ADDED : மார் 26, 2025 12:21 AM

பொங்கலுார்; ரோடு அருகிலுள்ள மண்ணை கடத்தி பலர் அட்டூழியத்தில் ஈடுபடுகின்றனர். இது வாகன ஓட்டிகளின் உயிருடன் விளையாடுவதற்கு சமம்.
இதுபோன்ற விதிமீறல் களை வருவாய்த்துறையினர் கண்டும் காணாமல் இருப்பது பொதுமக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
நாளுக்கு நாள் அதிகரித்து வரும் போக்குவரத்து நெருக்கடியால், ரோட்டின் தேவையும் அதிகரித்து வருகிறது. சமீப காலங்களில் ரோட்டை ஆக்கிரமிப்பது அதிகரித்து வருகிறது.
சிலர் கம்பி வேலி போடுகிறேன் என்று ரோட் டோரம் உள்ள மண்ணை வெட்டி தங்கள் நிலத்தில் கொட்டி வருகின்றனர். சிலர் வேண்டுமென்றே ரோடும் தங்களுக்குச் சொந்தமானது என்று பிரச்னை செய்கின்றனர்.
அவர்கள் மண்ணை வெட்டி கடத்தும் போது வருவாய்த்துறை அதிகாரிகள் மவுனமாக இருந்து விடுகின்றனர். இதனால், ரோட்டோரத்தில் பெரும் பள்ளம் ஏற்படுகிறது. எதிரே வாகனங்கள் வந்தால் ஒதுங்க இடம் இல்லை. இதற்கு எந்த ரோடும் தப்பவில்லை.
குறிப்பாக கிராமப்புற ரோடுகள் தான் அதிகளவில் சுரண்டப்படுகின்றன. வாகன ஓட்டிகள் கொஞ்சம் அசந்தாலும் பள்ளத்தில் விழுந்து உயிரிழக்கும் அபாயம் உள்ளது.
அவ்வகையில், பொங்கலுார் ஒன்றியம், கோவில் செட்டிபாளையத்தில் இருந்து மஞ்சப்பூர் பிரிவு வரையிலான ரோடு சில நாட்கள் முன் தான் போடப்பட்டது. அந்த ரோடு ஈரம் காய்வதற்கு முன்பே ஆக்கிரமிப்பாளர்களின் பிடியில் இருந்து தப்பவில்லை.
இதேபோல, சேமலைக் கவுண்டம்பாளையம், அலகுமலை, பெரியாரியபட்டி, தங்காய்புதுார் உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் இதுபோல் விதிமீறல்கள் நடத்துள்ளன. சில இடங்களில் மட்டும் பெயரளவுக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இது ரோட்டில் பயணிக்கும் வாகன ஓட்டிகளின் உயிருடன் விளையாடுவதற்கு சமம். இது போன்ற விதிமீறல்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.