/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மாவட்ட ஊராட்சி கூட்டத்தில் வெடித்த 'மோதல்' செயலரை கண்டித்து தலைவர் வெளிநடப்பு
/
மாவட்ட ஊராட்சி கூட்டத்தில் வெடித்த 'மோதல்' செயலரை கண்டித்து தலைவர் வெளிநடப்பு
மாவட்ட ஊராட்சி கூட்டத்தில் வெடித்த 'மோதல்' செயலரை கண்டித்து தலைவர் வெளிநடப்பு
மாவட்ட ஊராட்சி கூட்டத்தில் வெடித்த 'மோதல்' செயலரை கண்டித்து தலைவர் வெளிநடப்பு
ADDED : பிப் 23, 2024 10:55 PM

திருப்பூர்:திருப்பூர் மாவட்ட ஊராட்சிக்குழு கூட்டத்தில், தலைவர் மற்றும் செயலர் இடையே ஏற்பட்ட 'மோதலால்' பரபரப்பு ஏற்பட்டது. செயலரை கண்டித்து, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் சத்தியபாமா வெளிநடப்பு செய்தார்.
திருப்பூர் மாவட்ட ஊராட்சிக்குழு கூட்டம் நேற்று நடந்தது. செயலர் முரளிகண்ணன், பேசத்துவங்கியதும், அவரது பேச்சை இடைமறித்து, தலைவர் சத்தியபாமா(அ.தி.மு.க.,), இருக்கையிலிருந்து எழுந்து நின்று, ஆவேசமாக பேசத்துவங்கினார்.
அவர் பேசியதாவது:
செயலர் தன்னிச்சையாக செயல்படுகிறார். அலுவலக பயன்பாட்டுக்கு பொருட்கள் வாங்குவது குறித்து எனக்கு தெரிவிப்பதில்லை; இதுகுறித்து கேட்டால், உங்களிடம் கேட்கவேண்டிய அவசியமில்லை என அலட்சியமாக பதிலளிக்கிறார்.
குறிப்பிட்ட பணிக்கு கூடுதல் நிதி தேவைப்பட்டால், ஒதுக்கீடு செய்ய செயலர் மறுக்கிறார். மாறாக, ஒரு வார்டுக்காக ஒதுக்கப்படும் நிதி, வேறு வார்டுக்கு பகிர்ந்தளிக்கப்படுகிறது. கவுன்சிலர்களுக்குள் நிதி கடன் கொடுத்து பெறும் சம்பவங்கள் நடக்கின்றன.
மாவட்ட திட்டக்குழு கூட்ட தேதி ஒத்திவைக்கப்பட்டது குறித்து, எனக்கு தெரிவிக்கவில்லை. கலெக்டரிடம் கையெழுத்து பெற்று, திட்டக்குழு உறுப்பினர்களுக்கு அனுப்பி வைத்துவிட்டார். மாவட்ட ஊராட்சி குழு தலைவராகிய எனக்கான அறையை, தனது தங்கும் இடமாக, செயலர் பயன்படுத்தி வருகிறார். கூட்ட தீர்மானம் தொடர்பான தகவல்கள் பத்திரிகைகளுக்கு தவறாக அளிக்கப்படுகிறது.
இவ்வாறு, சரமாரியாக ஊராட்சி செயலர் மீது குற்றஞ்சாட்டினார்.
இடையிடையே செயலர் பதிலளிக்க முற்பட்டபோதும், அதற்கு வாய்ப்பளிக்காமல் தலைவரே தொடர்ந்து குற்றச்சாட்டுகளை அடுக்கினார்.
'மாவட்ட ஊராட்சிக்குழுவின் நிர்வாக செயல்பாடுகள் சரியில்லை. இதை கண்டித்து, நான் வெளிநடப்பு செய்கிறேன்', என்று கூறியபடி, தலைவர் சத்தியபாமா அரங்கிலிருந்து வெளியேறிவிட்டார். அவரது அறையில் சென்று அமர்ந்தார்.
செயலர் முரளிக்கண்ணனுடன், தலைவர் சத்தியபாமா மற்றும் கவுன்சிலர்கள் தனியே பேச்சு நடத்தினர்.
'மாவட்ட ஊராட்சி குழுவுக்கு ஒத்துழைத்து, இணைந்து செயல்படுவதாக செயலர் தெரிவித்துள்ளார். எனவே, இன்றைய கூட்டம் தொடரும்' என்றார்.
இதையடுத்து, கூட்டம் மீண்டும் துவங்கி நடைபெற்றது. மாவட்ட ஊராட்சி குழு தலைவர் மற்றும் செயலர் இடையிலான வாக்குவாதத்தால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

