறித்து, மாநகராட்சி நிர்வாகத்தினரிடம் கேட்டால் மின் வாரியத்தினர் மின் கம்பத்தை அகற்றுவதில் தாமதப்படுத்துவதாகவும், மின் வாரியத்தில் கேட்டால் உயர் அதிகாரியை பார்க்கும்படி அலைக்கழிப்பதாகவும் பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
இந்நிலையில், சாக்கடை கால்வாய் பணியை விரைந்து முடிக்க வலியுறுத்தி, வார்டு கவுன்சிலர் தங்கராஜ், தலைமையில் அப்பகுதி பொதுமக்கள் சாக்கடை கால்வாயில் இறங்கி மாநகராட்சிக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சிறுபூலுவபட்டி ரிங் ரோட்டில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
அங்கு சென்ற மாநகராட்சி உதவி பொறியாளர் கணேசன், ''மின் கம்பத்தை மாற்றி அமைக்க மின் வாரியத்தில் இருந்து பணம் செலுத்த வேண்டுமென, தற்போதுதான் நோட்டீஸ் அனுப்பி உள்ளனர். மின் கம்பம் அகற்றியதும், உடனடியாக கால்வாய் கட்டும் பணி துவக்கப்படும்,'' என்றார். இதனால், சமாதானம் அடைந்த பொதுமக்கள் கலைந்து சென்றனர்.