/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சர்வே குளறுபடியால் மாயமாகும் கிராமம் கலெக்டரிடம் மக்கள் வலியுறுத்தல்
/
சர்வே குளறுபடியால் மாயமாகும் கிராமம் கலெக்டரிடம் மக்கள் வலியுறுத்தல்
சர்வே குளறுபடியால் மாயமாகும் கிராமம் கலெக்டரிடம் மக்கள் வலியுறுத்தல்
சர்வே குளறுபடியால் மாயமாகும் கிராமம் கலெக்டரிடம் மக்கள் வலியுறுத்தல்
ADDED : பிப் 01, 2024 11:48 PM
உடுமலை;புதிய சர்வே எண் மேம்படுத்தப்படாமல், பத்திரப்பதிவு செய்வதில் நீடிக்கும் தடைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என, அடிவள்ளி கிராம மக்கள் திருப்பூர் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.
கோமங்கலம் சார்பதிவாளர் அலுவலகத்துக்குட்பட்ட கிராமங்கள் புதுப்பாளையம் மற்றும் அடிவள்ளி. கடந்த, 2019ல், இருந்து இக்கிராமங்களிலுள்ள வீட்டு மனைகள் கோமங்கலம் சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யப்படுவதில்லை.
இந்நிலையில், திருப்பூர் கலெக்டரை நேற்று முன்தினம் அடிவள்ளி கிராம மக்கள் சந்தித்தனர். அவரிடம் அக்கிராம மக்கள் கொடுத்த மனுவை அளித்தனர்.
அம்மனுவில் கூறியிருப்பதாவது:
குடிமங்கலம் ஒன்றியம் புதுப்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட புதுப்பாளையம், அடிவள்ளி கிராமங்களில், 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறோம். இந்த இரு கிராமங்களிலும், ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீட்டு மனைகள் உள்ளன.
கடந்த, 1897ம் ஆண்டில் இருந்து, எங்கள் கிராமத்தில், வீட்டு மனைகள் பத்திரப்பதிவு செய்து, வருவாய்த்துறையிடம் பட்டா பெறப்பட்டு வந்தது. கடந்த, 2019ல் இருந்து, எங்கள் கிராம வீட்டு மனைகள் விற்பனைக்காக பத்திரப்பதிவு செய்யப்படுவதில்லை.
இது குறித்து மனு கொடுத்தபோது, ஆரம்ப காலம் முதல், நத்தம் புல எண், '114/ஏ1ஏ' என்ற பிரிவை பயன்படுத்தி பதிவு நடந்து வந்தது. புதிய சர்வேயின் போது, கிராம குளத்தின் புல எண்ணுடன், கிராமத்திலுள்ள இதர பகுதிகள் சேர்க்கப்பட்டு விட்டது.
புதிய சர்வே எண்கள் பத்திர பதிவு துறை ஆவணங்களில் 'அப்டேட்' செய்யப்படவில்லை. பழைய புல எண் அடிப்படையில், கிராமம் முழுவதும் குளம் என தவறுதலாக பதிவாகி விட்டது.
இதே நிலை புதுப்பாளையம் கிராமத்திலும் தொடர்கிறது. இதனால், சொத்து பரிமாற்றம், பாகப்பிரிவினை மற்றும் வீடு கட்ட வங்கிக்கடன் பெற முடியவில்லை.
மத்திய, மாநில அரசுகளின் மானியத்திட்டத்திலும் வீடுகள் கட்ட முடியாமல், மக்கள் தவித்து வருகின்றனர். நாங்கள் எந்த பணிகளையும் செய்ய முடியாமல், மிகுந்த சிரமத்திற்கும், மன உளைச்சலுக்கும் ஆளாகியுள்ளோம்.
எனவே, திருப்பூர் மாவட்ட நிர்வாகத்தினர், இப்பிரச்னைக்கு தீர்வு ஏற்படுத்தி, பத்திரப்பதிவு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன் வாயிலாக, எங்களுக்கு மனநிம்மதி ஏற்படும். இதற்கு ஆவண செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு, மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசும், இப்பிரச்னையில் தலையிட்டு ஒரு நிரந்தர தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என, குடிமங்கலம் ஒன்றியம் புதுப்பாளையம், அடிவள்ளி கிராம மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

