/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பொறுத்திருந்து... ஒரு பிரயோஜனமும் இல்லை
/
பொறுத்திருந்து... ஒரு பிரயோஜனமும் இல்லை
ADDED : ஜன 09, 2024 11:12 PM

திருப்பூர்;'ஆட்சி அமைத்து ஆயிரம் நாள் கடந்து விட்டது. இப்போது கேட்டால், பொங்கல் கடந்த பின் பேசி கொள்ளலாம்; பொறுத்திருங்கள்,' என்கிறீர்கள். முதல்வர் இப்படி செய்யலாமா என, திருப்பூரில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் கேள்வி எழுப்பினர்.
'போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கையை பேசி முடிக்க வேண்டும், காலிப்பணியிடங்களை நிரப்பி, முழுமையாக பஸ்களை இயக்க வேண்டும்,' என்பது உட்பட பல கோரிக்கையை வலியுறுத்தி, அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பினர், ஓய்வு பெற்ற நல அமைப்புகளின் கூட்டமைப்பு சார்பில், திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் முன் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஓய்வு பெற்ற நல அமைப்பின் மாநில பொது செயலாளர் செல்வராஜ் பேசுகையில், ''ஆட்சிக்கு வரும் போது பிரச்னை தீர்க்கப்படும் என்றனர். நுாறு நாள் கடந்து பேசிக்கொள்ளலாம் என்றனர்.
தற்போது, ஆயிரம் நாட்கள் கடந்து விட்டது. இப்போது கேட்டால், பொங்கல் வரை பொறுத்திருங்கள் என்கின்றனர். முதல்வர் இப்படி செய்யலாமா? பொறுத்திருந்து.. பொறுத்திருந்தது பலர் ஓய்வே பெற்று விட்டனர்,'' என்றார்.
ஆர்ப்பாட்டத்துக்கு, ஏ.டி.பி., மண்டல பொருளாளர் பொன்னுசாமி தலைமை வகித்தார். கோரிக்கையை வலியுறுத்தி, செல்லத்துரை, உன்னிகிருஷ்ணன் (சி.ஐ.டி.யு.,), இன்பசேகரன் (டி.டி.எஸ்.எப்.,), மாதவன் (பி.எம்.எஸ்.,) மற்றும் தொழிற்சங்க கூட்டமைப்பினர் பலர் பங்கேற்று கோஷம் எழுப்பினர்.

