/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தடுப்பணையாக மாறும் சுரங்கப்பாலம் வாகன ஓட்டுநர்கள் வேதனை
/
தடுப்பணையாக மாறும் சுரங்கப்பாலம் வாகன ஓட்டுநர்கள் வேதனை
தடுப்பணையாக மாறும் சுரங்கப்பாலம் வாகன ஓட்டுநர்கள் வேதனை
தடுப்பணையாக மாறும் சுரங்கப்பாலம் வாகன ஓட்டுநர்கள் வேதனை
ADDED : ஜன 24, 2024 12:22 AM

உடுமலை;கிராம இணைப்பு ரோட்டிலுள்ள, சுரங்கப்பாலத்தில், தண்ணீர் தேங்குவதால், பல கி.மீ., துாரம் சுற்றி பயணிக்கும் நிலைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என, மருள்பட்டி பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
கோவை - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில், பெரியகோட்டை பிரிவில் இருந்து பிரிந்து மருள்பட்டி செல்லும் கிராம இணைப்பு ரோட்டை, நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகன ஓட்டுநர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை, உடுமலைக்கு எடுத்து வரவும், இந்த ரோடே பயன்பட்டு வருகிறது. இந்த ரோட்டில், அகல ரயில்பாதை குறுக்கிடும் இடத்தில், சுரங்கப்பாலம் கட்டப்பட்டது.
மழைக்காலங்களில், இந்த பாலத்தில், பல அடி உயரத்துக்கு தண்ணீர் தேங்குகிறது. இதனால், எந்த வாகனங்களும் அவ்வழியாக செல்ல முடிவதில்லை.
எனவே அப்பகுதி மக்கள், கொழுமம் ரோடு சென்று பல கி.மீ., துாரம் சுற்றி, மீண்டும் தேசிய நெடுஞ்சாலைக்கு வர வேண்டியுள்ளது. காலை, மாலை நேரங்களில், பள்ளி, கல்லுாரிக்கு செல்லும், மாணவ, மாணவியர் அவ்வழியாக செல்ல முடியாமல் பாதிக்கின்றனர். முன்பு, சுரங்கப்பாலத்தில், தேங்கும் தண்ணீரை, மோட்டார் வைத்து வெளியேற்றி வந்தனர். தற்போது இந்த நடைமுறை பின்பற்றப்படுவதில்லை.
தேங்கி நிற்கும் தண்ணீர் அளவு குறித்து தெரியாமல், அவ்வழியாக செல்ல முயற்சிக்கும் வாகன ஓட்டுநர்கள், நிலைதடுமாறி விபத்துக்குள்ளாகி வருகின்றனர்.
எனவே, சம்பந்தப்பட்ட உள்ளாட்சி நிர்வாகம் மற்றும் ரயில்வேத்துறையினர் இணைந்து சுரங்க பாலத்தில், தண்ணீர் தேங்கும் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

