/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கொலு பொம்மைகள் விதவிதமா வந்தாச்சு!
/
கொலு பொம்மைகள் விதவிதமா வந்தாச்சு!
ADDED : செப் 18, 2025 12:25 AM

திருப்பூர்; திருப்பூர், காந்தி நகர் சர்வோதய சங்கத்தில், நவராத்திரி விழா கொண்டாட்டத்துக்காக, புதியதாக தயாரிக்கப்பட்ட கொலு பொம்மைகள், விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.
நவராத்திரி விழா என்பது, பார்வதி, லட்சுமி, சரஸ்வதி ஆகிய முப்பெரும் தேவியர்களையும் வழிபடும் விழா; தலா, மூன்று நாட்கள் வீதம், தேவியர்களை வீடுகளில், கொலு அமைத்து வழிபடுவது வழக்கம். ஏழு அல்லது ஒன்பது படிகள் அமைத்து, புழு பூச்சிகள், பறவைகள், மரங்கள், மனிதர்கள், தெய்வங்கள் என, வரிசையாக அடுக்கி வைத்து, ஒன்பது நாட்கள், நவராத்திரி விழா கொண்டாடப்படுகிறது.
பல்வேறு பொம்மைகள் அடிக்கி வைத்தாலும், ஒன்பதாவது படியில், பிரம்மா, விஷ்ணு, சிவன் சிலைகள், முப்பெரும் தேவியர் சிலைகளை நடுநாயகமாக வைத்து வழிபாடு நடத்த வேண்டும். புரட்டாசி மாத அமாவாசைக்கு அடுத்த நாள், நவராத்திரி கொலு துவங்குகிறது.
தினமும் மாலை நேரம் கொலு பொம்மைகளை மலர்களால் அலங்கரித்து, தினமும் ஒரு பதார்த்தம் செய்து நைவேத்தியம் செய்து, கூட்டு வழிபாடு நடத்தப்படுகிறது. படிப்படியாக உயர்ந்து தெய்வ நிலையை அடையலாம் என்ற தத்துவத்தை விளக்கும் வகையில், கொலு வழிபாடு நடத்தப்படுகிறது. நவராத்திரி கொலு, வீடுகள் தோறும் அமைக்கப்படுவதால், ஒவ்வொரு ஆண்டும், கொலு பொம்மை விற்பனை களைகட்டுகிறது. மதுரை உள்ளிட்ட பகுதிகளில் தயாரிக்கப்படும் மண்ணால் செய்த கொலு பொம்மைகள், சர்வோதய சங்கங்களில் விற்கப்படுகின்றன. சிறிய பொம்மைகள், 50 ரூபாய் துவங்கி, 2 ஆயிரம் ரூபாய் வரை விற்கப்படுகிறது.
22ல் நவராத்திரி விழா துவக்கம் வரும், 22ம் தேதி நவராத்திரி விழா துவங்குகிறது. கொலு வழிபாடு துவங்க நான்கு நாட்களே இருப்பதால், பொம்மைகள் விற்பனை வேகமெடுத்துள்ளது. சர்வோதய சங்கங்களில், விநாயகர், முருகர், அம்மன் சிலைகள், மும்பெரும் தேவியர் சிலைகள், மும்மூர்த்திகள், சிவலிங்கங்கள், காமதேணு, விஷ்ணுவின் தசாவதார பொம்மைகள், அஷ்டலட்சுமியர்.
வீடுகளில் நடக்கும் காதணி விழா, பூப்பு நன்னீராட்டு விழா, திருமண விழாவை குறிக்கும் பண்டிகை பொம்மைகள், விருந்து நடக்கும் பந்தி பொம்மைகள், குழந்தைகள் பொம்மைகள், கிருஷ்ணர் பொம்மைகள், சிவலிங்கத்தை பார்வதி தேவி பூஜிக்கும் பொம்மைகள் என, ஏராளமான பொம்மைகள் விற்பனைக்கு வந்துள்ளன.
நவராத்திரி விழாவை, பாரம்பரிய முறைப்படி கொண்டாடி மகிழ, தரமான கொலு பொம்மைகளை வாங்கி பயன்படுத்தலாம் என, சர்வோதய சங்கத்தினர் அழைப்பு விடுத்துள்ளனர்.

