/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மருத்துவ காப்பீடு அட்டையில் எது அசல்? குழப்பத்தில் மக்கள்: அதிகாரிகள் விளக்கம்
/
மருத்துவ காப்பீடு அட்டையில் எது அசல்? குழப்பத்தில் மக்கள்: அதிகாரிகள் விளக்கம்
மருத்துவ காப்பீடு அட்டையில் எது அசல்? குழப்பத்தில் மக்கள்: அதிகாரிகள் விளக்கம்
மருத்துவ காப்பீடு அட்டையில் எது அசல்? குழப்பத்தில் மக்கள்: அதிகாரிகள் விளக்கம்
ADDED : ஜன 21, 2024 12:31 AM

பல்லடம்;பல்லடம் வட்டாரத்தில் வினியோகிக்கப்பட்டு வரும் மருத்துவ காப்பீடு அட்டையில், எது அசல், போலி என்று தெரியாமல் பொதுமக்கள் குழப்பம் அடைந்து வருகின்றனர்.
நாடு முழுவதும் உள்ள ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில், மத்திய அரசு, 'பிரதம மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா' எனும் மருத்துவ காப்பீடு திட்டத்தை, கடந்த, 2018ம் ஆண்டு முதல் செயல்படுத்தி வருகிறது.
இத்திட்டத்தின் மூலம், 5 லட்சம் ரூபாய் வரையிலான மருத்துவ வசதிகளை பொதுமக்கள் பெற முடியும். பொதுமக்கள் இத்திட்டத்தில் இணைந்து பயன் பெறுவதற்காக, பல்வேறு இடங்களில் முகாம்கள் நடத்தப்படுகின்றன. இவ்வாறு, திருப்பூர் மாவட்டத்தில் நடத்தப்பட்டு வரும் முகாம்கள், பொதுமக்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறது.
இது குறித்து பல்லடம் வட்டார பொதுமக்கள் கூறியதாவது:
கடந்த சில தினங்களுக்கு முன், ஊராட்சிகள் தோறும் மருத்துவ காப்பீடு முகாம் நடத்தப்பட்டு, விண்ணப்பங்கள் பெறப்பட்டன. சில நாட்களுக்கு பின் காப்பீடு அட்டையும் கிடைத்தது. தற்போது, ஆரம்ப சுகாதார நிலையங்களில் முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
நாங்கள் வழங்குவது தான் அசல் மருத்துவ காப்பீடு அட்டை. நீங்கள் ஏற்கனவே பெற்றுள்ளது போலியானது என்று கூறி, மீண்டும் பணம் கட்டி விண்ணப்பிக்குமாறு அழைக்கின்றனர். ஏற்கனவே, விண்ணப்பித்து பெற்ற காப்பீடு அட்டை ஒன்றுக்கு, 150 ரூபாய் வீதம், 450 ரூபாய்க்கு மேல் குடும்பத்துக்காக செலவு செய்துள்ளோம். இதில், எது உண்மையான காப்பீடு அட்டை என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இது தொடர்பாக திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள காப்பீடு பிரிவு அலுவலகத்தில் கேட்டதற்கு, 'காப்பீடு திட்டத்தில் விண்ணப்பித்து அட்டை எடுத்து தருவதற்காக பல்வேறு தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதில், அசல், போலி என்று கிடையாது. யார் வேண்டுமானாலும் ஆன்லைனில் சென்றும் விண்ணப்பித்துக் கொள்ளலாம்,' என்றனர்.
ஏற்கனவே, வழங்கப்பட்ட காப்பீடு அட்டை போலி என்றும், தற்போது விண்ணப்பிப்பது தான் அசல் அட்டை என்றும் கூறப்படுவதால் மக்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டு வருகிறது.
எனவே, காப்பீடு திட்டத்துக்காக நடத்தப்படும் முகாம்களை முறைப்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

