/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
எங்கெங்கும் ஒலித்த ஸ்ரீராம நாமம்! 'ராமா... ராமா' என்று ராம நாமம் சொன்ன பக்தர்கள்
/
எங்கெங்கும் ஒலித்த ஸ்ரீராம நாமம்! 'ராமா... ராமா' என்று ராம நாமம் சொன்ன பக்தர்கள்
எங்கெங்கும் ஒலித்த ஸ்ரீராம நாமம்! 'ராமா... ராமா' என்று ராம நாமம் சொன்ன பக்தர்கள்
எங்கெங்கும் ஒலித்த ஸ்ரீராம நாமம்! 'ராமா... ராமா' என்று ராம நாமம் சொன்ன பக்தர்கள்
UPDATED : ஜன 23, 2024 01:10 PM
ADDED : ஜன 23, 2024 01:29 AM

அயோத்தி ராம ஜென்ம பூமியில், ராமர் கோவில் அமைக்கப்பட்டு, பிராண பிரதிஷ்டை நேற்று கோலாகலமாக நடைபெற்றது. இதையொட்டி நாடு முழுவதும் அனைத்துப் பகுதிகளிலும், சிறப்பு வழிபாடுகள் நடந்தன. அவ்வகையில் திருப்பூர் மற்றும் சுற்று வட்டாரத்திலுள்ள கோவில்களிலும், அமைப்புகள் சார்பிலும், பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தன.
திருப்பூர், அவிநாசி ரோட்டில் உள்ள 'பிரைம் என்க்ளேவ்' வளாகத்தில் அங்கு குடியிருப்போர் வாசல் மற்றும் பாதையில் ரங்கோலி வரைந்தனர். ராம பஜனை பாடியவாறு, தீர்த்தக்குடம் மற்றும் ஜெய் ஸ்ரீராம் கொடிகளை ஏந்தியவாறு வளாகத்தில் மூன்று முறை பவனி வந்தனர்.
விநாயகர் சன்னதி முன், அலங்கரிக்கப்பட்ட ராமர் படம் மற்றும் சிலைகள் வைத்து சிறப்பு நைவேத்தியம் படைத்து வழிபாடு நடந்தது. ராம நாமம் உச்சரித்தும், பஜனை பாடல் பாடியும் வழிபாடு நடந்தது. மாலை 1008 விளக்கு தீபம் ஏற்றியும் வழிபாடு செய்தனர்.
ஸ்ரீகுருவாயூரப்பன் கோவில்
திருப்பூர், ஊத்துக்குளி ரோட்டில் உள்ள குருவாயூரப்பன் கோவில் வளாகத்தில் சிறப்பு அலங்காரம் மற்றும் வழிபாடு நடந்தது. வளாகத்தில் உள்ள ராமர் சிலைக்கு சிறப்பு அலங்காரம் செய்து, தீபமேற்றி வழிபாடு நடந்தது.
வரதராஜ பெருமாள் கோவில்
சாமளாபுரம் ஸ்ரீபூமா தேவி, நீளா தேவி உடனமர் வரதராஜபெருமாள் கோவிலில் நேற்று ராமர் கோவில் பிராண பிரதிஷ்டை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடந்தது. தீர்த்தக்குடம் எடுத்து ஊர்வலமாக ஜெய் ஸ்ரீராம் முழக்கத்துடன் ஏராளமானோர் வந்தனர். கோவில் வளாகத்தில், ராமர் குறித்த பாடல்களைப் பாடி நடனமாடினர்.
ஹிந்து மகா சபா
அகில பாரத ஹிந்து மகாசபா சார்பில் நேற்று ராமர் கோவில் பிராண பிரதிஷ்டை விழா திருப்பூரில் கொண்டாடப்பட்டது. மாநில இளைஞர் அணி செயலாளர் வல்லபை பாலா தலைமையில், திருப்பூர் வீரராகவ பெருமாள் கோவில், திருமுருகன்பூண்டி திருமுருகநாதசுவாமி கோவில் உட்பட பல்வேறு கோவில்களில் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. ஸ்ரீராம நாமம் பாராயணம் செய்தும், பாடல்கள் பாடியும் இந்த அமைப்பினர் பக்தர்களுடன் இணைந்து வழிபாடு நடத்தினர். விழாவையொட்டி, 5,001 பேருக்கு லட்டு, ஸ்ரீராமர் படம் மற்றும் பிரசாதம் வழங்கப்பட்டது.
பல்லடம்
திருப்பூர் வடக்கு மாவட்ட பா.ஜ., சார்பில், பனப்பாளையம் மாகாளியம்மன் கோவில் முன் நேரலை நிகழ்ச்சி டிஜிட்டல் திரையில் ஒளிபரப்பப்பட்டது.
பல்லடம், வடுகபாளையம், பஜனை கோவில் மடத்தில், ஸ்ரீசீதாராமர் பட்டாபிஷேக படத்தை வைத்து சிறப்பு பூஜை நடந்தது. ராம நாமத்தை உச்சரித்தபடி, பக்தர்கள் சிறப்பு வழிபாடு செய்தனர்.
அவிநாசி
அவிநாசியில் உள்ள ஸ்ரீ வீர ஆஞ்சநேயர் கோவில் முன் உள்ள திடலில் அவிநாசி மண்டல பா.ஜ., வினர் மாவட்ட துணைத் தலைவர் சண்முகம் தலைமையில், 1,008 தீபம் ஏற்றி வழிபடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், ஆர்.எஸ்.எஸ்., பெருங்கோட்ட செயலாளர் ஆர்ம்ஸ்ட்ராங் பழனிசாமி, நடிகர் ரஞ்சித் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு துவக்கி வைத்தனர்.
பா.ஜ., முன்னாள் மாவட்ட பொருளாளர் செல்வராஜ், முன்னாள் மாநில செயலாளர் பந்தல் முருகன், ஆர்.எஸ்.எஸ்., மாவட்ட பொறுப்பாளர் மோகன், பா.ஜ.,கோட்ட பொறுப்பாளர் பாலகுமார், நீலகிரி தொகுதி துணை பொறுப்பாளர் கதிர்வேலன், நகர தலைவர் தினேஷ்குமார், ஆன்மிகப் பிரிவு மாவட்ட தலைவர் சீனிவாசன், ஊடக பொறுப்பாளர் சந்துரு, ஹிந்து முன்னணி மாவட்ட செயலாளர் கேசவன் உட்பட பலர் பங்கேற்றனர்.
அதன்பின், செங்குந்தர் திருமண மண்டபத்தில், கும்பாபிேஷக நிகழ்ச்சிகளை பொதுமக்கள் பார்க்கும் வகையில், அகண்ட திரையில் ஒளிபரப்பு செய்யப்பட்டது. அனைவரும், 'ஜெய்ஸ்ரீராம்' என கோஷமிட்டவாறு, வழிபட்டனர்.
- நமது நிருபர் குழு -

