/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அழிக்கப்படும் பசுமையான ஜம்புக்கல் மலை; கண்டுகொள்ளாத அதிகாரிகள்
/
அழிக்கப்படும் பசுமையான ஜம்புக்கல் மலை; கண்டுகொள்ளாத அதிகாரிகள்
அழிக்கப்படும் பசுமையான ஜம்புக்கல் மலை; கண்டுகொள்ளாத அதிகாரிகள்
அழிக்கப்படும் பசுமையான ஜம்புக்கல் மலை; கண்டுகொள்ளாத அதிகாரிகள்
ADDED : மார் 26, 2025 06:47 AM

உடுமலை : உடுமலை அருகே, ஜம்புக்கல் மலையை சட்ட விரோதமாக ஆக்கிரமித்துள்ளதோடு, விவசாயிகளை நுழைய விடாமல் தடுத்து வருவது குறித்து, 5 ஆண்டுகளாக அதிகாரிகள் அலட்சியம் காட்டி வருவதாக, விவசாயிகள் ஆவேசமாக பேசினர்.
திருப்பூர் மாவட்டம், உடுமலை அருகே, ஆண்டியகவுண்டனுார், எலையமுத்துார் உள்ளிட்ட கிராமங்களில், 2,500 ஹெக்டேர் பரப்பளவில் ஜம்புக்கல் மலைத்தொடர் அமைந்துள்ளது. பசுமையாக மலையாகவும், அமராவதி ஆற்றின் முக்கிய நீர்ப்பிடிப்பு பகுதியாகவும் உள்ளது.
இந்த மலையில் சமதளப்பரப்பில், சிறு விவசாயம், ஆடு மாடு மேய்த்துக்கொள்ள, 350 விவசாயிகளுக்கு, நிலத்தை தோண்டக்கூடாது, மரங்களை வெட்டக்கூடாது, நீர் வழித்தடங்களை அழிக்கக்கூடாது உள்ளிட்ட விதிமுறைகளுடன் 'கண்டிசன் பட்டா' வழங்கப்பட்டது.
மீதம் உள்ள மலைப்பகுதி வருவாய்த்துறை மற்றும் வனத்துறை வசம் இருந்தது. கடந்த, 5 ஆண்டுக்கு முன், சட்ட விரோதமாகவும், போலி ஆவணங்கள் தயாரித்து, அரசு வழங்கிய பட்டாவை விற்க முடியாது என்ற விதி உள்ளதையும் மீறி, போலி ஆவணங்கள் வாயிலாக ஆக்கிரமித்துள்ளார்.
உரிமையாளர்கள் இருக்கும் போது, அவர்கள் பெயரில் போலி ஆவணம் தயாரித்தும், இறந்தவர்கள் உயிருடன் வந்தது, என முறைகேடாக ஆவணங்கள் தயாரித்தும், அரசு, வனத்துறை நிலம் என ஒட்டுமொத்த மலையையும் அழித்து, மரங்களை வெட்டியும், நீர் நிலைகளை சிதைத்தும் ஆக்கிரமித்துள்ளார்.
அரசுத்துறைகள், விவசாயிகளுக்கு சொந்தமான நிலத்தை மீட்கவும், மேற்கு தொடர்ச்சி மலையின் ஒரு பகுதியாக உள்ளதால், பாதுகாக்கவும் வேண்டும் என, விவசாயிகள், பசுமை ஆர்வலர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். பல்வேறு போராட்டங்கள் நடத்தியும், அரசுத்துறை அதிகாரிகள், போலீசார் ஆக்கிரமிப்பாளருக்கு சாதகமாக நடந்து கொள்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்நிலையில், நேற்று உடுமலையில் நடந்த கோட்ட அளவிலான விவசாயிகள் குறை தீர் கூட்டத்தில், கோட்டாட்சியர் குமாரை முற்றுகையிட்டு, விவசாயிகள் பேசியதாவது: பட்டா உள்ள விவசாயிகளை நுழைய விடாமல் கேட் அமைத்துள்ளதோடு, நிலங்களை ஆக்கிரமித்துள்ளார். அரசுக்கு சொந்தமான மலை, அதற்கான ஆவணங்கள், வரைபடம் மற்றும் விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட பட்டா, போலி ஆவணங்கள் பதிவு குறித்து உரிய ஆதாரங்களுடன் புகார் கொடுத்தும், பல அதிகாரிகள் மாறியும், 5 ஆண்டுகளாக ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.
தற்போது, மீண்டும் மரங்கள் வெட்டவும், கனிமங்கள் வெட்டி எடுக்கவும் அனுமதி வழங்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். எனவே, தமிழக முதல்வர் இதில் கவனம் செலுத்துவதோடு, உயர் அதிகாரிகளை கொண்ட குழு அமைத்து, விரிவான விசாரணை செய்ய வேண்டும். சட்ட விரோத ஆக்கிரமிப்பை அகற்றவும், துணை போன அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவும், பசுமையான ஜம்புக்கல் மலையை காப்பாற்றவும் வேண்டும். இவ்வாறு, தெரிவித்தனர்.